

ஆஸ்திரிய கணித, தத்துவ மேதை
ஆஸ்திரியாவைச் சேர்ந்த கணித அறிஞர், தத்துவமேதையான கர்ட் பிரெட்ரிக் காடெல் (Kurt Friedrich Godel) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* செக் குடியரசின் புருனோ நகரில் (1906) பிறந்தார். தந்தை சாதாரண ஊழியர் நிலையில் இருந்து படிப்படியாக ஜவுளித் தொழிற்சாலையின் பங்குதாரராக உயர்ந்தவர். காடெல், சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். பல்வேறு மொழிகள், வரலாறு பயின்றார்.
* இவர் குழந்தையாக இருக்கும்போது, ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருந் ததால், குடும்பத்தினர் அனைவரும் ‘மிஸ்டர் ஒய்’ என்று பட்டப் பெய ரிட்டு அழைத்தனர். கணிதம், தத்துவம் பயின்றார். 16 வயதிலேயே பல்கலைக்கழக அளவிலான கணிதங்களைப் போட ஆரம்பித்தார்.
* இரண்டே ஆண்டுகளில் அவற்றில் நிபுணத்துவம் பெற்று பட்டம் பெற்றார். வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவர், கோட்பாட்டு இயற்பியலை முதன்மைப் பாடமாகப் பயின்றார். சிறந்த கணிதவியலாளர்களுடன் ஏற்பட்ட தொடர்பால், தன் கவனத்தை கணிதம் பக்கம் திருப்பினார்.
* தத்துவ வரலாறும் பயின்றார். முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து, முனைவர் பட்டம் பெற்றார். செக் குடிமகனாக இருந்தவர், ஆஸ்திரியக் குடியுரிமை பெற்றார். தொடர்ந்து, இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ஏராளமான கணிதத் தீர்வுகளுக்கான ஆதாரங்கள், பல்வேறு கோட்பாடுகள், இவற்றை நிரூபிக்க உதவும் பல நுட்பங்கள் இடம்பெற்றிருந்தன.
* குறிப்பாக இரு முற்றுப்பெறாமை தேற்றங்கள் (The Incompleteness Theorem) இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தன. 1932-ல் வியன்னா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் நகரில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராக நியமனம் பெற்றார்.
* அங்கு இவர் நிகழ்த்திய விரிவுரையை இளம் அமெரிக்க கணிதவியலாளர் ஒருவர் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். இருவரது நட்பும் வாழ்நாள் முழுவதும் நீடித்தது. 1937-ல் ஆஸ்திரியாவை ஜெர்மனி கைப்பற்றியது. பல யூத அறிஞர்களுடன் நெருக்கமாகப் பழகியது, இவருக்கு எதிராக மாறி இவரது வேலை பறிபோனது.
* 1939-ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு ஆஸ்திரியாவில் இருக்க விரும்பாமல் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். பெரிதாக வேலை எதுவும் இல்லாததால் கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ‘கணங்கள்’ குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். வரையறுக்கப்பட்ட வகைக் கோட்பாடு குறித்தும் ஆராய்ந்து குறிப்புகளை எழுதிவைத்தார்.
* கணித தத்துவம், பொதுவான தத்துவங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார். தனது முதல் தத்துவ ஆய்வுக் கட்டுரையை 1944-ல் வெளியிட்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் அரசியல், தத்துவம், இயற்பியல் குறித்து உரையாடி வந்தார். தத்துவம், தர்க்கம், கணிதம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகளை வெளியிட்டார்.
* சிறந்த தர்க்கவியலாளராகவும் புகழ்பெற்றார். 1947-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். பேராசிரியராக நியமனம் பெற்றார். இவர் வெளியிட்ட கட்டுரைகளைவிட, வெளியிடாத கட்டுரைகள் அதிகம். அவர் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதன் வாயிலாக இவை வெளியுலகுக்கு தெரியவந்தன.
* அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், ராயல் சொசைட்டியின் வெளிநாட்டு உறுப்பினர், முதலாவது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது ஆகிய விருதுகள், கவுரவங்களையும் பெற்றார். அரிஸ்டாட்டில், ஆல்பர்ட் டார்ஸ்கி ஆகியோருக்கு இணையான தலைசிறந்த தர்க்கவியலாளராகக் கருதப்பட்ட கர்ட் பிரெட்ரிக் காடெல் 72-வது வயதில் (1978) மறைந்தார்.