Published : 18 Mar 2014 07:35 PM
Last Updated : 18 Mar 2014 07:35 PM

குழந்தையின் பொய்யும் வேட்டையாடப்பட்ட ஆசிரியரின் வாழ்வும்!

சென்னை பிலிம் பெஸ்டிவலில் இரண்டு முறை திரையிடப்பட்ட டென்மார்க் படம் 'தி ஹன்ட்' (எ) 'ஜாக்டென்'. கோல்டன் க்ளோப், சிறந்த உலக சினிமாப் பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் இது. கேன்ஸ் உட்பட பல சர்வதேச விழாக்களில் பாராட்டுக்களை அள்ளிக் குவித்த படமும் இது. படம் பார்க்கும் முன் இப்படம் பெற்ற விருதுகளின் பட்டியலை அறியாமலே பார்க்கத் துவங்கினேன்.

உடலை உறைய வைக்கும் குளிர், அதிகாலையில் ஓடையருகில் கூட்டமாக ஓடி வரும் நடுத்தர வயது நண்பர்கள் கூட்டம், முதலில் குதிப்பவனுக்கு பன்னிரெண்டாயிரம் என்ற சவாலிடப்பட தொபீர் என்று குளத்திற்குள் விழுகிறார் ஒருவர். நிர்வாணமாக விழுந்த இவர் நீரில் உறைய உடன் வந்த நண்பர் லூகாஸ் ஓடையில் குதித்து தன் நண்பரை கரை ஏற்றுகிறார். சில நேரம் கழித்து அவ்விடத்திலிருந்து ஜோராக கத்தி கோஷமிட்டு இந்நண்பர்கள் கூட்டம் விடைபெறுகின்றனர். பொன் மாலைப் பொழுதில் படர்ந்த பனியில் ‘ஜாக்டென்’ என்று படத்தின் தலைப்பு போடப்படுகிறது.

மரங்கள் செழித்துக் கிடக்கும் சாலையில் வேலிக்குப் பின்புறம் நின்று ஆள்நடமாட்டத்தை கண்காணித்து வரும் சிறுவன், இவன் பின்னே இன்னும் சில சிறுவர்கள். அந்த சாலையின் ஓரத்தில் ஒற்றையாக நடந்து வந்துகொண்டிருக்கிறார் லூகாஸ். பதுங்கிக் கிடந்த சிறுவர்கள் எல்லாம் கும்பலாக லூகாஸ் மீது பாய்ந்து அவரை தரையில் வீழ்த்தி பின் கட்டிப்பிடித்து விளையாடி கொஞ்சுகின்றனர். லூகாஸ் அந்த சிறுவர்களின் செல்லமான வாத்தியார்.

தன் மனைவியுடனான மணவாழ்க்கை விவாகரத்தால் சிதைந்த போக, தன் மகனின் பிரிவால் லூகாஸ் வாடுகிறார். தனித்து வாழும் இவருக்கு சந்தோஷம் அளிப்பது இவர் பார்க்கின்ற டீச்சர் வேலையும், இவர் வீட்டு செல்ல நாய் ஃபெனியும் தான். இவர்கள் வாழும் பகுதி ஒரு சிறிய பகுதி. இங்கு எல்லோருக்கும், எல்லோரையும் தெரியும். அவ்விடத்தில் லூகாசிற்கு தோழர்கள் அதிகம். தன் தோழனின் மகளாகிய சிறுமி கிளாரா மீது லூகாஸ் அன்பு செலுத்துகிறார். எப்போதும் போல் இவர் வேலை அமைதியாக மன நிறைவுடன் செல்கிறது.

கிளாராவின் வீட்டில் எப்போதும் சண்டை, அவளின் அண்ணனின் தோழர்கள் வேறு ஆபாச வீடியோக்களை காட்டி அவள் மனதை சிதைக்கின்றனர். தன் வீட்டில் கிடைக்காத அன்பு லூக்கஸ்ஸால் இவளுக்கு கிடைக்கிறது. ஒரு நாள் எப்போதும் போல் சிறுவர்கள் லூகாஸ் மீதேறி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஓடி வந்து லூகாஸ் மீது குதிக்கும் கிளாரா, லூகாஸ் இதழில் முத்தம் வைக்கிறாள், காதல் சின்னத்தை வேறு பரிசாக இவர் அணியும் கோட்டிற்குள் வைக்கிறாள். கோபப்படாமல் லூகாஸ் அச்சிறுமியிடம், "இதழ் முத்தம் இடுவது தவறு... நீ எதுக்கு அந்த கிஃப்ட்ட எனக்கு கொடுத்த? இது தவறு! அப்பா அம்மாகிட்ட அன்பு காட்டு" என்று பணிவாக வேண்டுகோள் வைக்கிறார்.

