Last Updated : 12 Sep, 2016 03:07 PM

 

Published : 12 Sep 2016 03:07 PM
Last Updated : 12 Sep 2016 03:07 PM

யூடியூப் பகிர்வு: விடாமுயற்சியின் வெற்றியை சொல்லும் குறும்படம்

முயற்சி கைகூடுவதில் ஏற்படும் சிக்கல்களும் தாமதங்களும் கண்டு துவண்டுவிட வேண்டாம் என்கிறது 'பெரிதினும் பெரிதுகேள்' குறும்படம்.

ஃபேஸ்புக் தகவல்கள் சிலநேரங்களில் வாழ்வையே கூட மாற்றும் என்று நண்பனுக்கு சத்யா எழுதும் கடிதத்தோடு தொடங்குகிறது குறும்படம். சில மாதங்களுக்கு முன் பின்னோக்கிச் செல்கின்றன காட்சிகள். குறும்படப் போட்டி நடக்க உள்ளதாகவும் தேர்வாகும் படங்கள் தியேட்டரில் திரையிடப்படும் எனவும் முகநூலில் சத்யாவின் நண்பர் ஆரீஃப் கான் தகவலைக் கண்டு அவன் கண்கள் விரிகின்றன. ஒரு லட்சமாவது பணம்வேண்டுமே... என்ன செய்ய? வாட்ஸ் அப், ஃபேஸ்புக், தொலைபேசி என யார்யாரிடமோ பேசிப் பார்க்கிறான். பயனில்லை.

''பேங்க் பேலன்ஸ் ஒரு லட்ச ரூபாய் இருக்கும்போது கனவு காணலாம். இப்போதைக்கு கனவுகண்டு கம்மாயில விழுந்திராதே'' என்று அப்பாவும் அறிவுரை சொல்லி அல்வா கொடுத்துவிடுகிறார். ஏமாற்றம் வலியைத் தர, முயற்சிகள் நிறைவேறும் விதத்தைக் கூறி இயக்குநர் ஜாஃபர் சாதிக் சிற்சில காட்சிகளிலே நம்மை வளைத்துப் போட்டுவிடுகிறார்.

வேலைநிமித்தமாக மஸ்கட்டில் இருக்கும் ஒருவன் 500 ரியால், நம்மூர் பணம் ஒரு லட்ச ரூபாய் கூட சேமித்துவைக்க முடியாத சூழலில் பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் பணம் கேட்பது துயர் மிகுந்தது.

அப்பா அம்மாவிடமும் மடிக்கணினி, ஸ்மார்ட்போன் வழியாகவும் ஸ்கைப் உரையாடல் நிகழ்த்துவது இன்றுள்ள வாய்ப்புவசதிகளை மிகச்சரியாக கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியது. மதங்களைக் கடந்து நீளும் நட்புக்கரங்களின் நேசம் படத்தை ஃபீல் குட் மூவிக்கு கொண்டுசெல்கிறது. இவர்களின் முயற்சியை நீங்களும் பாருங்களேன்.