

அந்தக் கால மெட்றாசில் மிகவும் பேசப்பட்ட எட்வர்ட் மில் என்ற ஜவுளி ஆலை எது என்ற மர்மம் தீர, தகவல் வேண்டி நின்றேன். அந்த ஆலையில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 16 ஆண்டுகள் பணியாற்றியவரின் மகன் ஆர்.ஜே. ஆஷர் கடிதம் மூலம் என் வாட்டத்தைப் போக்கினார். அந்த ஆலையை ‘சூளை மில்’ என்றுதான் மக்கள் அழைப்பார்கள்.
19-வது நூற்றாண்டின் பிற்பகுதி யிலும் 20-வது நூற்றாண்டின் முற்பகுதி யிலும் மெட்றாசில் 2 ஜவுளி ஆலைகள் பிரபலமாக இருந்தன. பெரம்பூரில் ‘பக்கிங்காம் அண்ட் கர்நாடிக் மில்’ என்கிற ஆலையும், சூளையில் ‘மெட்றாஸ் யுனைடெட் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்’ என்ற நிறுவனமும் செயல்பட்டன. பெரம்பூர் ஆலையை ‘பின்னி மில்’ என்றோ ‘பி அண்ட் சி’ என்றோ கூறியவர்கள், இன்னொன்றின் பெயரைச் சொல்ல மெனக்கெடாமல் ‘சூளை மில்’ என்றே அதன் இருப்பிடத்தைக் கொண்டு அடையாளப்படுத்தினார்கள்.
பி அண்ட் சி மில் பிரிட்டிஷாருடையது. சூளை மில் மும்பையைச் சேர்ந்த ‘மூல்ஜி ஜெய்தா அண்ட் கோ’ என்ற நிறுவனத்துக்கு உரியது. இந்தியர்கள் பணத்தில் இந்தியர் கள் நிர்வாகத்தில் இந்திய ஊழியர் களால் ஆலை நடத்தப்பட்டது. இதனா லேயே சூளை மில்லில் மோட்டா ரகத் துணிகளை மட்டுமே நெய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டிருந்தது.
அதனாலேயே அந்த ஆலை நஷ்டம் அடைந்தது. 1939-ல் ஆலையில் பெரிய வேலைநிறுத்தம் நடந்தது. அதே ஆண்டில் பெய்த பெருமழையில் அந்த ஆலையின் பிரம்மாண்டமான புகைப்போக்கி (சிம்னி) உடைந்து நொறுங்கியது. இறுதியாக அந்த ஆலை இழுத்து மூடப்பட்டது.
சூளை ஆலையைப் பிறகு ‘சர்தார் இந்தர்ஜித் சிங் அண்ட் சன்ஸ்’ என்ற டெல்லி நிறுவனத்துக்கு விற்றார்கள். இந்தர்ஜித் சிங்கின் புதல்வர்களில் ஒருவர்தான் சர்தார் பல்தேவ் சிங். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் முதல் ராணுவ அமைச்சராகப் பதவி வகித்தார்.
இந்தர்ஜித் சிங்குக்கு வயதாகிவிட்ட தாலும் அவருடைய புதல்வர்களுக்கு ஆலை நிர்வாகத்தில் ஆர்வம் இல்லாததாலும் சூளை மில் மீண்டும் விற்பனைக்கு வந்தது. இப்போது அதை விலைக்கு வாங்க முன் வந்தது ‘எட்வர்ட் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பெயருள்ள மார்வாடி நிறுவனமாகும். அதற்கு அந்நாளைய மும்பை மாநகரில் ஏற்கெனவே 2 ஜவுளி ஆலைகள் இருந்தன. சூளை ஆலையை மீண்டும் தொடங்க எட்வர்ட் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தது. முந்தைய நிர்வாகம் வைத்துவிட்டுச் சென்று வரி பாக்கியைச் செலுத்தினால்தான் ஆயிற்று என்று பிரிட்டிஷ் அரசு பிடிவாதம் பிடித்தது.
பிறகு அந்த ஆலையை அரசே கைப் பற்றியது. இயந்திரங்களைப் பிரித்து காயலாங்கடைகளுக்கு விற்றது. பின்னாளில் இந்திய உணவு கார்ப்ப ரேஷனுக்கு அந்த இடம் கட்டிடங்களுடன் விற்கப்பட்டது. அங்கே தானியக் கிடங்குகள் அமைக்கப்பட்டன. இப் போது தானியக் கிடங்குகள்தான் அங்கே இருக்கின்றன.
மெட்றாசில் எட்வர்ட் மில்ஸ் என்ற நிறுவனம் எங்கே, எப்படி வந்தது என்ற புதிர் இதன் மூலம் தீர்ந்தது. நகரின் 400 ஆண்டுகால வரலாற்றை எழுத முற்படுகிறவர்கள் இதைப்போல பல மறக்கப்பட்ட தகவல்களை ஆங்காங்கே உள்ளவர்கள் மூலம் திரட்ட முடியும்.
- சரித்திரம் தொடரும்…