Last Updated : 21 Jun, 2017 05:52 PM

 

Published : 21 Jun 2017 05:52 PM
Last Updated : 21 Jun 2017 05:52 PM

திரைப்பட விமர்சனத்தில் புதுமையைப் புகுத்த என்ன செய்யலாம்?- வாசகரின் யோசனைகள்

ஒரு படைப்பின் உன்னதம் அதன் விமர்சனங்களால் நீண்ட ஆயுளைப் பெறுகின்றன. பல தலைமுறைகளைக் கடந்தும் நிற்கின்றன. வணிகநோக்கத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கும், இலக்கியப் படைப்பிற்கும் அதன் விமர்சனங்களே ஆயுளை நிர்ணயிக்கின்றன. இந்நிலையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு துறையில் பல விஷயங்களில் விஞ்ஞான வளர்ச்சியாலும், நவீன தொழில்நுட்பங்களாலும் மாற்றங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. இதனை நாமும் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் விமர்சனம் என்றும் துறையில் எந்த வித மாற்றங்களும், எந்த வித புதிய அணுகுமுறைகளும் வந்ததாக தெரியவில்லை. மாறாக 140 எழுத்துகளுக்குள்ளான விமர்சனம் என்ற அளவில் விமர்சனமானது குறைந்துவிட்டது. அத்துடன் இன்றைய சூழலில் திரைப்படத்தை நுகர்வோரே விமர்சகராகிவிடுகிறார். இதனால் பல தரமான படைப்புகள் துல்லியமான விமர்சனத்தைப் பெறாமலேயிருக்கின்றன. இதற்கெல்லாம் ஒரு தீர்வாக இந்த தலைமுறையில் விமர்சன இதழியல் (Review Journalism) என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடையவேண்டும் என்று விரும்புகிறேன்.

இசையுலகில் ஒரு கச்சேரி நடைபெறுகிறது என்றால் அதனை விமர்சிப்பவர்கள் இசை ஞானமுடையவர்களாகவும், இசையில் தேர்ச்சி பெற்றவராகவும், இசையில் அனுபவம் பெற்றவராக இருக்கிறார்கள்.

நாட்டிய உலகில் ஒரு நாட்டிய நாடகத்தைப் பற்றி விமர்சிப்பவர்கள் நாட்டியத்தைப் பற்றியும், நாட்டியத்தின் நுட்பங்கள் மற்றும் நாட்டிய சாஸ்திரங்களைப் பற்றி அறிந்தவர்களாகவும், வேறு சில நாட்டியத்தின் வடிவங்களைப் பற்றியும், அதன் கூறுகளைப் பற்றியும் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். இதனால் இவர்களின் விமர்சனங்களும், விமர்சனங்களுக்கும் இசையுலகிலும், நாட்டிய உலகிலும் தனித்தன்மையுடன் கூடிய முக்கியத்துவம் கிடைக்கிறது.



வாசகர்களே! உங்களுக்குத் தோன்றும் கருத்துகள், எண்ணங்கள், சிந்தனைகள், சுவாரஸ்யமான கட்டுரைகள், யோசனைகளை online.editor@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். வித்தியாசமான, பயனுள்ள பகுதிகள் தி இந்து தமிழ் இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஆனால் திரையுலகில் குறிப்பாக தமிழ்திரையுலகில் விமர்சனம் என்பது படைப்பை அலசி ஆராய்வதில்லை. எடுத்துக் கொண்ட கதையையும், அதற்கு மக்களின் தற்போதைய ரசனைக்கும் இடையேயான உறவை மட்டுமே பிரதிபலிக்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் படத்தைப் பார்க்கும் ஒரு சாதாரண பார்வையாளரைப் போல் விமர்சிக்கிறார்கள். இது தவறு என்பதற்கு கடந்து பத்தாண்டுகளுக்கு மேலாக பத்திரிகை, தொலைக்காட்சி, மின்னணு மற்றும் சமூக வலைதள ஊடகங்களில்வெளியான விமர்சனங்களே சாட்சி.

