Published : 30 Aug 2016 10:15 am

Updated : 14 Jun 2017 18:32 pm

 

Published : 30 Aug 2016 10:15 AM
Last Updated : 14 Jun 2017 06:32 PM

ஜாக் லூயி டேவிட் 10

10

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர்

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர் ஜாக் லூயி டேவிட் (Jacques Louis David) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (1748) பிறந்தார். இவர் 9 வயது சிறுவனாக இருந்தபோது, இரும்பு வியாபாரியான தந்தை ஒரு மோதலில் கொல்லப்பட்டார். கட்டிடக் கலை நிபுணர்களான மாமன்களிடம் வளர்ந்தார். அவர்கள் இவரை நன்கு படிக்க வைத்தனர்.

*அம்மா, மாமாக்கள் கூறியபடி, கட்டிடக் கலை பயின்றார். தனிமை விரும்பியான இவருக்குப் படிப்பில் அதிக கவனம் செல்லவில்லை. இவரது ஆர்வம் முழுவதும் ஓவியம் வரைவதில்தான் மையம் கொண்டிருந்தது.

*தூரத்து உறவினரும், ஓவியருமான ஃபிராங்கோயிஸ் பவுச்சரிடம் ஓவியம் பயின்றார். பின்னர், இன்னொரு ஓவியரான ஜோசஃப் மரி வியென்னிடம் சேர்ந்தார். அவர் கூறியபடி, சரித்திரச் சம்பவங்களை ஏராளமாக வரைந்தார்.

*17 வயதில் தொடங்கிய இவரது ஓவியப் பயணம் நாளுக்கு நாள் மெருகேறியது. 6 ஆண்டுகளில் பிரான்ஸின் சிறந்த ஓவியரானார். ஓவியத் துறையில் மிக உயர்ந்ததான ‘பிரிக்ஸ் டி ரோம்’ விருது பெறும் போட்டியில் 3 முறை தோல்வியைத் தழுவி, 4-வது முறை அந்த விருதை வென்றார்.

*பிரெஞ்ச் அகாடமி இயக்குநராகப் பதவி ஏற்கச் சென்ற ஆசிரியருடன் இவரும் ரோம் நகருக்கு சென்றார். அங்குள்ள சிற்பங்கள், உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் ஆகியவை இவருக்குள் பல புதிய சாளரங்களை திறந்துவிட்டன. ரோமின் அழகிய காட்சிகள், கட்டிடங்களை ஓவியமாக வரைந்தார்.

*பாரிஸ் திரும்பிய பிறகும், ஏராளமான ஓவியங்களை வரைந்தார். அவற்றையும், ஏற்கெனவே ரோமில் வரைந்த ஓவியங்களையும் மக்களின் பார்வைக்கு வைத்தார். அவை மகத்தான வரவேற்பை பெற்றன. 1784-ல் இவர் வரைந்த ‘ஓத் ஆஃப் ஹொராட்டி’ என்ற ஓவியம் பிரான்ஸின் முன்னணி ஓவியராக இவரை உயர்த்தியது. ஓவியம் கற்க இவரிடம் ஏராளமான மாணவர்கள் சேர்ந்தனர்.

*கடமை, தேசப்பற்று, விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை கருவாகக் கொண்டு இவர் தீட்டிய ஓவியங்கள் அரசியல் முக்கியத்துவம் பெற்றன. பிரெஞ்சுப் புரட்சியின் ஆரம்பகட்டத்தில், மக்களிடம் இவை மாபெரும் எழுச்சியை ஊட்டின.

*மக்கள் இயக்கத்தில் இணைந்து பல பதவிகளை வகித்தவர், பல இடங்களில் எழுச்சிமிக்க உரையாற்றினார். இதனால், ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். ஒருமுறை கில்லட் வெட்டுக் கத்திக்கு பலியாகும் ஆபத்தில் இருந்து உயிர்த் தப்பினார்.

*பிரிட்டன் செல்வந்தர் ஒருவருக்காக மாவீரன் நெப்போலியன் ஓவியத்தை வரைந்தார். நெப்போலியன் தொடர் வெற்றிகளைக் குவிக்க, அவரது வீரத்தால் டேவிட் கவரப்பட்டார். தன் புகழைப் பரப்பவும், ராணுவத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும் இவரது ஓவியங்கள் பயன்படும் எனக் கருதிய நெப்போலியன், அரசின் தலைமை ஓவியராக இவரை நியமித்தார்.

*நெப்போலியன் வீழ்ச்சி அடைந்தபோது, ஆட்சியாளர்களால் இவருக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறி பிரஸல்ஸ் சென்றார். இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். உலக ஓவிய வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த ஜாக் லூயி டேவிட் 77-வது வயதில் (1825) மறைந்தார்.


ஜாக் லூயி டேவிட்பிரிட்டன் செல்வந்தர்ஃபிராங்கோயிஸ் பவுச்சர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author

10

பாப்பா உமாநாத் 10

வலைஞர் பக்கம்
10

மே.வீ.வேணுகோபாலன் 10

வலைஞர் பக்கம்
10

ஹோமி சேத்னா 10

வலைஞர் பக்கம்