Last Updated : 05 Oct, 2013 09:14 PM

Published : 05 Oct 2013 09:14 PM
Last Updated : 05 Oct 2013 09:14 PM

நகைச்சுவை அபத்தங்கள்

தமிழ்நாட்டில் நகைச்சுவை என்கிற பெயரில் நடந்துவரும் கேலிக்கூத்து மிக ஆபத்தான ஒன்று. 'நகைச்சுவை நாயகர்கள்' உருவில், தமிழ் சினிமாவை அழிக்கும் ஆபத்தான சக்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

என்னைப் பொருத்தவரை, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற படங்கள் எல்லாம், இந்த சமூகத்தின் சாபக்கேடு. இந்த மாதிரியான படங்களை[ பார்த்து எங்கள் களைப்பை மறக்கிறோம், வாய்விட்டு சிரித்து எங்கள் துயரை மறக்கிறோம் என்று சொல்பவர்கள் எல்லாரும், ஆகப் பெரிய சுயநலவாதிகள். இப்படியான படங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது பைத்தியக்காரத் தனத்திற்கு சமம்.

சினிமா என்பது ஒரு கட்புலன் ஊடகம். ஒரு நொடியில் தோன்றி மறையும் ஒரு காட்சி, ஒவ்வொரு தனிமனித மனதிற்குள்ளும் ஏற்படுத்தும் விளைவு மிக பெரியது. இப்படியான நகைச்சுவைப் படங்களில் வரும் வசனங்களும், அதை ஒட்டி வரும் காட்சிகளும், சாதாரண ஒரு பார்வையாளனின் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள், விளைவுகள் உடனடியாக தெரியாது.

பெண் அடிமைத்தனம், சாதியத்தை தூக்கிப் பிடிப்பது என்று இந்த படத்தின் வழியே விதிக்கப்படும் அபாயங்கள் மிக அதிகம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில், எல்லோரையும் கலாய்த்துக் கொண்டும், எதையாவது உளறிக்கொண்டும் இருந்தவர்களை சினிமாவில் அறிமுகம் செய்து, அவர்களை அனாவசியமாக வளர்த்துவிட்டுக் கொண்டிருப்பது மிக பெரிய ஆபத்தான செயல். போராட வேண்டும் என்கிற குணத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க கூடியது இப்படியான கேலியும், கூத்தும். இதற்கான விளைவை இந்த சமூகம் அறுவடை செய்யப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

முதலில் இந்த மாதிரி, ஜாலியா இருக்கணும், எப்பவுமே சந்தோசமா இருக்கணும் என்று சொல்வதே, அபத்தமானது. தன்னை சுற்றி இருக்கும் புரவயக் கூறுகள் எதுவும் உருப்படியாக, நேர்த்தியாக, நேர்மையாக, இல்லாத ஒரு சமூகத்தில் எப்படி ஒரு தனிமனிதன் மட்டும் சந்தோசமாக இருந்துவிட முடியும். அப்படியான சந்தோஷம், கானல் நீராகத்தான் இருக்க முடியுமே தவிர நிஜமாக இருக்க வாய்ப்பே இல்லை.

சினிமா என்கிற ஊடகத்தை பற்றி, அதன் உண்மையான தாக்கம் பற்றி ஒன்றுமே தெரியாத கத்துக்குட்டிகள், அதை கையில் எடுத்து ஆண்டுக்கொண்டிருக்கும்போது, இப்படியான அவலங்களும், ஆபத்துகளும்தான் அதிகம் உருவாகும். காட்சிப்பூர்வமாக ஏதாவது ஒரு சிறு தாக்கத்தை, அனுபவத்தை இந்த மாதிரியான படங்களால் ஏற்படுத்த முடிகிறதா? சினிமா வெறும் வியாபாரம் மட்டும்தானா? எப்படியெல்லாம் பார்வையாளனை யோசிக்க விடாமல் செய்தால், நாம் வெற்றிபெறலாம், பார்வையாளனை முட்டாளாக்கி நாம் நமது பாக்கெட்டை நிரப்பிக் கொள்ளலாம் என்கிற சிந்தனை ஒன்று மட்டும்தான் சினிமாவில் இருப்பவர்களுக்கு இருக்கிறதா?

அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் போதை தரும் வஸ்துவை விற்பதால், அதை எதிர்த்து போராடும் அத்தனை அமைப்புகளும், இப்படி சினிமாவை ஒரு வணிக லாபம் அடையக்கூடிய போதை வஸ்துவாக பார்க்ககூடிய சினிமா வியாபாரிகளை எதிர்த்து ஏன் போராடுவதில்லை? இந்த சினிமா வியாபாரிகள் இப்படி மக்களை நகைச்சுவை, வெறும் பொழுதுபோக்கு என்கிற போதையின் பிடியில் இருந்து மீண்டுவிடாமல் தொடர்ச்சியாக அவர்களுக்கு அந்த போதையை கொடுத்துக் கொண்டே வெற்றி பெறுவது சரி என்றால், அரசின் டாஸ்மாக் மட்டும் எப்படி தவறாகும்?

சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் செய்துகொண்டிருப்பது நகைச்சுவை அல்ல. அது ஒருவிதமான, சுயசொறிதல். ஒட்டுமொத்த சமூகத்தை முட்டாளாக்கி, தங்களை ஒருவிதமான புகழ்பெற்றவர்களாக காட்டத் துடிப்போரின் எதிர்வினை.

சினிமா எனும் ஊடகத்தை மொன்னையாக்கி, அதன் கலைத் தன்மையை தங்களின் வியாபார விருத்திக்காக மாற்றி பயன்படுத்திக் கொண்டு, மக்களை சிரிக்க வைக்கிறோம் என்கிற மாய வலையை போர்த்திக்கொண்டு இவர்களும், இவர்களை இயக்குபவர்களும் செய்வது சமூக சீர்கேடு. இவர்கள் மக்களை சிரிக்க வைக்கவில்லை. மாறாக மக்களை முட்டாளாக்குகிறார்கள். மக்களை முட்டாளாக்க அரசு இயந்திரங்கள் செய்யும் தந்திரத்திற்கு ஈடானது இவர்களின் சிரிக்க வைக்கும் தந்திரமும். ஒட்டுமொத்தமாகவே எதிரில் இருக்கும் அப்பாவிகள் வாழ்வதற்கே தகுதியில்லாதவர்களை போல் சித்தரிக்கும் இவர்கள் செய்வதுதான் நகைச்சுவையா?

பல படங்களில் சந்தானத்தின் நகைச்சுவை வெறும் வார்த்தை ஜாலங்களாக இருக்கும். அப்படியா, அவன் யாருகூட ஓடிட்டான்... ஆங்.. உங்க அக்கா கூட ஓடிட்டான்... இப்படி பல வசனங்களைச் சுட்டிக்காட்டி, சந்தானம் குறித்த மாயைகளை உடைக்க போதுமானவற்றை என்னால் முன்வைக்க முடியும்.

வெறும் வார்த்தைகளால் வடை சுடுவது அல்ல, நகைச்சுவை. இவர்களின் முகத்தில் எப்போதாவது ஒரு நல்ல நடிகனுக்கான ஏற்ற இறக்கத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? மேடையில் இருந்து காது கிழிய கத்திக் கொண்டிருந்த அதே வேலையை, சினிமாவிலும் செய்துகொண்டு, அதன் மூலம் புகழையும், பணத்தையும் சம்பாதித்து, அடுத்த சந்ததிக்கும், இன்றைய தலைமுறைக்கும் சேர்த்தே இவர்கள் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவில் நுழைந்த பின்னராவது குறைந்தபட்சம், சினிமாவைப் பற்றி கொஞ்சம் அறிந்து, அதற்கேற்றார் போல தங்களை தகவமைத்துக் கொள்வதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்து விட முடியும். ஆனால் அப்படி மாற்றிக் கொள்வது அத்தனை எளிதான விசயமில்லை. அதற்காக நிறைய மெனக்கெட வேண்டும். அதற்காக உழைக்கும் காலக்கட்டத்தில் இன்னும் இரண்டு படங்களில் நடித்து எப்படியாவது மேலும் பல கோடிகளை தங்கள் பாக்கெட்களில் நிரப்பிக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கிறதே தவிர, சினிமா என்பது எப்பேர்பட்ட ஒரு ஊடகம், அது எத்தகைய சக்தி வாய்ந்தது, அதன் உள்ளார்ந்த மொழி என்ன போன்ற எந்த அடிப்படைகளையும் இவர்கள் கற்றுக்கொள்ள, தெரிந்துக் கொள்ள விரும்புவதே இல்லை. மாறாக சினிமாவை இவர்கள் வேறுவிதமான, முழுக்க முழுக்க வணிகர்கள் புழங்கும் இடமாக நினைத்துக் கொண்டு, பெரும்பாலான வணிகர்களிடம் இருக்கும் நேர்மையற்ற, தாங்கள் சார்ந்து இருக்கும் வணிகத்தை கொஞ்சமும் நேசித்திராத, ஒரு பொதுபுத்தி வியாபாரியாகவே இவர்கள் கடைசி வரை இருந்து விடுகிறார்கள்.

