சுசேதா கிருபளானி 10

சுசேதா கிருபளானி 10
Updated on
2 min read

சுதந்திரப் போராட்ட வீராங்கனையும் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சருமான சுசேதா கிருபளானி (Sucheta Kriplani) பிறந்த தினம் இன்று (ஜூன் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஹரியானா மாநிலம் (அன்றைய பஞ்சாப்) அம்பாலாவில் வங்காளக் குடும்பத்தில் பிறந்தவர் (1908). பள்ளிப் படிப்புக்குப் பின்னர், இந்திரபிரஸ்தா கல்லூரியிலும் பின்னர் செயின்ட் ஸ்டீஃபன் கல்லூரியிலும் பயின்றார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

* மகாத்மா காந்தியின் கொள்கை களால் கவரப்பட்ட இவர், அவரைத் தன் வழிகாட்டியாக ஏற்றார். 1936-ல் பிரபல சமூக சீர்திருத்தவாதியும், சோசலிசத் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஆசார்ய கிருபளானியைத் திரு மணம் செய்துகொண்டார். இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

* ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தானும் சிறை சென்றால் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த முடியாது என்பதால், அகில இந்திய மகிளா காங்கிரசை ஆரம்பித்தார். போலீசாரிடமிருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்து கொண்டே போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தி வந்தார்.

* இதற்காக ரகசிய தன்னார்வப் படையை உருவாக்கினார். பெண்களுக்கு சிலம்பாட்டம், முதலுதவிப் பயிற்சி, ஆபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்தார். சிறைசென்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவும், உதவியும் வழங்கும் பொறுப்பையும் ஏற்றார்.

* காந்திஜியின் ஆலோசனைப்படி 1946-ல் கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் பல்வேறு பணிகளுக்காக அதன் செயலாளரான தக்கர் பாபாவுடன் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார். 1947-ல் சுதந்திர தினத்தன்று அரசியலமைப்பு அவையின் அமர்வில் வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.

* நாடு விடுதலை அடைந்த சமயத்தில் நடைபெற்ற பிரிவினைக் கலவரங்களின்போது காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரையில் அவருடன் பங்கேற்றார். வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தாயாக இருந்து உதவினார்.

* அரசியல் அமைப்பு மன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். ஐக்கிய நாடுகளின் சபைக்கான இந்தியப் பிரதிநிதியாகவும் செயல்பட்டார். 1952-ல் ஆசார்ய கிருபளானி காங்கிரஸ் தலை மைப் பொறுப்பிலிருந்து விலகி கிருஷக் மஸ்தூர் பிரஜா கட்சியைத் தொடங்கினார்.

* அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய-சீன யுத்தத்துக்குப் பிறகு அகதிகளாக வந்த திபெத்தியர்களின் மறுவாழ்வுக்கான முனைப்புகளில் தீவிரமாகப் பங்கேற்றார். 1960 முதல் 1963 வரை உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகவும் தொழிலாளர், சமூக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டார். 1963-ல் உத்தரப்பிரதேச முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

* இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமை பெற்றார். பல்வேறு பிரச்சினைகளை தனது நிர்வாகத் திறன் மூலம் அபாரமாகக் கையாண்டார். குறிப்பாக 62 நாட்கள் நடைபெற்ற அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை சுமூகமாகத் தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

* ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் முன்னேற்றத்தை எப்போதும் முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டவர். இந்திய அரசியல் வரலாற்றின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகளுள் ஒருவராகப் போற்றப்படும் சுசேதா கிருபளானி, 1974-ம் ஆண்டு 66-வது வயதில் மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in