அன்று எப்போதும் போல் கிளாராவின் அம்மா தாமதமாக வருகிறாள். உடன் பார்த்துக் கொண்டிருந்த மேல் ஆசிரியையிடம் லூகாஸ் என்னிடம் அவரது அந்தரங்க பாகங்களை காட்டினார் என்று அக்குழந்தை கூறுகிறாள். குழந்தை சொல்வதைக் கேட்டு முதலில் குழம்பி, பின் குழந்தை பொய் சொல்லாது லூகாஸ் ஏதோ செய்திருக்கிறார் என்று நம்பும் அவ்வாசிரியர், மேல் அதிகாரிகளை அழைத்து இச்சம்பவத்தை தெரிவிக்கிறார்.

லூகாசிற்கு வேலை போகிறது, போதாத குறைக்கு, ஆசிரியை லூகாஸின் மனைவியிடம் இந்த நிகழ்வுகளை கூறுகிறாள். லூகாஸ் மீது அச்சிறு சமுதாயம் கொண்டிருந்த மதிப்பு நிலைகுலைகிறது, லூகாஸின் மகன் மனதால் மிகுந்த பாதிப்பினை அடைகிறான், லூகாஸின் காதலியும் அவரைவிட்டு பிரிகிறார்... இப்படிப் பல விளைவுகள்.

சினிமாவில் பொதுவாக அடுத்த இன்ன நிகழ்வு தான் நிகழும் என்று யூகித்து விடலாம் ஆனால் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டி பிரதிபலிக்க முடியுமோ? அப்படியே லூகாஸ் எனும் நடுத்தர வர்கத்து மனிதரின் வாழ்விற்குள் கேமராவை புகுத்தி எடுக்கப்பட்டது போல் தோன்றும் இப்படம் நமக்கு தருகின்ற ஆச்சர்யங்கள் ஏராளம். ஒவ்வொரு காட்சியின் தொகுப்பாகட்டும், நடிகர்களின் நடிப்பாகட்டும் அற்புதம்.

படம் செய்கின்ற விந்தை என்னவெனில் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் மீது கூட வெறுப்பு நமக்கு எழுவதில்லை. அன்பு மறுக்கப்படுகின்ற சிறுவர்கள் மனதால் அடையும் சிதைவினை கிளாரா என்ற கதாபாத்திரம் அழகாக வெளிப்படுத்தியிருந்தது. இவள் வேண்டும் என்றே செய்ததை அறிந்தும் கோபத்தை அடக்கியாண்டு அக்குழந்தையின் மீது அன்பு செலுத்தும் லூகாஸின் குணம் கதைக்கு மேன்மையை சேர்க்கின்றது.

லூகாஸ் கதாபாத்திரத்தில் நடித்த மேக்ஸ் மிக்கேல்சென், சிறுமி கிளாரா கதாபாத்திரம், லூகாஸின் மகன் மார்கஸ், இயற்கையுடன் கதையை ஒன்றிணைத்து பயணிக்கச் செய்த ஒளிப்பதிவு என அனைத்தும் இணைந்து படத்தை மேலும் ரசிக்க வைக்கிறது.

கடந்த காலத்தில் சந்தித்த கசப்பான அவமானங்கள் ஒரு மனிதன் வாழ்வு முழுதும் விடாது துரத்தி வருவதை மிகைப்படுத்தப்படாத நடிப்பால், முலாம் பூசாத வசனத்தால் அற்புதமாக பதிவு செய்துள்ளது இப்படம்.

மனதுக்குள் பதிந்து பகிர்ந்து கொள்ளத் தோன்றச் செய்துள்ள ஓர் உன்னதப் படைப்பு.

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x