இப்படி ஒருத்தர் இருந்தார், அவர் எப்படிபட்டவர், எப்பேர்பட்ட நகைச்சுவை நாயகன், இவர் நடித்து எத்தனை படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது, இவர் இல்லாமல் கதாநாயகர்களே நடிக்க விரும்புவதில்லை, தமிழ் சினிமாவின் வெற்றியை கட்டமைப்பதில் இவர் பெரும்பங்கு வகித்தார் என்பதை நிறுவ நிறைய வெகுஜன ஆய்வாளர்களும், இதழ்களும் இருக்கும் வரை இவர்களுக்கு சினிமா எத்தனை சக்திவாய்ந்த ஒரு கலை ஊடகம் என்பதிலோ, அதன் வழியே இவர்கள் இந்த சமூகத்தில் விதைக்கும் நஞ்சு பற்றியோ பெரிய அக்கறை ஒன்றும் இருக்கப்போவதில்லை.

சினிமா இப்படிதான் இருக்க வேண்டும் என்றோ, நகைச்சுவை படங்கள் எல்லாம் இந்த சமூகத்திற்கு தேவையே இல்லை என்றெல்லாமோ நான் சொல்லவில்லை. ஆனால் சினிமாவை வெறும் வணிக / கேளிக்கைக்கான இடமாக மட்டும் நினைத்துக் கொண்டு, எந்தவிதமான சமூக பொறுப்புணர்ச்சியும் இல்லாமல், யாரையும், எப்படியும் கலாய்த்து, எப்படியோ மக்களை சிரிக்க வைத்து, அவர்களை ஒட்டுமொத்தமாக இரண்டு மணி நேரம் மடையர்களாக இருக்கவைத்து, தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்ள நினைத்தால், அதை அனுமதித்துவிட்டு, வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

சினிமாவில் பணம் சம்பாதிப்பதை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், சினிமாவை வெறும் பணம் சம்பாதிக்கும் களமாக மட்டும் பார்த்தால் அதைத் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது. தினக்கூலி வாங்கும் வெகு சாதாரண மனிதன் கூட ஒருபோதும், தனக்கு வேலையளிக்கும் முதலாளியை, துறையை வெறும் பணம் கொடுக்கும் இயந்திரமாக பார்க்க மாட்டான். ஆனால் சினிமாவில், புகழையும், பணத்தையும் சம்பாதித்துக் கொண்டு சினிமாவின் அடிப்படை கூட தெரியாமல், கடைசி வரை கத்திக் கொண்டிருப்பதே, பிறரை இழிவாகப் பேசிக்கொண்டிருப்பதே காமெடி என்று இவர்கள் நினைத்தால் அதை எப்படி ஏற்க முடியும்?

இந்த நாடு ஒன்றும், முதலாம் உலக நாடு அல்ல, இங்கே கலை, அது இது என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது. மக்களுக்கு பொழுதுபோக்கு சாதனம் ஒன்று வேண்டும், அதை சினிமாவில் அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள், என்று மிகக் கேவலமான வாதத்தை முன்வைத்து இங்கே பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது அபத்தத்திலும், அபத்தம். முதலாம் உலக நாடுகளில் இப்படி கேளிக்கைகளை விரும்பினால் கூட சரி என்று விட்டுவிடலாம். அவர்கள் அடிப்படை வசதிகள் உட்பட எல்லாவற்றிலும் தன்னிறைவு அடைந்தவர்கள். அவர்களுக்கு கேளிக்கை தேவைப்படுவதில், அதை தங்களிடம் இருக்கும் பணம் கொண்டு நிறைவேற்றிக்கொள்வதை ஏதோ கொஞ்சம் அனுமதிக்கலாம். ஆனால் அதையும் நான் சரி என்று சொல்லிவிடவில்லை. நிலைமை அப்படி இருக்கும்போது, இன்னமும் வளர வேண்டிய, தங்களின் அடிப்படைகளை அரசு இயந்திரங்கள் தின்றுக் கொழுத்துக் கொண்டிருக்கும் நாட்டில், தொடர்ச்சியாக மக்களை முட்டாள்களாக, சிரிக்க வைத்து, சிரிக்க வைத்து அவர்களின் பொழுதுகளை வீணாக்க சினிமா துணை புரிய வேண்டும் என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?

