Published : 21 May 2017 12:01 PM
Last Updated : 21 May 2017 12:01 PM

காலத்தின் வாசனை: கடைசியாக வானத்தை எப்போது பார்த்தீர்கள்?

எளிய கேள்வி. பதில் சொல்வது கடினம். ஏனெனில், நம்மில் பலர் வானத்தைப் பார்ப்பதே கிடையாது. அந்தக் காலத்தில் மக்கள்- குறிப்பாக கிராமவாசிகள்- வீடுகளுக்குள் புழங்கினார்கள். வானத்தின் கீழ் வாழ்ந்தார்கள்.

காலையில் வெள்ளி முளைத்துவிட்டதா என்று வானம் பார்த்துக் காலம் அறிந்து கலப்பை ஏந்தி வயலுக்குச் செல்லும் உழவன், வானத்தை அண்ணாந்து பார்க்காத நாளில்லை. வானில் பறந்துபோகும் பறவைக் கூட்டங்கள் பல்வேறு பருவநிலையின் முன்னறிவிப்புகளாக இருந்தன. வானத்தின் நீல விசித்திரங்களில் அவனுக்கான செய்தியை வாசிக்கத் தெரிந்திருந்தான். மேகப் பொதிகளின் ஓட்டசாட்டங்கள் கண்டு மழை மட்டுமன்றி, தட்பவெப்பங்களின் நுட்பமும் புரிந்துகொண்டான்.

கிராமவாசிகள் அனைவருக்கும் ஒரே கடிகாரம்தான். வானமெனும் பெருங்கடிகாரம். சாயும் நிழல்களின் அளவைக்கொண்டு காலம் அறியும் கணக்கு அவனுக்குத் தெரியும். வயல்காட்டில் வானத்துக்குக் கீழே பழைய சோற்றுக் கலையத்தில் கைவிட்டு சோற்றுக் கவளத்தை விழுங்கும்போதும் பார்வை மட்டும் சூரியன்மீது இருக்கும். நேரமாச்சு என்று எழுந்து ஓடி ஏர் பூட்டுவான்.

வானத்தில் நனைதல்

வயலிலிருந்து வீடு திரும்பிய பிறகும் வானத்தை விட மனசில்லை. வீட்டுக்கு முன்னே சாணி மெழுகிய திறந்தவெளி முற்றத்தில் வட்டமாக உட்கார்ந்து, கூம்பாவில் சோறுபோட்டுக் குழம்பை ஊற்றிச் சாப்பிடுவார்கள். அடம்பிடிக்கும் குழந்தைக்கு வானத்து நிலவைக் காட்டிச் சோறூட்டும் வழக்கம் வாழையடி வாழையாக வந்த பழக்கம். நிலவையும் நட்சத்திரங்களையும் தொட்டுக்கொண்டு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வல்லமை தந்தது வானம்.

வீட்டுக்குள்ளும் வானம் நுழைந்தது. வானவெளி முற்றங்கள்! முற்றத்தை ஒட்டிய தூண்மீது சாய்ந்துகொண்டு, வானத்தோடு உறவாடிய காலங்களை வரமன்றி என்னசொல்ல! முற்றத்தில் பெய்த மழையில் ஆட்டம் போடும் குழந்தைகள் உண்மையில் நனைந்தது வானத்தில் அல்லவா?

தொட முடியாது என்று தெரிந்தும் தொடுவானம் என்று பெயர்வைத்த கவிஞனின் பெயர் தெரியவில்லை. சற்றுத் தொலைவில் வயல்வெளியை வானம் தொடுவதுபோல் தோன்றும். பிள்ளைப் பிராயத்தில் நாங்கள் ஓடிக் களைப்போம். தொடுவானம் பின்னால் நகர்ந்துகொண்டே போகும். இப்போது புரிகிறது.. தொடுவான் நோக்கிய ஓட்டமென்பது, இலக்கினை அடைவதற்கு அல்ல; பயணமே இலக்காகி பாதையை ரசிக்கவைக்கும் பக்குவத்தை அளிப்பதற்கானது என்று!

‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்.. மயில் குயில் ஆச்சுதடி!’ என்பார் வள்ளலார். தன் அழகின் கர்வத்தால் ஆடும் மயில்போன்ற மனத்தின் ஆணவத்தை இறைவன் அடக்கியதால், இப்போது மயில் வானத்திலே களிநடம் புரிகிறது. அப்போது ஆன்மா குயிலாகிக் கூவுகிறது. வள்ளலாரின் இந்த அபூர்வமான மாயக் கற்பனையை நவீனமான மேஜிக்கல் மிஸ்டிசிஸம்கூட நெருங்க முடியாது.

ஊருக்கொரு வானம்

அப்பாதான் வானத்தை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஓரியன் நட்சத்திரக் கூட்டம், சப்தரிஷி மண்டலம் எல்லாம் அடையாளம் காட்டி வானத்தை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். நான் சிறு வயதில் ஒவ்வொரு ஊருக்கும் தனித் தனியாக வானம் இருக்குமென்று நினைத்தேன். தஞ்சாவூர் வானம், மதுரை வானம், கும்பகோணத்து வானம், பட்டணத்து வானம் என்று தனித்தனியாக இருக்குமென்று நினைத்தேன். இப்போதுகூட அறிவுக்கு முரணான இந்தச் சிந்தனை, மனசுக்கு உடன்பாடாக, உகந்ததாக இருக்கிறது.

கவிஞர் திருலோக சீதாராம் ஒரு கவிதையில் சொல்லுவார்;

‘மச்சுவீடுதான் / மாடியில் கூரை இல்லை / எனினும் இருள் வான் உண்டே!’

‘வானம் எனக்கொரு போதிமரம்; நாளும் எனக்கது சேதி தரும்!’

என்பார் கவிப்பேரரசு வைரமுத்து.

பாரதி காட்டிய வானம்

‘மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா? போடலாம். மண்ணிலும் வானம்தானே நிரம்பி இருக்கிறது’ என்கிறான் பாரதி.

பாரதி மேலும் சொல்லுவான்: ‘உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்துகிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது... சில தினங்களின் முன்பு ஓர் மாலைப்பொழுதில் நான் கண்ட அதிசயங்களை ஒருவாறு இங்கு குறிப்பிடுகிறேன். அடிவானத்தில் சூர்யகோளம் தகதகவென்று சுழன்றுகொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது போலிருந்தது...

பார்! ஸூர்யனைச் சுற்றி மேகங்களெல்லாம் தீப்பட்டெரிவதுபோலத் தோன்றுகிறது! ஆஹா.. என்ன வர்ணங்கள்! எத்தனை வித வடிவங்கள்! எத்தனை யாயிர விதமான கலப்புகள்! அக்கினிக் குழம்பு! தங்கம் காய்ச்சி விட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்! நீல ஏரிகள்! கரும்பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனை விதச் செம்மை! எத்தனை வகைப் பசுமை! எத்தனை வகைக் கருமை! நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள்! எரிகின்ற தங்க ஜரிகைக் கரைபோட்ட கரிய சிகரங்கள்! தங்கத் திமிங்கலங்கள் மிதக்கும் கருங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள் வர்ணக் களஞ்சியம் போ, போ, என்னால் அதை வர்ணிக்க முடியாது.’

சரி; இப்போது சொல்லுங்கள்: கடைசியாக வானத்தை எப்போது பார்த்தீர்கள்?

தஞ்சாவூர்க் கவிராயர் தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com © ‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x