

சுதந்திரப் போராட்ட வீரர்
‘கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என்று போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (V.O.Chidambaram Pillai) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத் தில் (1872) பிறந்தவர். தாத்தா, பாட்டியிடம் ராமாயண, சிவபுராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். வீரப் பெருமாள் அண்ணாவி என்பவரிடம் தமிழும், அரசாங்க அலுவலர் கிருஷ் ணனிடம் ஆங்கிலமும் கற்றார்.
# தூத்துக்குடி புனித சேவியர் பள்ளி, கால்டுவெல் பள்ளி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பயின்றார். தாலுகா அலுவலகத்தில் பணியாற்றினார். திருச்சியில் சட்டக் கல்வி முடித்து, ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.
# குற்றவியல் வழக்குகளில் கைதேர்ந்தவர். வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்து, காவல்துறையினரின் கோபத்துக்கு ஆளானார். இதனால், இவரை தூத்துக்குடிக்கு அனுப்பிவைத்தார் தந்தை.
# தமிழ் இலக்கியங்கள் குறித்து பல செய்யுள்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். பல ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். சிவஞான போதம் நூலுக்கு வேதாந்த அடிப்படையில் உரை எழுதினார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான ராமகிருஷ்ணானந்தரை இவர் சந்தித்தது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. சுதேசி எண்ணங்கள் குறித்த அவரது கருத்துகள் இவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
# தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், தரும சங்க நெசவு சாலை, சுதேசிய பண்டக சாலை, வேளாண் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைத் தொடங்கி னார். திலகரை அரசியல் குருவாக ஏற்று, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். பிரிட்டிஷாரின் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.
# கொழும்பு சென்று ஒரு கப்பலை வாடகைக்கு ஒப்பந்தம் செய்து போக்குவரத்தைத் தொடங்கினார். ஆனாலும் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. சொந்தக் கப்பல் வாங்க பங்குதாரர்களைத் திரட்ட வட மாநிலங்களுக்கு சென்றார். எஸ்.எஸ்.காலியோ என்ற கப்பலுடன் திரும்பினார். தூத்துக்குடி கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.
# பாரதியாரின் நெருங்கிய நண்பர். தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க, சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து போராடினார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தாராளமாக நிதியுதவி வழங்கியதால், தனது சொத்தில் பெரும் பகுதியை இழந்தார். வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தார்.
# இவரது உணர்ச்சிமிக்க உரைகள், மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை கொழுந்துவிட்டு எரியச்செய்தது. 1908-ல் பொய்க் குற்றம்சாட்டி இவரை ஆங்கில அரசு கைது செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.
# பின்னர், தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டது. கோவை சிறையில் செக்கு இழுக்கவைத்து சித்ரவதைச் செய்தனர். விடுதலையான பிறகு, சென்னையில் குடியேறினார்.
# நாட்டின் விடுதலைக்காக தொழில், சொத்து, சுகம், வாழ்க்கை என அனைத்தையும் தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை 64-வது வயதில் (1936) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்