

உலகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரும் ரொமான்டிக் இயக்கத்தின் முக்கிய கவிஞர்களுள் ஒருவருமான பெர்சி பைஷே ஷெல்லி (Percy Bysshe Shelley) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் பிராட்பிரிட்ஜ் ஹீத் என்ற கிராமத்தில் பிறந்தார் (1792). தந்தை, நிலப்பிரபு. ஷெல்லி தனது கிராமத்திலேயே ஆரம்பக் கல்வி கற்றார்.
* சியோன் ஹவுஸ் அகாடமியில் படிப்பதற்காக கிராமத்தை விட்டு 10 வயதில் வெளியேறினார். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் எடோன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சக மாணவர்களால் உடல் மற்றும் மனரீதியான தொல்லைகளுக்கு ஆளானார். எழுத்தாற்றல் பெற்றிருந்ததால், யாருடனும் பழகாமல் கற்பனை உலகில் சஞ்சரித்தார்.
* ஒரே வருடத்தில் இரண்டு நாவல்கள், இரண்டு கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டார். 'தனித்துவம் வாய்ந்த, முரண்பாடுகள் கொண்ட ஆங்கிலக் கவிஞர்' என்று வர்ணிக்கப்பட்டார். 1810-ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார்.
* அப்பொழுது 'தி நெசசிட்டி ஆஃப் எத்திஸம்' என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார். இது இறை நிந்தனை என்று கோபமடைந்த கல்லூரி டீன், இவரைக் கல்லூரியை விட்டு வெளியேற்றினார்.
* 1816-ல் தன் சகோதரி மூலம் ஸ்விட்சர்லாந்தில் கவிஞர் பைரனை சந்தித்தார். இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு மலர்ந்தது. பைரோனுடன் பல இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். தனது பயணம், அவருடனான நட்பு குறித்து பல கவிதைகள், கட்டுரைகளையும் எழுதினார்.
* ஒருமுறை பைரோனுடன் நீண்ட படகு சவாரி செய்த பிறகு வீடு திரும்பிய இவர், 'ஹைம் டு இன்டெலக்சுவல் ப்யூட்டி' என்ற கவிதையை எழுதினார். 'தி மாஸ்க் ஆஃப் அனார்சி', 'குவின் மாப்', 'அலாஸ்டர்' உள்ளிட்ட இவரது பல படைப்புகள் ஏராளமானோரைக் கவர்ந்தன. ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் ஆன்மிகப் பயிற்சி குறித்து 'ஏ வின்டிகேஷன் ஆஃப் நேச்சுரல் டையட்', 'தி ஸ்பிரிட் ஆஃப் சாலிட்யூட்', 'தி ரிவோல்ட் ஆஃப் இஸ்லாம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
* 'ஓசிமாண்டியாஸ்', 'ஓட் டு ஏ வெஸ்ட் வின்ட்', 'டு ஏ ஸ்கைலார்க்' உள்ளிட்ட தனிக் கவிதைகள் இவரது குறிப்பிடத்தக்கப் படைப்புகள். மக்களுக்கு தன் கவிதைகள் மூலம் அரசியல் விழிப்புணர்வையும் உருவாக்கினார். 'விதையுங்கள், ஆனால் கொடுங்கோலரை அறுவடை செய்ய விடாதீர்கள்' என்றார்.
* 'உலகில் மகத்தான கவிஞர்கள் யாரையும்விட அதிகமாக இவர் தம் கவிதைகளிலேயே மூழ்கி வாழ்ந்து வந்தவர்' என்று ஆங்கில இலக்கிய விமர்சகர் எட்மண்ட்ஸ் கூறியுள்ளார். 'தோழர்களற்ற ஏழைகளின் தோழன் நான்' என்று தன் கவிதையில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
* உலகம் போற்றும் கவிஞர் என்று கொண்டாடப்படும் இவர் வாழ்ந்த காலத்தில் இவரை யாருமே ஆதரிக்கவில்லை. ஒரு கட்டத்தில், தன் நாட்டைவிட்டே வெளியேறி இத்தாலியில் குடியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இவர் மரணமடைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஆக்ஸ்போர்ட் கல்வி நிறுவனம் இவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டது.
* 19-ம் நூற்றாண்டின் காவிய கவிஞர்களுள் மிகவும் இளம் படைப்பாளியான, பெர்சி பைஷே ஷெல்லி 1822-ம் ஆண்டு, ஜுலை மாதம், ஒரு படகு விபத்தில் மரணமடைந்தார். அப்போது 30 வயதை அவர் நிறைவு செய்ய சில நாட்களே இருந்தன.