இணைய களம்: ஷிமோகா மேயரின் அடையாளம் ‘தமிழர்’ மட்டுமல்ல!

இணைய களம்: ஷிமோகா மேயரின் அடையாளம் ‘தமிழர்’ மட்டுமல்ல!
Updated on
1 min read

கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாநகராட்சி மேயராக, தமிழரான ஏழுமலை தேர்வுசெய்யப்பட்டது தொடர்பான செய்தி, ‘தி இந்து’ நாளிதழில் மார்ச் 3 அன்று வெளியாகியிருக்கிறது. தமிழர் என்று சொல்லப்படுவதன் மூலம் நமக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கும் ஏழுமலை ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். 19-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே கர்நாடகத்தின் உள்ளடங்கிய பகுதிகளுக்கு வேலை நிமித்தமாகத் தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். அவர்களில் 95% பேர் தலித்துகளே. அவர்களில் பலரும் அங்கேயே குடியேறினர். ஷிமோகாவிற்கு அருகிலுள்ள புகழ்பெற்ற பத்ராவதி அணை, தமிழ் தலித்துகளின் உழைப்பினாலேயே கட்டப்பட்டது. இவ்வாறு சென்று குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவரே ஏழுமலை.

இத்தகைய புலப்பெயர்ச்சிக்குப் பொருளாதாரம் மட்டுமல்ல சாதிப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் நிலைமைகளும் காரணமாயிருந்தன. புலம்பெயர்ந்த இடங்களில் கடும் சுரண்டல் முறைகள் இருந்திருப்பினும் உள்ளூரோடு ஒப்பிட்டுப் பார்த்து அவற்றிலேயே அமைதிகண்டனர் தலித் மக்கள். தலித்துகளின் பொருளாதாரத் தற்சார்பிலும் அரசியல் விழிப்புணர்விலும் இடப்பெயர்ச்சிகளின் தாக்கம் அதிகம்.

அன்றைக்கு மட்டுமல்ல இன்றைய தமிழ்நாட்டின் நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் ஷிமோகாவின் மேயராக ஏழுமலை என்னும் தலித் தேர்ந்தெடுக்கப்பட்டது முக்கியமானதுதான். தலித்துகளுக்கென்று ஒதுக்கப்படாத பொது மாநகராட்சியில் நின்று அவர் வெற்றி பெற்றுள்ளார். (தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகமென்பது கணக்கில் கொள்ளப்பட்டிருந்தாலும் இது முக்கியமானதே!). வெற்றி பெற்ற அவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்ததையும் செய்தி சொல்கிறது. (அதுவும் புரட்சியாளர் என்ற முன்னொட்டுக் கொண்டே அம்பேத்கர் குறிப்பிடப்பட்டிருக்கிறார்). நம் தமிழகக் கட்சிகளிடம் இவ்வாறான விஷயத்திற்கு இடமில்லை. இக்கட்சிகளிலிருக்கும் தலித் பிரதிநிதிகளும் அவ்வாறே ஆக்கப்பட்டுவிட்டனர்.

சமூகத்தின் எல்லா பிரச்சினைகளும் ஒற்றைத் திசையில் தமிழ்த் தேசியவாதத்திற்கான கச்சாப்பொருளாக மாற்றப்பட்டுவிடும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த்தேசியம் தராத வாழ்வை நவீனத்தின் விதேச வாழ்வு மூலம் தலித்துகள் பெருமளவு பெற்றிருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியில் ஏழுமலை வருகிறார். (மஜத - பாஜக கூட்டணியை மதிப்பிட வேண்டியது தனியானது)

கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டபோது தலித்துகள் மட்டுமே போட்டியிடுவதற்கான இடங்கள் பற்றிய அறிவிப்புகளுக்குப் பல இடங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அவ்வாறான ஊர்களில் திருவண்ணாமலை வேட்டவலமும் ஒன்று. கர்நாடகத்தில் உள்ளாட்சிக்கான பொது இடமொன்றில் வெற்றி பெற்றிருக்கும் தமிழராகிய ஏழுமலையின் சொந்த ஊர் வேட்டவலத்திற்கு அருகிலுள்ள கிராமம்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in