இதய மாற்று சிகிச்சை: உதவும் கரங்கள் தேவை!

இதய மாற்று சிகிச்சை: உதவும் கரங்கள் தேவை!
Updated on
2 min read

வர்ஷாவால் அந்த வீடே கலகலப்பாக இருக்கிறது. அம்மா, தங்கை, தாத்தாவுடன் சிரித்தபடியே பேசிக்கொண்டிருக்கிறாள் வர்ஷா. ''சமீபத்தில் 'கபாலி' படம் பார்த்தேன்; ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் வெளியூரில் இருக்கிறார்கள். அவர்களோடு போனில்தான் பேசுவேன். எனக்கு சூர்யா என்றால் ரொம்பப் பிடிக்கும். அவரை எப்படியாவது ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும்'' என்று 18 வயதுக்குரிய படபடப்போடும், அதையும் மீறிய பக்குவத்தோடும் பேசுகிறார். வர்ஷா தனது இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார் என்று கொஞ்சமும் நம்ப முடியவில்லை.

வர்ஷாவின் இதயத்தசைகள் வழக்கமான அளவைக் காட்டிலும் தடித்திருக்கின்றன. இதனால் இதயத்தின் சுருங்கி விரியும் திறன் 24 சதவீத அளவுக்குக் குறைந்திருக்கிறது. இந்நோயால் (Dilated Cardiomyopathy with severe LV Dysfunction) ஏற்பட்டிருக்கும் பல்வேறு உடல் பிரச்சினைகளையும், எதிர்மறை எண்ணங்களையும் தன் தைரியத்தால் எதிர்கொண்டு வருகிறார்.

வர்ஷாவின் நிலை குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அவரின் அம்மா ஸ்ரீவித்யா.

"ரயில் விபத்தால் பத்து வருடங்களுக்கு முன்னால் என் கணவர் இறந்துவிட்டார். இரண்டு மகள்களுடன் என் சகோதரர் வீட்டில் இருக்கிறேன். வர்ஷா சிறு வயதில் இருந்தே பயங்கர சுட்டி; துறுதுறுவென இருப்பாள். அவளுக்கு நடனம் மிகவும் பிடிக்கும். பத்தாம் வகுப்பு வரை வழக்கமான குழந்தையாகத்தான் இருந்தாள். பொதுத்தேர்வில் 486 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலாவதாக வந்தாள். அதுவரையிலும் எல்லாமே நன்றாகப்போனது.

பதினொன்றாம் வகுப்பில் அவளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். சில வாரங்கள் ஓடின. திரும்பவும் அடிக்கடி சோர்வடைய ஆரம்பித்தாள். விரல் கணுக்கள் கருப்பாக மாறத் தொடங்கின. கண்கள் மஞ்சளாகின. உதடு, முகம் முழுக்க கருநீலச் சாயல் படரத் தொடங்கியது. திரும்பவும் மருத்துவமனையில் அவளைச் சேர்த்த பின்னர்தான் இதயத்தின் சுருங்கி விரியும் திறனில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

பத்து நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். பிறகு நிலைமை ஓரளவு சீரடைந்தது. ஆனாலும் இதயம் தன்னுடைய வேலையை முழுமையாகச் செய்ய முடியாததால் விரைவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். வர்ஷாவுக்கு முகப்பேர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (எம்.எம்.எம்.) மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தன் அம்மாவுடன் வர்ஷா

ஓர் அம்மாவாக மகளின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக இருக்கிறது. 'இன்றைக்கு நாம் நான்கு பேரிடம் கேட்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். விரைவில் நான் குணமாகி வந்து நிறைய பேருக்கு உதவுவேன்' என்று வர்ஷா அடிக்கடி கூறுவாள்.

அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 லட்சமும், மருத்துவமனை மற்றும் மருந்து செலவுகளுக்கு ரூ. 10 லட்சமும் தேவைப்படுகிறது. மிக முக்கியமாக கொடையாளியின் இதயமும் தேவைப்படுகிறது. பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறோம். நல்ல இதயத்துக்காகவும், உதவும் உள்ளங்களுக்காகவும்!'' சொல்லும் ஸ்ரீவித்யாவின் குரலில் வழிந்தோடுகிறது நம்பிக்கையும் தாய்மையும்.

****

வர்ஷாவுக்கு உதவ விரும்புவோர்,

The Madras Medical Mission,

Acc No. 497505010066001 (Indian patient), UHID: 20150101060,

Union Bank of India, Mogappair Branch, IFSC Code - UBIN 0549754 க்கு தங்களால் முடிந்த தொகையை வர்ஷாவின் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பலாம்.

தொடர்புக்கு: 09841694133.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in