Last Updated : 27 Sep, 2013 01:20 PM

 

Published : 27 Sep 2013 01:20 PM
Last Updated : 27 Sep 2013 01:20 PM

இந்தியாவின் தனித்துவமான நாயகன்

பகத் சிங் - இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள் பிரமிப்பானவை.

பதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர் வந்திருந்தார்கள். அதனால் ஊர்க்காரர்கள் யாரும் அவர்கள் இருந்த இடத்தினருகே போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு

சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள்.

"அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமை இல்லையா ?" என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.

லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழி தீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு, சுக்தேவ், ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார் பகத் சிங். அதற்குக் காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்று விட்டார்கள். ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது.

ஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற, லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். " இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக! " என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள். தப்பிக்க முயலாமல் கம்பீரமாக சரணடைந்தார்கள்.

புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். ' ஆங்கிலேயரின் கேளாத செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் ' என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங்.

வழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுத்தார் பகத் சிங். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது. ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள் தோழர்கள்.

பகத் சிங் அக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை. அங்கே இருந்த சிக்கல்களைப் பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட் விட்மனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் , உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறார் பகத் சிங்.

சுரண்டலற்ற, எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு பின்னர் அமைய வேண்டும் என்றும், அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்றும் அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மற்றும் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன் தொட்டுவிடக்கூடாது என்பது மடமை. விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்

பகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். அதனால் பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவழைக்கக் டியது. "என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின் விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் !" என்று குறிக்கிறார்

சாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மோத தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,"மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் !" என்று சொல்லிவிட்டு மரணத்தின் வாசலைத் தொட்டார்.

அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதமாகத் தான் தூக்கு மேடைக்கு வந்தார். இறுதிவரை நாத்திகனாக இருந்த அவர் ,அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? "சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன்" என்றார் . "ஏன்?" என கேட்டதற்கு,"ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்!" என்றார் . அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் 'அரசும் புரட்சியும்' நூல் தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x