

தமிழறிஞர், பயண இலக்கிய முன்னோடி
பிரபல தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவகர், பதிப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சே.ப.நரசிம்மலு நாயுடு (Se.Pa.Narasimmalu Naidu) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஈரோட்டில் பிறந்தார் (1854). இவரது தாய்மொழி தெலுங்கு. சேலம் பகடால நரசிம்மலு நாயுடு இவரது முழுப் பெயர். திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி. தெலுங்கை முதற்பாடமாகக் கற்றார். மாவட்ட அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.
* படிக்கும் பருவத்திலேயே யாப்பிலக்கண வினா விடை என்ற நூலை எழுதி, தன் தமிழாசிரியர் உதவியோடு வெளியிட்டார். சிறுவயது முதலே கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவை ‘தினவர்த்தமானி’, ‘அமிர்தவசனி’, ‘கஜன மனோரஞ்சனி’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்தன.
 1877-ல் ‘சுதேசாபிமானி’ என்ற இதழைத் தொடங்கினார். முதல் முதலாக ‘சேலம் மாவட்ட பூமி சாஸ்திரி கிரந்தம்’ என்ற நூலை வெளியிட்டார். மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்த ‘சிறந்த கணிதம்’ என்ற நூலை எழுதினார். ‘ஆர்ய சத்திய வேதம்’, ‘தென்னிந்திய சரிதம்’, ‘பலிஜவாரு புராணம்’, ‘தல வரலாறுகள்’, ‘ஆரிய தருமம்’ முதலிய உரைநடை நூல்கள் உட்பட 94 நூல்களை எழுதிப் பதிப்பித்தார்.
* 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானபோது கோவையில் அதன் கிளையை இவர்தான் உருவாக்கினார். முதல் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தமிழகத்தில் இருந்து சென்ற 21 உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
* தென்னகத்தின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, பல சுவடிகளையும் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து, சுமார் 1000 பக்கங்களில் ‘தட்சிண இந்திய சரிதம்’ என்ற நூலை எழுதினார். கோயம்புத்தூரில் ஆரம்பகால தொழில்துறையைக் கட்டமைத்தவர்களில் இவரும் ஒருவர். நீலகிரியின் புகழ்பெற்ற தோட்ட உரிமையாளரான ராபர்ட் ஸ்டேன்ஸின் நிதியுதவியுடன் 1888-ல் கோவை, சி.எஸ். அண்ட் டபிள்யு மில்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று அது ஸ்டேன்ஸ் மில் எனப்படுகிறது.
* போத்தனூரில் கோவையின் முதல் சர்க்கரை ஆலையையும் அமைத்தார். கோவையின் பல புகழ்பெற்ற பொது அமைப்புகள் நரசிம்மலு நாயுடுவால் அமைக்கப்பட்டவை. இப்போது டவுன் ஹால் எனப்படும் விக்டோரியா முனிசிபல் ஹால் இவரது முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது.
* சிறுவாணியில் அணையைக் கட்டி, கோவைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டம் இவரால் முன்வைக்கப்பட்டு வாதாடி கொண்டுவரப்பட்டதுதான். பிரம்ம சமாஜத்தின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக உழைத்த சென்னை மகாஜன சபாவின் செயலாளராகப் பணியாற்றினார்.
* ஏழை பால்ய விதவைப் பெண்களுக்குக் கல்வியளித்து, அவர்களுக்கு மறுவிவாகம் செய்விக்க அறக்கட்டளை ஒன்றை அமைத்தார். 1879-ல் ‘கோயம்புத்தூர் அபிமானி’ என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து ‘கோயம்புத்தூர் பத்ரிகா’ என்ற வாரச் செய்தி இதழை வெளியிட்டார்.
* 1881-ல் கலாநிதி அச்சகம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அன்றாட அரசியல் செய்திகளின் மொழியாக்கம், செய்தி விமர்சனம், சமூக சீர்திருத்தக் கட்டுரைகள், மதச் சீர்திருத்தக் கட்டுரைகள் என இவரது எழுத்து பலதரப்பட்டது.
* பயணக் கட்டுரைகள் எழுதுவதிலும் முன்னோடியாக விளங்கினார். இறுதிவரை தமிழ்த் தொண்டாற்றியவரும், தமிழின் பயண இலக்கிய முன்னோடிகளில் ஒருவருமான சே.ப.நரசிம்மலு நாயுடு 1922-ம் ஆண்டு, 68-வது வயதில் மறைந்தார்.