அதிலும் குறிப்பாக கடந்த பத்தாண்டுகளாக ஒரு பிரபலமான பத்திரிகை ஒன்றில் வெளியான திரை விமர்சனங்களை தொகுத்துப் பார்க்கும் போது அவை ஒரே மாதிரி இருப்பதை காணலாம். விதிவிலக்குகள் என்று சொல்லப்படும் சில விமர்சனங்கள் சில ஆழ்ந்த இலக்கியச்சுவையை தாங்கிய வார அல்லது மாத இதழ்களில் வெளியாகி இருக்கிறது. அதில் கூட விமர்சனம் என்பது அந்த திரைப்படம் சொல்லவந்த கதை அல்லது உணர்த்துகின்ற ஒரு பொருளைப் பற்றி மட்டுமே குறைந்த அளவிலான தரத்துடன் விமர்சித்திருக்கிறது.

திரைப்படம் என்பது எப்படி ஒரு கூட்டு முயற்சியோ அதைப் போல் விமர்சனம் என்பதும் ஒருகூட்டு முயற்சியாகத்தான் இருக்கவேண்டும். விமர்சனங்களில் இடம்பெறும் இசை மற்றும் பாடல்களைப் பற்றி இடம்பெறும் வார்த்தைகள் கடந்த இருபதாண்டுகளுக்கு மேல் மாறவேயில்லை என்பதை உறுதியாக சொல்லலாம். அதிலும் 'பாடல்கள் அனைத்தும் சுமார். பாடல்கள் கேட்கும் வகையில் இருக்கின்றன' என்பன போன்ற பொதுவான கடமைக்காக எழுதப்படும் விமர்சனங்களே இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு இசையமைப்பாளர்களையும், அவரது திறமைகளையும் அவமானப்படுத்தும் செயல் என்று ஒருபோதும் விமர்சகர்கள் உணர்வதில்லை. அதே போல் இவர்களுக்கு இருக்கும் இசையறிவும் கேள்விக்குரியது.

அதேபோல் திரையிசையின் அடிநாதமான பாடல்வரிகளையும் தங்களுடைய விமர்சனத்தில் முன்னணி பத்திரிகைகள் குறிப்பிடுவதில்லை. பாடலாசிரியரின் கற்பனை, பாடலாசிரியருக்கு தரப்பட்ட சூழல், அவருக்கு விவரிக்கப்பட்ட கதை, அவர் உற்பத்தி செய்திருக்கும் திரைக்கதையை நகர்த்துவதற்கான பாடல்வரிகள், மெட்டிற்குரிய வரிகள், மெட்டமைக்கப்பட்ட வரிகள் இப்படி நுட்பமாக விவரித்துப் பாடலைக் கொண்டாடிய விமர்சனங்களே இல்லை என்று குறிப்பிடலாம்.

அதேபோல் ஒளிப்பதிவைப் பற்றிய விமர்சனங்களில் 'ஒளிப்பதிவு கண்ணிற்கு குளிர்ச்சியாக இருந்தது. 'சூப்பர்', 'பிரம்மாண்டமாக இருந்தது' என்றுதான் எழுதுகிறார்கள். ஒரு காட்சி எப்படி ஒளிப்பதிவால் எம்மைக் கவர்கிறது என்று அதற்குரிய நுட்பங்களுடன் விவரிப்பதில்லை. புகைப்பட இதழியல் என்ற ஒரு பிரிவு வளர்ந்து உலகையே வியந்து பார்க்கவைக்கிறது. அதே போல் காட்சி இதழியலும் வளரத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் ஒளிப்பதிவைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மட்டுமே அதைப் பற்றி விமர்சிக்கும் போது அந்த விமர்சனத்தின் தரம் உயரும்.

அதேபோல படத் தொகுப்பைப் பற்றிய விமர்சனங்களில் 'கத்திரி போட்டிருக்கலாம்', 'காட்சிகள் நீளமாக இருக்கின்றன', 'எடிட்டர் சொதப்பல்' என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் கதை மற்றும் திரைக்கதையின் தேவை என்ன என்பதை சாதாரண பார்வையாளர்களாக இருந்து இப்படி போன்றவார்த்தைகளால் விமர்சிக்காமல் அதன் பலம் மற்றும் பலவீனத்தை அவர்கள் உணர்ந்தும் கொள்ளும் வகையில் தொழில் நுட்ப அறிவுடன் விமர்சனம் இருந்தால் அதைப் பார்த்தோ அல்லது படித்தோ அந்த கலைஞர்கள் தங்களை திருத்திக் கொள்வார்கள்.

