தலாய் லாமா 10

தலாய் லாமா 10
Updated on
2 min read

திபெத்திய புத்தமதத் தலைவர்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா (Dalai Lama) பிறந்த தினம் இன்று (ஜூலை 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l திபெத்தில் டக்ஸ்டர் என்ற கிராமத்தில் (1935) பிறந்தவர். இயற்பெயர் லாமொ தொண்டுப். இவர் பிறந்தபோதே பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு சோதனைகள் நடத்தி, இவர் முந்தைய தலாய் லாமாவின் மறுபிறப்பு என்று முடிவு செய்தனர். இவரது பெயர் ‘டென்சின் கியாட்சோ’ என மாற்றப்பட்டது.

l விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 6 வயதில் கல்வி கற்கத் தொடங்கினார். நாள் முழுவதும் படிப்பு, தியானம், விளையாட்டு என இளமைப் பருவம் கழிந்தது. வயது ஏற ஏற விளையாட்டுகளைக் குறைத்துக்கொண்டு ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினார்.

l 25-வது வயதில் புத்த சமயத் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இறுதி ஆண்டு படிக்கும்போது, தர்க்கம் குறித்த இவரது அறிவை 30 அறிஞர்கள் சோதித்தனர். தேர்வின் இன்னொரு பகுதியாக 15 அறிஞர்களுடன் ஆன்மிக விவாதத்தில் ஈடுபட்டார். இறுதியாக தத்துவம், துறவியர் ஒழுக்கம், விதிமுறைகள் குறித்த இவரது அறிவை 35 அறிஞர்கள் சோதித்தனர். அனைத்திலும் அபாரமாகத் தேர்ச்சியடைந்து முனைவர் பட்டம் பெற்றார்.

l 14-வது தலாய் லாமாவாக 1950-ல் முறைப்படி பொறுப்பேற்றார். திபெத்திய புத்த மதத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரைக் குறிப்பிடும் பெயர்தான் ‘தலாய் லாமா’. தங்களது மரபு வழித் தலைவராக திபெத் மக்கள் இவரை ஏற்றுக்கொண்டனர். ஆனால், திபெத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா இதை ஏற்கவில்லை.

l சீனத் தலைவர்களுடன் 1956-ல் பேச்சுவார்த்தை நடத்தினார். திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்க சீனா தயாராக இல்லை. 1959-ல் திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தஞ்சம் புகுந்தார். அதுமுதல் இந்தியாவில்தான் உள்ளார்.

l திபெத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீனாவிடம் கோரி வருகிறார். ஆனால், சீனாவோ இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயாராக இல்லை. மாறாக, இவரை புரட்சிக்காரராக கருதுகிறது.

l அமைதி, நல்லிணக்கம் தொடர்பாக உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பயிலரங்குகள், உரைகள், கூட்டங்கள் நடத்திவருகிறார். நல்ல பேச்சாளரான இவர், வசீகரமான தலைவராகப் போற்றப்படுகிறார். தியானம் குறித்த பரிசோதனைக்கூட ஆராய்ச்சிகளில் முழு ஒத்துழைப்பு வழங்கியவர். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

l அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ‘ஆன்மிகத்தில் எங்கு பிழை என்று ஆதாரப்பூர்வமாக அறிவியல் நிரூபிக்கிறதோ அதை ஆன்மிகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பார்.

l உலக நாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து 150-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 1989-ல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

l திபெத்துக்கு சுயாட்சி வழங்கும் தனது கோரிக்கையை என்றாவது ஒருநாள் சீனா செவிமடுக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டுவருகிறார். இளைஞராக இந்தியா வந்த தலாய் லாமா தற்போது 81 வயதை எட்டியுள்ளார். இந்த வயதிலும் மிகுந்த உற்சாகத்துடனும், துடிப்புடனும் செயலாற்றி வருகிறார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in