Last Updated : 03 Jun, 2017 09:40 AM

 

Published : 03 Jun 2017 09:40 AM
Last Updated : 03 Jun 2017 09:40 AM

ருசியியல் சில குறிப்புகள் 24: காப்பி பரிசோதனைகள்

போன வாரம் வெண்ணெய்க் காப்பி பற்றி நாலு வரி எழுதினாலும் எழுதினேன், காப்பி ரசிகர்கள் வீறு கொண்டு எழுந்துவிட்டார்கள். வரலாறு காணாத அளவுக்கு மின்னஞ்சல் விசாரணைகள். காப்பி எப்படி உணவாகும்? வெண்ணெய் சரி; அதற்குமேல் தேங்காய் எண்ணெயை வேறு ஊற்றினால் காப்பி கந்தரகோலமாகிவிடாதா? சர்க்கரை போடாமல் அதை எப்படிக் குடிப்பது? வயிற்றைப் புரட்டியெடுத்துவிடாதா? இதைக் காலையில்தான் குடிக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்களே, இதெல்லாம் நடக்கிற கதையா?

சந்தேகம் என்று வந்துவிட்டால் தீர்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால் தெய்வ குத்தமாகி விடும்.

வெண்ணெய்க் காப்பி என்பது உலகெங்கும் பல்வேறு தேசங்களில் புழக்கத்தில் இருக்கிற ஒன்றுதான். ஆபீஸுக்குக் கிளம்புகிற அவசரத்தில் சமைத்துக்கொண்டிருக்க முடியாது என்கிற பட்சத்தில் தாராளமாக இதனை முயற்சி செய்யலாம். கண்டிப்பாகப் பசி தாங்கும்.

எப்படி என்று பார்த்துவிடலாமா?

ஒரு நாளைக்கு நமக்கு சுமார் 2,000 கலோரிக்கு உள்ளே சரக்குப் போனால் போதும். இதை அவரவர் சவுகரியத்துக்கு இரண்டு வேளையாகவோ, மூன்று வேளையாகவோ, முப்பது வேளையாகவோ உண்ணலாம். இந்த 2,000 கலோரி என்பது உத்தமபுத்திரர் வாக்கு. நாம் அதையெல்லாம் கேட்கிற வழக்கம் இல்லை என்பதால் சுமார் 2,500 முதல் 3,000 கலோரி வரை உணவாக உட்கொள்கிறோம். முன்னொரு காலத் தில் நான் சுமார் 3,500 கலோரிக்குக் குறைவாகத் தின்றதே இல்லை என்பதை இந்தக் கலோரி அறிவெல்லாம் வந்த பிற்பாடு கணக்கிட்டு அறிந்துகொண்டேன்.

அது இருக்கட்டும். நாம் நமக்குப் போதுமான 2,000 கலோரி விவகாரத்தை முதலில் பார்த்துவிடுவோம்.

2,000 கலோரியை நாம் மூன்று வேளையாகப் பிரித்து உண்ணலாம் என்னும் பட்சத்தில் காலை உள்ளே போக வேண்டியது 500 கலோரி. மதியம் 600 முதல் 700. மிச்சம் உள்ளது ராத்திரிக்கு. இதன் பொருள் காலை 500 இட்லி சாப்பிட வேண்டுமென்பதும், மதியம் 600 ரூபாய்க்கு விருந்துண்ண வேண்டுமென்பதும், இரவு அண்டா நிறைய சப்ஜியுடன் டஜன் கணக்கில் சப்பாத்தி அல்லது பரோட்டாக்களைக் கபளீகரம் செய்ய வேண்டும் என்பதும் அல்ல.

நம் வீட்டில் அம்மா அல்லது பெண்டாட்டி இனத்தவர் நமக்குச் சுட்டுத்தரும் நாலு இட்லிகள் சுமாராக 250 கலோரி. இதற்குத் தொட்டுக்கொள்ள ஒரு கப் சாம்பாரோடு நீங்கள் நிறுத்துவீர்கள் என்றால் அது ஒரு முன்னூறு கலோரி. பத்தாது, ஒரு தேங்காய்ச் சட்னி கூடுதலாக வேண்டும் என்பீரானால் போடு ஒரு நூறு கலோரி. ஆக, இதுவே 650 கலோரி. மேற்கொண்டு உண்ணும் இட்லிகளைக் கணக்கிட்டு கலோரி பார்த்தால் இன்னும் கூடும்.

இவ்வளவும் சாப்பிட்டு ஆபீஸுக்குப் போய் ஒரு டீ அடித்துவிட்டு அதுவும் பத்தாமல் 12 மணிக்கு லேசாகக் கொஞ்சம் கொரித்துவிட்டு மதிய உணவுக்கு உட்காரும்போதும் பசியோடுதான் இருப்பீர்கள். கொலைப் பசியில் உண்டு முடித்த பின் உத்தியோகம் எங்கே பார்ப்பது? மப்பில் மல்லாக்கப் படுக்கத்தான் தோன்றும்.

ஆனால், நான் சொன்ன வெண்ணெய்க் காப்பி என்பது உங்களுடைய இயல்பான உற்சாகத்தையும் செயல்வேகத்தையும் இரு மடங்காக்கித் தரக்கூடிய ஒரு வஸ்து. தவிரவும் சாப்பிட்ட உணர்வே இருக்காது. பசியும் தெரியாது. வெண்ணெய் என்பது பயந்து ஓடவேண்டிய பேய் பிசாசு ரக உணவல்ல; அதில் உள்ளது முற்றிலும் நல்ல கொழுப்பு. ஹார்ட் அட்டாக் அபாயங் கள் ஏதும் கிடையாது. 50 கிராம் வெண்ணெய் எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அதில் சுமார் 350 கலோரிகள் இருக்கும். ஒரு கப் பாலில் (சுமார் 250 கிராம்) நூறு கலோரிகள். முடிந்ததா? எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மட்டும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய். ருசிக்காகவும் இதைச் சேர்க்கலாம். என்னடா இது கொழுப்பு வஸ்து எப்படி எடையைக் குறைக் கும் என்பீர்களானால், நல்ல கொழுப்புதான் எடையைக் குறைக்கும். மாவாட்டிச் சீராட்டும் மசால் தோசை வர்க்கமல்ல.