இந்தியாவை விட பல்வேறு வகையில், பிரச்சினைகளை சந்திக்கும் ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் திரைப்படங்கள் உலக சினிமா சந்தையில் எப்படி வீறு நடைபோடுகிறது. இங்கே இருப்பவர்களுக்கு என்ன கேடு? எல்லா வசதிகளும் கேட்ட அடுத்த நொடியில் கிடைக்கும் வகையில் இங்கே சினிமா பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் உலக அளவில் இது எங்கள் ஊர் படம், இது எங்கள் நாட்டுப் படம் என்று நாம் மார்தட்டிக் கொள்ள ஏதாவது படங்கள் வெளிவருகிறதா? குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல, ஏதாவது ஒரு வகையிலான படம் வெற்றிபெற்றால், தொடர்ந்து அதையே டிரெண்ட் என்று சொல்லிக்கொண்டு, அப்படியான படங்களையே தயாரித்தும், இயக்கிக் கொண்டும், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எப்போதும் புது முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவு இருந்துக் கொண்டேதான் இருக்கிறது. புதிதாக முயல்கிறோம் என்கிற பெயரில் அபத்தங்களை விதைத்துவிட்டு, இங்கே புதிய முயற்சிகளுக்கு ஆதரவு இல்லை, எனவே நாங்கள் வெற்றிபெறும் படங்களின் சூத்திரங்களையே பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது மிகக் கேவலமான செயல். சினிமா, ஒட்டுமொத்த கலைகளும் சங்கமிக்கும் ஒரு இடம். இங்கே இயங்கும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் ஆளுமை பெற்றவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக சினிமாவை கையில் எடுத்துக் கொண்டு, சிறப்பாக தங்களுக்கு ஒரு வியாபாரப் பொருளை உற்பத்தி செய்து தரக்கூடிய தொழிலாளிகளையே வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.

சினிமா வெறும் வியாபாரம் இல்லை, இது கலைகளின் ஒட்டுமொத்த சங்கமம் என்பதையும், சினிமாவின் ஆளுமைமிக்க கூறுகளை புரிந்துக் கொண்டாலும் இங்கே சினிமாவை அணுகும் விதம் மாறுபடலாம். ஆனால் அதைவிட்டு, எப்போதும் வியாபாரக் கண்ணோடு சினிமாவை அணுகினால், ஒருநாள் நிச்சயம் உங்களின் இருப்பை இந்த உலகம் மறந்துவிடும். சினிமாவை வெறும் வியாபாரமாக மட்டுமே அணுகி, கோடிகளை கொட்டி எடுக்கப்பட்ட எத்தனை படங்கள் படுதோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் அதையே மிக குறைந்த செலவில், ஒரு பரிச்சார்த்த முறையில், சமூக அக்கறையோடு, சினிமா மொழியோடு எடுத்திருந்தால், அந்த திரைப்படம் தோல்வி அடைந்தாலும், எடுக்கப்பட்ட விதத்திற்காக, எடுத்தாளப்பட்ட கருத்திற்காக அந்த திரைப்படம் கலையாக மாறி, மனித இனம் வாழும் காலந்தோறும் உங்களின் பெயரை தாங்கி நிற்கும். ஆனால் சினிமாவை வெறும் வியாபாரமாக பார்ப்பதால், பணமும் கிடைக்காமல், வரலாற்றில் மிக மோசமான ஒரு படிநிலையில் வைத்து, அல்லது உங்கள் பெயரே மறக்கடிக்கப்பட்டு தெருவில் திரிந்துக் கொண்டிருக்கும் நிலைதான் வரும். இப்படி எத்தனை தயாரிப்பாளர்கள் தெருவில் அலைகிறார்கள், எத்தனை நடிகர்கள் இருந்த இடமே தெரியாமல் அழிந்து போனார்கள் என்பதை வரலாறு நமக்கு நினைவுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

