எங்கே செல்லும் இந்தப் பாதை?

எங்கே செல்லும் இந்தப் பாதை?
Updated on
2 min read

நான் டீச்சர். காலை வகுப்பில் உள்ளே நுழையும்போதே சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் ஆசிரியரைப்போல மாணவர்களும் மலர்ச்சியாக இருப்பார்கள்.

எனக்கு கார்த்தியைப் பற்றி தினமும் ஒரு செய்தி வந்துவிடும்.

கார்த்தி எதோ பெரிய ஆள் நினைக்க வேண்டாம், ஏழாம் வகுப்பு படிக்க வேண்டிய பையன்தான். நுழையும்போது இருந்த உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்துவிடும்.

பொதுவாக முதல் வகுப்பில் இருக்கும் மாணவர்களை உயர் வகுப்பில் இருப்பவர்களுக்கு தெரியாது. ஆனால் கார்த்தியை எல்லோருக்கும் தெரியும். ஐந்து வயதில் அவன் வந்தபோது சாதாரண உயரத்தைவிட உயரம் குறைவு. பார்க்க பாவம் போல இருப்பான். அவன் பற்கள் எல்லாம் கறை.

“ஏன்ப்பா இவ்வளவு கறை?”

பதிலே வராது.

அதுவரை அதை பார்க்காத நான், அது என்ன என்று விசாரித்தபோது, அது 'போதைப் பாக்கு' என்றனர். அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்ய அவன் ஒரு குழந்தை, அவன் தாயிடம்தான் விசாரிக்க வேண்டும் என்று அவர்களை வரச் சொன்னபோது அவர்கள் ஒரே அழுகை.

“அவன் அப்பா ஊர்ல நடந்த வெட்டு குத்து தகாராறுல ஜெயிலுக்கு போய்விட்டு வந்த பிறகு பிறந்த பையன். அதுதான் புத்தி இப்படி இருக்கு. அவர் போய் சேர்ந்துட்டாரு, பெரிய பையனுக்கு வயசு 25 ஆகுதும்மா, கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்காமல் தம்பிகளுக்காக வாழ்ந்துட்டு இருக்காம்மா, இவனை எப்படியாவது திருத்தி நீங்கதான் நல்ல வழி காட்டணும்” என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

வகுப்பில் அவனால் இருக்கவே முடியாது. மூன்றாம் வகுப்பு வந்தபோது, அந்த வகுப்பு ஆசிரியர் அழ ஆரம்பித்துவிட்டார். அதனால் அவனை கவனிக்க வேண்டிய பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் வந்தது. தலைமை ஆசிரியர் நோட்டில் படம், பட்டம் என்று எழுதி அவனை எழுத வைத்து பாராட்டிக் கொண்டே இருப்பார்.

கார்த்தி குட் பாய், நல்லா எழுதி இருக்கானே என்று சொல்லும்போது வெட்கத்துடன் தலை குனிந்து கொள்வான்.

“நல்ல பையன் தானே?”

“ம்.. ம்..” என்பான்.

ஆனால் அந்தக் குழந்தைக்குள் குட்டிச் சாத்தான் போக ஆரம்பித்தது.

கார்த்தி குடிக்க ஆரம்பித்துவிட்டான் என மாணவர்கள் சொன்னபோது நம்ப முடியவில்லை.

“இல்லை டீச்சர், அவங்க அப்பாவுக்கு படையல் வெச்சாங்க... அதில் பாட்டில் இருந்தது. அவன் குடிச்சிட்டு, அதுல தண்ணீர் பிடிச்சு வெச்சுட்டான். அப்ப அவனுக்கு அஞ்சு வயசுதான் இருக்கும்” என்றனர்.

மறுபடியும் இப்போது அதிகமாக ஆரம்பித்துவிட்டான். நான்காம் வகுப்பில் வரவில்லை, குடித்து பெரிய மனிதன் போல கலாட்டா.

“ஏய் ஒனரு வண்டிக்கு வந்ததுக்கு காசு கொடு... ஏய் யாருடா அது” என்று சவுண்ட் விட ஆரம்பித்தான். காசு கிடைக்காதபோது அக்கம் பக்கம் திருட ஆரம்பிக்க, ஊர் மக்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிட்டனர். அவர்கள் வீடு திரும்புவதற்குள் அவன் வீட்டில் இருந்தான்.

அவன் அம்மா அவனை சங்கிலியால் மரத்தில் கட்டி வைத்தார். ஆறாம் வகுப்பில் படிக்க வேண்டியவன் குடித்து விழுந்து கிடந்தான். நாங்கள் வரும் பாதை காட்டு வழி. திடீரென்று வருவானோ என பயந்தோம்.

ஊர் திருவிழா வந்தது. கார்த்தி 'பருத்திவீரன்' கார்த்தி போல நன்றாகக் குடித்துவிட்டு போஸ்ட் கம்பத்தில் மோத தலையில் நல்ல அடி, இரண்டு நாள் கோமா, மூன்றாம் நாள் இறந்துவிட்டான்.

பள்ளி அருகிலேயே சுடுகாடு. மருத்துவமனையிலிருந்து நேரே வந்ததால், பள்ளி நேரத்திலே எரிக்க, கார்த்தியின் புகையை பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஆறாம் வகுப்பு படிக்க வேண்டிய பையன் சாராயத்தால் இறந்துவிட்டான் என்றால் தவறு யாருடையது?

சமூகம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

கட்டுரையாளர் - தொடர்புக்கு venikn10@yahoo.com

| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் |

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in