வழக்கமான காப்பியில் இந்த வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேரும்போது பாலுக்கு பீமபுஷ்டி உண்டாகும். அது உள்ளே போகும்போது அதே புஷ்டி நம் உடலுக்கு வந்து சேரும். அதாவது உள்ளே செல்லும் இந்த நல்ல கொழுப்பு அடி வயிற்றில் போய்த் தங்காமல் நேரடியாக சக்தியாக உருமாறும்.

இந்த வெண்ணெய்க் காப்பியைக் கொஞ்சம் அலங்கரித்தும் குடிக்கலாம். இரண்டு லவங்கம், ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டால் அது ஒரு ருசி. இரண்டு மிளகு, கொஞ்சம் இஞ்சி தட்டிப் போட்டால் அது வேறு ருசி. பெருமாள் கோயில் தீர்த்தப் பொடியைப் பற்றி இந்தப் பகுதியில் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதில் இரண்டு சிட்டிகை எடுத்துப் போட்டுக் குடித்துப் பாருங்கள். பரம சொகுசாக இருக்கும்.

இதனை பிளாக் காப்பியிலும் கடைப் பிடிக்கலாம். பால் கலோரி குறையும் என்பது தவிர அதில் வேறு நஷ்டமில்லை. ருசி மற்றும் திடகாத்திரத்துக்கு வெண்ணெயே போதுமானது. பிளாக் காப்பியாக அருந்தும்போது ஒரு சிட்டிகை உப்புப் போட்டுக் குடித்தால் அதுவும் நன்றாக இருக்கும்.

விஷயம் என்னவென்றால், அடிப்படையில் நூதனமான ருசிகளைத் தேடி ஓட நமக்குப் பெரும்பாலும் நேரம் இருப்பதில்லை. நூற்றாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளவற்றோடு நம்மைப் பொருத்திக்கொண்டு விடுகிறோம். அதில் கொஞ்சம் மாற்றம் காட்டினால் உடனே, ’ஐயே உவ்வே…’ என்று சொல்லத் தோன்றிவிடுகிறது.

மேற்படி வெண்ணெய்க் காப்பி குறித்து முதல் முதலில் கேள்விப்பட்டபோது எனக்கும் ஒரு மாதிரி கசமுசவென்றுதான் இருந்தது. வெண்ணெய் கூட சகித்துக்கொள்ளலாம். அந்தத் தேங்காய் எண்ணெய் என்னத்துக்கு என்று தோன்றியது. உண்மையில் காப்பி ருசிக்குத் தேங்காய் எண்ணெயின் வாசனை ஆகப் பொருத்தமான மணப்பெண். இதை ஒருமுறை அருந்திப் பார்த்த பிறகுதான் உணர முடியும்.

வெண்ணெய்க் காப்பி போல வெண்ணெய் டீயும் போடலாம். செய்முறை எல்லாம் அதுவே தான். காப்பிக்கு பதில் டீ. சர்க்கரை சேர்க்காத கோக்கோ பொடி வாங்கி வைத்துக்கொண்டு வெண்ணெய் கோக்கோ பானமும் தயார் செய்து அருந்தலாம். இந்த ரகமான காலை உணவில் ஒரு விசேஷம் என்னவென்றால், இதில் நம் உடம்புக்குள் போகிற கார்போஹைடிரேடின் அளவு நம்ப முடியாத அளவுக்குச் சொற்பமானது. ஞானஸ்தர்கள் சொல்கிறபடி பார்த்தால் ஒரு நாளைக்கே நமக்கு நாற்பது முதல் ஐம்பது கிராம் கார்போஹைடிரேட் போதும். ஆனால் அது நாம் காலை உண்ணும் நாலு இட்லியிலேயே வந்துவிடுகிறது. அதற்கப்புறம் மத்தியானம் ரவுண்டு கட்டுவது, ராத்திரி கோர்ஸ் எல்லாம் சேர்த்தால் சர்வ பயங்கரம்.

சாப்பாட்டு விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டியது இரண்டு சங்கதிகள்தாம். உள்ளே போவது ஆரோக்கியமானதா? நாக்கில் படும்போது ருசிக்கிறதா? முடிந்தது.

சமீபத்தில் மூணார் சென்றிருந்தேன். அங்கே மசாலா காப்பிப் பொடி என்றொரு வஸ்துவைக் கண்டேன். ஆர்வம் மேலிட உள்ளடக்கம் என்னவென்று பார்த்தபோது ஜாதிக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரமெல்லாம் போட்டிருந்தது. காப்பிக்கு எதற்கு இதெல்லாம் என்று கேட்கப்படாது. மசாலா என்றாலே பட்டை லவங்கம் சோம்புதானா? இது ஒரு மாற்று மசாலா! முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே?

என்ன ஒன்று, இம்மாதிரி பரிசோதனை கள் சமயத்தில் மக்கள் நலக் கூட்டணி மாதிரி ஊற்றி மூடும். அதனாலென்ன? வாழ்வின் ருசி என்பது பரிசோதனைகளில் அல்லவா உள்ளது?

ருசிக்கலாம்… | எண்ணங்களைப் பகிர: writerpara@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x