Published : 20 Feb 2017 09:59 AM
Last Updated : 20 Feb 2017 09:59 AM

கே.வி.சுப்பண்ணா 10

பிரபல கன்னட நாடகாசிரியர்

உலகப்புகழ் பெற்ற கன்னட நாடகாசிரியர், சிந்தனையாளரான கே.வி.சுப்பண்ணா (K.V.Subbanna) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டம் ஹெக்கோடு கிராமத்தில் (1932) பிறந்தவர். சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயது முதலே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நூல்களைப் படித்தார்.

* தந்தை, பாரம்பரிய நாடக மன்றம் நடத்தி வந்ததால், சுப்பண்ணாவுக்கு நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட்டது. நண்பர்களுடன் இணைந்து பண்டைய வரலாற்று நாடகங்களை வண்ணமிகு ஆடை அணிகலன்களுடன் நடத்திப் பாராட்டு பெற்றார்.

* மைசூர் சென்று பல்கலைக்கழகத்தில் அறிவியல் பயின்றார். இலக்கியம், தத்துவம், அறிவியல் என அனைத்திலும் ஆர்வம் இருந்தாலும். நாடகக் கலைதான் தனது சாதனைக் களம் என்று முடிவு செய்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் குவெம்புவின் மாணவர் இவர்.

* படித்து முடித்த பிறகு, சொந்த ஊருக்கே சென்றார். தன் கிராமத்தில் நவீன நாடகங்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டார். யட்சகானங்கள், மகாராஷ்டிராவின் பார்ஸி நாடகங்களைப் பார்த்துப் பழகிப்போன கிராம மக்களுக்கு நவீன நாடகங்களில் ஆர்வம் இல்லை. இதையடுத்து, தந்தையின் நாடக அரங்கான ‘நீலகண்டேஸ்வர நாடக சமஸ்தே’ (‘நீனாசம்’) நாடக மன்றத்தை, மக்கள் விருப்பத்துக்கேற்ற நவீன பாணிக்கு மாற்றினார்.

* பல கன்னட எழுத்தாளர்கள், நாடகாசிரியர்களை இது ஊக்குவித்தது, 1973-ல் ‘நீனாசம்’ திரைப்பட சங்கமும் அமைக்கப்பட்டது. இதன்மூலம், நாடகம் மட்டுமின்றி சிறந்த திரைப்படங்களையும் அரங்கேற்றினார். திரைப்பட விழாக்களையும் நடத்தினார்.

* மராட்டி, இந்தி, வங்காளம், சமஸ்கிருத நாடகங்கள், ஐரோப்பாவின் சிறந்த நாடகங்களைக் கன்னடத்தில் மொழிபெயர்த்து, மேடையேற்றினார். வெளி மாநிலங்களிலும் தன் நாடகங்களை அரங்கேற்றினார். நாடகப் பள்ளி தொடங்கினார். அதற்கு நூல்கள் தயாரிக்க, பிறமொழி நாவல்களை கன்னடத்தில் மொழிபெயர்த்தார்.

* டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் வழங்கப்படும் நாடகப் பயிற்சி முறைகளை இங்கு அறிமுகம் செய்தார். பயிற்சிப் பட்டறைகளை நடத்தி, மாணவர்களுக்கு சினிமா, நாடகப் பயிற்சிகளை வழங்கினார். இவரது மகத்தான சேவை நாடு முழுவதும் பரவியது. கர்நாடக அரசு மட்டுமின்றி, பல அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் இவருக்கு தாராளமாக உதவின.

* மக்களின் கலையறிவை வளர்க்க பல்வேறு வகுப்புகளை நடத்தினார். கன்னட நாடக இலக்கிய வளர்ச்சிக்காக ‘அட்சர ப்ரட்சணா’ என்ற பதிப்பகத்தை நிறுவினார். ‘ரங்கமந்திரம்’ என்ற சிறந்த நாடக அரங்கை 1972-ல் அமைத்தார். ஒரு தொலைதூர கிராமத்தில் இதுபோன்ற நாடக அரங்கு உருவாக்கப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல்முறை.

* உலக நாடகங்கள், திரைப்படங்கள், அவற்றின் வளர்ச்சி, பிரபல நாடகாசிரியர்கள், திரைப்பட இயக்குநர்கள் குறித்து பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ‘கம்யூனிட்டி அண்ட் கல்ச்சர்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, நூலாக வெளிவந்தது.

* பத்திரிகை, இலக்கியம் மற்றும் பல கலைகளில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளுக்காக 1991-ல் ராமன் மகசேசே விருது, 1994-ல் சங்கீத நாடக அகாடமி விருது, 2003-ல் சாகித்ய அகாடமி விருது, 2004-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். கன்னட நாடகக் கலையின் முன்னோடியாகப் போற்றப்பட்ட கே.வி.சுப்பண்ணா 74-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x