Last Updated : 17 Mar, 2017 09:07 AM

 

Published : 17 Mar 2017 09:07 AM
Last Updated : 17 Mar 2017 09:07 AM

இணைய களம்: திராவிட ஆட்சிகள் சாதித்தது என்ன?

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து 2010-ல் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் ஓய்வுபெற்றார். அவர்தான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முதல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. அதற்குப் பிறகு, இன்று வரை எந்த ஒரு பட்டியல் சமூகத்திலிருந்தும் எவரொருவரும் நீதிபதியாக உச்ச நீதிமன்றத்துக்குள் நுழைய முடியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த 70 ஆண்டுகளில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த பட்டியல் சமூகத்தினரின் எண்ணிக்கை வெறும் நான்குதான்! (பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையும் சொற்பமே)

2011-ல், பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம், நீதித் துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

2011-ல், இந்தியாவெங்கும் 21 உயர் நீதிமன்றங்களில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 850. அதில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 24 மட்டுமே. அதாவது, வெறும் 2.8 % தான். அதிலும் 14 உயர் நீதிமன்றங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர்கூட நீதிபதியாக இல்லை. உச்ச நீதிமன்றத்திலும் கிடையாது. இன்றும் கிட்டத்தட்ட அதே நிலைதான். இந்தப் பின்னணியைக் கொண்டுபார்த்தால்தான் தமிழ்நாட்டின் நிலைமை நமக்கு விளங்கும்.

இங்கே சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகளை மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்படும் விதிமுறை இருந்த காலகட்டத்தில், ஒரே சமயத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் வரை நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். இது பட்டியல் இனத்தவர்களுக்கான இடஒதுக்கீடான 18%-ஐ விட அதிகம். இந்தியாவிலேயே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முதல் உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழகத்தில்தான் 1973-ல் நியமிக்கப்பட்டார். அதாவது, 44 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாரின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் கருணாநிதி பரிந்துரைத்ததால் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்துக்குள் சென்ற முதல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியும் அவர்தான்.

உண்மையில், அம்பேத்கர் அரசியல் சட்டத்தை இயற்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துவிட்டது. நீதித் துறையில் இடஒதுக்கீடு சட்டப்படி இல்லையென்றாலும், அதில் கூடியமட்டும் சமூகநீதியை நிலைநாட்டிய இயக்கம் திராவிடர் இயக்கம், நிலைநாட்டிய ஆட்சி திராவிடர் ஆட்சி என்பதை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது!

கிராம நிர்வாக அலுவலர் (VAO) என்கிற பதவியை ஏற்படுத்தி, அதைத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் கொண்டுவந்தது எம்.ஜி.ஆர். ஆட்சி. அதாவது, ஒவ்வொரு கிராமத்திலும் முனிசிஃப் அல்லது கர்ணம் என்கிற பதவியை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஏதோ ஒரு குடும்பமே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்த பதவி அது. இன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவருகிறார்கள். பல மாநிலங்களிலும் சாத்தியப்படாத சாதனை இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x