

பிரான்ஸின் தலைசிறந்த படைப்பாளியும் தத்துவமேதையுமான ழான் பால் சாத்ரா பிறந்த தினம் இன்று (ஜூன் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1905) பிறந்தார். கடற்படை அதிகாரியான தந்தை, குழந்தைக்கு 2 வயதாக இருந்தபோது இறந்தார். இதன்பிறகு, மெடான் நகரில் தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். ஜெர்மன் மொழி ஆசிரியரான தாத்தா, தன் பேரனுக்கு சிறு வயதிலேயே கணிதம், பாரம்பரிய இலக்கியம் கற்றுத் தந்தார்.
* வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்றார். சம வயது குழந்தைகளோடு பழக, விளையாட வாய்ப்பு கிடைக்காததால், படிப்பதும் எழுதுவதுமே இவரது முழுநேர வேலையாக இருந்தது. ‘புத்தகங்கள் மூலம்தான் இந்த பிரபஞ்சத்தைப் பார்த்தேன்’ என்று கூறியுள்ளார்.
* தாய் மறுமணம் செய்துகொண்டதால், குடும்பம் லா ரோஷல் நகருக்கு குடிபெயர்ந்தது. 1924-ல் பாரீஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம், வரலாறு, உளவியல், இயற்பியல் கற்றார். இளங்கலைப் பட்டம் பெற்றார்.
* முதுகலைப் பட்டப் படிப்பின்போது, ஆய்வுக் கட்டுரை எழுதினார். தத்துவம் குறித்த கூட்டங்கள், பயிலரங்குகளில் தவறாமல் கலந்துகொள்வார். முதல் உலகப்போரின்போது, பிரான்ஸ் ராணுவத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
* 20-ம் நூற்றாண்டின் செல்வாக்கு படைத்த பிரெஞ்ச் நாவல் எனப் புகழப்பட்ட ‘லா நூஸியா’ என்ற தனது முதல் நாவலை எழுதினார். பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
* பெர்லினில் உள்ள கல்வி நிறுவனத்தில் 1933-ல் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். அங்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டு, கற்பனை, சுய உணர்வு, உணர்ச்சிகள் குறித்து பல கட்டுரைகளை எழுதினார். ‘தி வால்’ என்ற இவரது சிறுகதைகள் தொகுப்பின் முதல் தொகுதி 1939-ல் வெளியானது.
* பாரீஸ் திரும்பிய இவருக்கு 2-ம் உலகப்போரில் ராணுவத்தில் சேர அழைப்பு வந்தது. ஜெர்மன் படையால் பிடிக்கப்பட்டு, 9 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் பாரீஸ் வந்து ஆசிரியப் பணி, எழுத்துப் பணியில் ஈடுபட்டார். உலகப் புகழ்பெற்ற பல நூல்களை எழுதினார். பிறகு, ஆசிரியத் தொழிலைத் துறந்து முழுமூச்சாக எழுதுவதில் கவனம் செலுத்தினார்.
* சமூகத்தில் பொதுவாக எழும் முக்கிய கேள்விகளுக்கு பதில் கூறும் விதத்தில் படைப்புகள் அமைய வேண்டும் என்பார். படைப்பாளிகள், அறிவுஜீவிகளுக்கு இதில் தார்மீக கடமை இருக்கிறது என்பார். எது சரி, எது தவறு என்று எடுத்துக்கூறும் வழிகாட்டியாக இவரது படைப்புகள் விளங்கின. சமூகவியல், விமர்சனக் கோட்பாடு, இலக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட பல துறைகளில் இவரது படைப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தின.
* இலக்கியம், அரசியல் பிரச்சினைகள், இருத்தலியல், மனிதநேயம் குறித்து 1950-களில் ஏராளமான நூல்களை எழுதினார். பல நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதினார். 1964-ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார்.
* தத்துவமேதை, நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர், அரசியல்வாதி, இலக்கியத் திறனாய்வாளர் என பன்முகத் திறன் கொண்ட ழான் பால் சாத்ரே 75-வது வயதில் (1980) மறைந்தார்.