

அரசு அலுவலகம் போலத் தென்படுகிறது அந்தச் சூழல். ஊழியர்கள் அங்குமிங்கும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் அங்குமிங்கும் நடக்க, அந்த இடமே சந்தைக்கடை போலக் காட்சியளிக்கிறது.
மேலாளர் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவர், யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருக்கிறார். வேறு மாதிரியான பழக்கவழக்கங்கள் (பாலியல் ரீதியில்) தொடர்பான உரையாடல் என்று தெரியவருகிறது. இடையில் தனக்கு 10 வயதில் மகள் இருப்பதையும் குறிப்பிடுகிறார். பின்னர் அவரின் கவனம் அங்கு பணிபுரியும் இளம்பெண் மீனாட்சி மேல் படுகிறது.
பியூனை அழைத்து, ''நம் மடோனாவைக் கூப்பிடு!'' என்றும் கூறுகிறார். வந்துநிற்பவரிடம் அவர் கேட்கும் கேள்விகள் 'ஏ'க ரகமாய் இருக்கின்றன. கவனமாய் அலுவல் சம்பந்தமாய் மட்டும் பேசுகிறார் மீனாட்சி. அதைக் கண்டுகொள்ளாதவரின் கண்கள் வேறெங்கோ மேய்கின்றன. என்ன செய்தார் மீனாட்சி?
</p><p xmlns="">பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒவ்வொரு நொடியும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதுகுறித்த புள்ளிவிவரங்கள் நம்மை அதிரவைக்கின்றன. அலுவலகத்தில், பேருந்தில், கடையில், திரையரங்கில், கூட்டத்தில், ஏன் வீட்டிலே கூட அத்துமீறல் தொடர்கிறது. இதற்கெல்லாம் என்னதான் வழி? கதையின் நாயகி மீனாட்சியைப் பாருங்கள்.</p><p xmlns="">அவரைப் போலவே உங்களின் குரலையும் உயர்த்துங்கள். அப்போதும், மீனாட்சி வெறுமனே நடிக்காதே என்று அவர் பசப்பியது போல நடக்கக்கூடும். கவலை கொள்ளாதீர்கள், தடுக்கச் செல்ல முயன்றவரைத் தடுத்து நிறுத்தும் பெண் போல ஒருவர் துணைக்கு வருவார்.</p><p xmlns="">இந்த முறை எழுவது உங்களின் சுயமரியாதையாக இருக்கட்டும்!</p>