

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினரான எஸ்.ராகவானந்தம், விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். கட்சி தொடங் கிய காலத்தில் அதன் தொழிற்சங்க அமைப்புகளில் பணியாற்றினார். அத னால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது முதல்வர் எம்.ஜி. ராமசந்திரன் அவருக்குத் தொழிலாளர் நலத்துறையை யும் அளித்திருந்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, தொழிலாளர் நலம் ஆகிய 3 துறைகளையும் அவர் சேர்த்து கவனித்து வந்தார். செயலூக்கம் மிகுந்தவர், நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர், எல் லோரிடமும் எளிமையாகப் பழகுவார். எனவே அரசியலிலும் அதிகார வர்க்கத்திலும் அனைவரிடையேயும் பிரபலமானவராக இருந்தார்.
வேறொரு சூழலில் அவரைப் பார்த் தது எனக்கு நினைவுக்கு வருகிறது. சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்று மூர் மார்க்கெட். அங்கு எந்தப் பழைய பொருளையும் முடிந்த விலை யில் வாங்கிக்கொண்டு வீடு திரும்பலாம். அந்த மூர் மார்க்கெட் இருப்பது ரயில்வே இடத்தில். அந்த இடத்தை மீட்க ரயில்வே விரும்பியது.
இதைத் தெரிந்துகொண்ட ‘அசைட்’ என்ற சென்னை மாநகர வாரப் பத்திரிகை, மூர் மார்க்கெட்டைக் காப் பாற்ற வேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்கியது. பத்திரிகையின் வாசகர் களும், மூர் மார்க்கெட் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்பியவர்களும் அதன் கையெழுத்து இயக்கத்தில் சேர்ந் தனர். மூர் மார்க்கெட் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்பியவர்களின் பிரதிநிதிகளை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது (அரசு) இல்லத்தில் ஒரு விடுமுறை நாளன்று காலை சந்தித்துப் பேச ராகவானந்தம் சம்மதித்தார். எத் தனை பேர் வேண்டுமானாலும் வாருங் கள் என்று அமைச்சர் தாராள மனதுடன் அழைத்திருந்தார்; நாங்கள் சுமார் 20 பேர் சென்றிருந்தோம்.
வழக்கம்போல, மூர் மார்க்கெட் இடத்தை ரயில்வே எடுத்துக்கொள்ள விரும்புவதற்கான அரசுபூர்வ காரணங் களை நியாயமென முதலில் அவர் எடுத் துக் கூறினார். ‘மூர் மார்க்கெட் இடிக்கப் படக் கூடாது என்று கேட்கும் உங்களைப் போன்ற நூறு பேர் முக்கியமா? ரயில் நிலையத்தை விரிவாக்கிக் கட்டினால் பயன்படுத்தப் போகும் ஆயிரம் பேர் முக்கியமா?’ என்று கேட்டார்.
‘மூர் மார்க்கெட்டைக் காப்பாற்றுவதால் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இல்லாதவர்களுக்கு எல்லாம் கிடைத்துவிடுமா’ என்றும் கேட்டார். இதையெல்லாம் அவர் எங்களுடைய மனம் நோகாத வண்ணம் நகைச்சுவையாகத்தான் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படி அவர் பேச, நாங்கள் பேச, காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு நடுப்பகல் 1 மணி வரை நீண்டுவிட்டது. இப்படி இந்த சந்திப்பு நீண்டதற்கே அவர்தான் காரணம். எங்களில் ஒருவர் பேசி முடித்தவுடன், ‘‘இருங்கள் இதோ வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஒர் அறைக்குள் சென்று அப்போது நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் மேட்சைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வந்து ஸ்கோர் என்ன என்று சொல்வார்.
அப்போதுதான் டெலிவிஷனில் கிரிக்கெட் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்ப ஆரம்பித்திருந்தார்கள். ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களை நேரில் பார்க்காமல் தவிர்க்க அவரால் முடியவில்லை. ‘‘சின்ன வயதில் நான் நன்றாக கால்பந்து விளையாடுவேன், இப்போதும் விளையாட்டு என்றால் எனக்குக் கொள்ளை ஆசை’’ என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போவார்.
மனுவில் கையெழுத்து போட்டவர்களில் ஓர் அமெரிக்கரும் ஒரு ஸ்வீடன் நாட்டவரும் இருந்தனர். ஒரு பொதுப் பிரச்சினையைவிட மாநில அமைச்சர் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கண்டு அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். “மைதானத்தில் ஆடுகிறவர்களைவிட அமைச்சர் மிகுந்த ஆர்வத்தோடு இந்த ஆட்டத்தில் பங்கேற்கிறார்” என்று ஒருவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
- சரித்திரம் தொடரும்…