நகைச்சுவை என்பதை கூட வெறுமனே எந்தவித உள்ளர்த்தங்களும் இல்லாத, சமூகத்திற்கு கேடு விளைவிக்காத நகைச்சுவை என்றால் அதில் யாருக்கும், எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக இப்போது நகைச்சுவை என்கிற போர்வையைப் போர்த்திக் கொண்டு வெளிவரும் படங்கள், மறைமுகமாக திணிக்கும், மக்கள் முன்வைக்கும் கருத்துகள் மிக மோசமாக இருக்கின்றன. 'எதிர்நீச்சல்' படத்தில், ஒரு பள்ளியில் ஆசிரியரை காதலிக்க, அந்த பள்ளியில் படிக்கும், வீட்டு முதலாளியின் மகனை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்வதும், அந்த சிறுவனை சிவகார்த்திகேயன் நடத்தும் விதமும், எத்தனை அருவருப்பானது. தெருவில், நான்கு இளைஞர்கள் வெட்டியாக உட்கார்ந்துக் கொண்டு, முன்பின் தெரியாத சிறுவனை அழைத்து, தாங்கள் விரும்பும் பெண்ணுக்கு இந்த காதல் கடிதத்தை கொடு, சிகரெட் வாங்கி வா என்று சொல்வது எத்தனை பெரிய வன்முறை. இதே படத்தில் அந்த சிறுவனை பள்ளியில் சேர்ப்பதற்கு அவன் தந்தை படும் துயரத்தை, சமகால கல்விமுறையை எங்காவது ஒரு இடத்தில் ஒரு பேச்சுக்காவது பதிவு செய்து தொலைத்தால் என்ன, இவர்கள் குடியா முழுகிப் போகும்? குறைந்தபட்சம், எப்படியான காட்சிகள் இந்த மாதிரியான படங்களை கெடுக்கிறது என்பதையாவது அவர்கள் அலச வேண்டாமா? இளைஞர்கள் விரும்புவார்கள் என்பதற்காக எதையும் காட்சிப்படுத்தி, பணம் சம்பாதித்து அதை எங்கே வைத்து, என்ன செய்வீர்கள்? நீங்கள் விதைக்கும் நஞ்சு, உங்கள் சந்ததிக்கும் சேர்த்தேதான் அறுவடை செய்யப்படும் என்பதை மறவாதீர்கள்.

தொடர்ச்சியாக, நடுத்தர வர்க்கத்தின் கதை மாந்தர்களையே பெரும்பாலான படங்களில் கதாபாத்திரங்களாக வடிவமைக்கிறார்கள். ஆனால் எந்த படத்திலாவது நடுத்தர வர்க்கத்தின் அன்றாட பிரச்சினைகளை ஒரு இடத்திலாவது பதிவு செய்திருக்கிறார்களா? தனுஷ் நடித்திருக்கும் திருவிளையாடல் ஆரம்பம் என்கிற படத்திலும், தனுஷின் தம்பி ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருப்பார். அவரது தந்தை படாதபாடு பட்டு தனது குடும்பத்தை நடத்திக் கொண்டிருப்பார். தனுஷ் வழக்கம் போல, மைனராக ஊரை சுற்றிக் கொண்டிருப்பார். அவருக்கு ஊறுகாய் அவரது தம்பி. அவரது காதலை வளர்க்கவும், தம்பியை வைத்து, கொஞ்சம் காமெடி பண்ணவும், அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த இடத்திலாவது சமகால கல்வி / நடுத்தர வர்க்க பொருளாதார பிரச்சினைகள் படத்தில் இருந்ததா? சமகால பிரச்சினைகளை பதிவு செய்யாமல் போனாலும் போய்த் தொலையட்டும். குறைந்தபட்சம், படிக்கும் பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என்கிற வரைமுறையாவது இருக்கிறதா? பள்ளியில் படிக்கும் அத்தனை சிறுவர்களும், சிறுமிகளும் இவர்கள் காதலுக்கு தூது போகும், தூதுவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த காதலை நிறைவேற்றி வைக்கவே, பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்கள் பெற்று போட்டது போல் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். திருவிளையாடல் ஆரம்பம், எதிர் நீச்சல் இரண்டு படத்திலும், அதே சிறுவன் கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள். எப்படி இப்படியான நகைச்சுவைப் படங்களை பார்த்துவிட்டு, வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க முடியும்?

அருண்.மோ, கட்டுரையாளர் - தொடர்புக்கு thamizhstudio@gmail.com

வலைத்தளம் www.thamizhstudio.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x