

“மேகலா..!
அருணுக்கு லீவு விட்டாச்சு.. அப்பாவுக்கு போன் பண்ணி நாம கிராமத்துக்கு வர்றோம்னு சொல் லிடவா..?” சம்பத் கேட்டார்.
“ஹையா..! வசந்த் அண்ணாவோட நல்லா விளையாடலாம்..” - என்று அருண் உற்சாகமாய் சொல்ல, மேகலா மட்டும் “யோசிப்போங்க..” என்று பட்டும் படாமல் பேசினாள்.
“இதுல யோசிக்க என்ன இருக்கு” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பினார் சம்பத்.
கிராமத்தில் சம்பத்தின் வயதான அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள். அண்ணன், விவசாயத் தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் லீவுக்கு அருணை கூட்டிக்கொண்டு அங்கே போய்விடுவார்கள். அருணை விட்டுவிட்டு இரண்டு நாளில் திரும்பி விடுவார்கள். அருண், பெரியப்பா பையனோடு நன்றாக விளையாடி மகிழ, பள்ளி திறக்கும் சமயம் போய்க் கூட்டி வந்துவிடுவார்கள்.
இதனால் அப்பா, அம்மாவுக்கும் சந்தோஷம்.. அருணுக்கும் தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா என்று உறவுகளின் அருமை புரியும் என்று யோசித்துதான் இதுவரை எல்லா லீவுக்கும் கிராமத்துக்குப் போனார்கள். இப்போது மேகலா ஏன் தயங்குகிறாள்.. சம்பத்துக்கு புரியவில்லை.
மாலையில் வீடு திரும்பியதும் மேகலாவிடம் இது பற்றிக் கேட்டார்.
“ஏங்க.. உங்க அண்ணன் பையன் வசந்த்தும் சின்னப் பையன்தானே .. அவனுக்கும் லீவுல எங்கேயாவது ஊருக்கு போகணும்னு ஆசை இருக்காதா.. அதனால், இந்த வருஷம் நாம போக வேணாம். அவங்க எல்லோரையும் இங்கே வரச் சொல்லி, சேர்ந்து எங்கேயாவது போவோம். அப்புறம், பெரியவங்க ஊருக்குப் போயிட்டாலும், வசந்த்தை லீவு முடியும் வரை இங்கேயே இருக்கச் சொல்லி நம்ம ஊரை சுற்றிக் காட்டுவோம்.. என்ன சொல்றீங்க?”
“ஆஹா ..! இது எனக்கு தோணலையே.. இப்பவே அப்பாவுக்கு போன் பண்ணி எல்லோரையும் இங்கே வரச் சொல்றேன்” என்று உற்சாகமாக எழுந்தார் சம்பத்.