விமர்சனங்களைப் பற்றி குறை கூறுவது என்னுடைய நோக்கமல்ல. விமர்சனங்கள் தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் முன்மொழியப்படுவது தான் விமர்சன இதழியல் (Review Journalism)

விமர்சனத்தில் இப்படியொரு புதுமையை உண்டாக்குவோம் அல்லது ஒரு புதிய நடைமுறையை ஏற்படுத்துவோம். திரைப்படத்தை இயக்குநர்,கதாசிரியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், படத் தொகுப்பாளர் என பல கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்குகிறார்கள். அதே போல் இந்த துறையில் தேர்ச்சி பெற்ற அல்லது அனுபவம் பெற்ற பலர் ஒன்றிணைந்து ஒரு குழுவாக இயங்கி விமர்சனம் செய்தால் விமர்சனம் என்பது ஒரு கலைவடிவமாக மாறி ஒரு படைப்பின் உன்னதத்தை அடுத்த தலைமுறைக்கும் நீட்சி பெறவைக்கும்.

இதற்காக திரைத்துறையில் இருக்கும் இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம்,படத் தொகுப்பாளர் சங்கம் என அனைத்து முக்கியமான சங்கங்களில் பணியாற்றி வரும் மூத்த மற்றும் அனுபவம் மிக்க கலைஞர்களை வழிகாட்டச் சொல்லலாம். ஒரு காட்சி சிறப்பாக எப்படி அமையவேண்டும் என்பது குறித்தும், அதற்காக உழைக்கும் கலைஞர்களைப்பற்றிய தொழில் சார்ந்த புரிதல் (Technical Excellency & professionalism) ஆகியவற்றை விமர்சகர்களாக விரும்புவர்கள் பெறவேண்டும். அதே போல் இசை, பாடல் என பல பிரிவுகளைச் சார்ந்த கலைஞர்களிடமும் உரிய பயிற்சியைப் பெற்றால் சிறந்த விமர்சகர்கள் தயாராவார்கள்.

ஒரு சிறந்த விமர்சனத்தை, திரைப்படத்தை உருவாக்கும் எந்த கலைஞரும் புறந்தள்ளமாட்டார். அவர்களுக்கு தேவையானதும் ஒரு பக்குவப்பட்ட விமர்சனமே தவிர பார்வையாளரைப் போன்ற விமர்சனம் அல்ல. ஏனெனில் இன்றைய தமிழ் திரையுலகம்அனுபவம் வாய்ந்த படைப்பாளிகளின் வசமில்லை. திரையுலக அனுபவமற்ற புதிய இளம் படைப்பாளிகளின் கைகளில் இருக்கிறது. அதனால் தரமான விமர்சனம் என்பது அவசியமாகிறது.

ஒரு படத்தில் இடம்பெற்ற அனைத்து அம்சங்களையும் ஒரே விமர்சகர் விமர்சிப்பதும் விமர்சனத்தின் தரத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற இசையை மட்டும் ஒருவர் தன்னுடைய இசைஞானத்தால் விமர்சிக்கும் போக்கு உதயமாகவேண்டும். பாடலை மட்டுமே விமர்சிப்பவர்கள் உருவாகவேண்டும். ஒளிப்பதிவை மட்டுமே விமர்சிப்பவர்கள், கதையை மட்டுமே விமர்சிப்பவர்கள், திரைக்கதையை மட்டுமே விமர்சிப்பவர்கள், நகைச்சுவையை மட்டுமே விமர்சிப்பவர்கள் . ஆடை வடிவமைப்பையும், உடையலங்காரத்தையும் விமர்சிப்பவர்கள், கலை இயக்கத்தை மட்டுமே விமர்சிப்பவர்கள் என ஒவ்வொரு பிரிவிற்காகவும் ஒருவர் உருவாகவேண்டும். தமிழ் திரைப்படங்களின் தரம் உலக தரத்திற்கு இணையாக உயர வேண்டும் என்றால் தேர்ந்த விமர்சகர்கள் உருவாகவேண்டும் .

ஒரு திரைப்படத்தின் பின்னணியில் ஏராளமானவர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. இவர்கள் ஒரு கற்பனையான மனித சமூகத்திற்கு தேவையான ஒரு இலக்கியப் படைப்பை தர விரும்பி கடுமையாக உழைக்கிறார்கள். இவர்களின் உழைப்பை உங்களின் பொறுப்பற்ற வார்த்தைகளால் அர்த்தமற்றதாக்கிவிடாதீர்கள்.

தொடர்புக்கு: newsgopi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x