Last Updated : 31 Mar, 2014 09:53 PM

Published : 31 Mar 2014 09:53 PM
Last Updated : 31 Mar 2014 09:53 PM

எங்கேயும் எப்போதும் அச்சம் தரும் நெடுந்தூர பஸ் பயணங்கள்!

அடிப்படையில் சென்னையை சேர்ந்த நான் தஞ்சையில் பொறியியல் படித்தேன். சென்னையிலிருந்து தஞ்சைக்கும் திருச்சிக்கும், பின் அங்கிருந்து சென்னைக்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் பதினாறு பயணங்கள் மேற்கொள்வதுண்டு. கல்லூரி முடித்து இரண்டு வருடங்களாகிவிட்டது சமீபத்தில் கல்லூரி செல்கையில் எதிர்கொண்ட பயணம் நான்கு வருடங்களில் சந்தித்த அனுபவங்களிருந்து வழுவாமல் நின்றுகொண்டிருப்பது, முன்பு சந்தித்த அதே அதிருப்தியை மீளச் செய்தது.

சாதாரண நாட்களில் இருநூறு ரூபாயில் தொடங்கி நானூற்று ஐம்பது ரூபாய் வரை வசூல் செய்கின்றன இத்தனியார் பேருந்துகள். இங்கே காசு வாங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற அக்கறை பயணிகளின் நலனிலும் பாதுகாப்பிலும் துளி அளவில் கூட தென்படாமல் போகின்றது.

பத்து மணிக்கு பஸ் புறப்பட்டுவிடும்... நேராக சென்னைக்கு தான் என்று கூறி பேருந்தில் ஏற்றுவார்கள். பத்துமணி பத்தரையாகும், பின் பதினொன்றாகும் பேருந்து அப்படியே அசைவின்றி கிடக்கும். மெல்ல மெல்ல பேருந்தினில் அமர்ந்துள்ள ஒவ்வொருவரும் அமைதி இழக்கத் துவங்குவர். "யோவ் எப்போயா வண்டி எடுப்ப?" என்று இருக்கையில் அமர்ந்துகொண்டே கூக்குரலிடுவர்.

ஒட்டுனரிடமிருந்தோ, நடத்துனரிடமிருந்தோ எவ்வித விடையும் பிறக்காது. அமர்ந்திருப்பவர் ஒருவர் இறங்கத் தொடங்கினால் அப்படியே ஐந்து பேர் இருக்கையிலிருந்து விலகி சண்டையிட்டு ஓட்டுனரை வண்டி எடுக்கக் கூறுவர். "சரி, சரி ஒக்காருங்க சார் போகலாம்'" என்று கூறி நடத்துனர் அவர்களை அமர வைக்க, வண்டி புறப்படும்.

புறப்பட்டு ஒரு பத்து அடிகள் எடுத்து.. ஊஹும், பத்து அடிகள் கூட எடுக்காமல் 'டர்டர்' என்று ஊளையுடன் நின்றுவிடும். மீண்டும் நடந்துனரின் ஆனந்தக் குரலில் 'சென்னை சென்னை' என்ற இரைச்சல் பயணிகளின் செவிகளில் எட்டும். பேருந்தில் ஒரு சீட் மிச்சமிருந்தால் கூட வண்டி புறப்படாது.

மேற்கூறிய கதை வாடிக்கையாக திருச்சி ஆம்னி பஸ்களில் சந்தித்த அனுபவங்கள்.

சென்னையில் பிரைவேட் பஸ் பிடிக்கும் போது கிடைக்கின்ற அனுபவம் மேல்கூறியவற்றிலிருந்து சற்று விலகியே நிற்கிறது. சென்னையிலிருந்து புறப்படும் பேருந்துகள் பொதுவாக ஒரே பேருந்து நிலையத்தில் வெகு நேரம் நிற்பதில்லை. இப்போது கோயம்பேட்டில் அரைமணி நேரம் கழித்து புறப்படும் பேருந்துகள் அசோக் நகரில் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரமும், பின் கிண்டியில் இருபது நிமிடமும், தாம்பரம், பெருங்களத்தூரில் ஒரு மணி நேரம் வரையும் நிற்கின்றது. ஏறத்தாழ இரண்டு புறமும் பேருந்துகளின் காத்திருப்பு ஒரே நிலையில் தான் காணப்படுகின்றது. என்ன, இங்கே பஸ் ஒரு ஸ்டாப்பில் நிற்பதில்லை மாறாக ஸ்டாப்பிற்கு ஸ்டாப் நிறுத்தப்படுகிறது.

பத்து மணிக்கு கோயம்பேட்டில் புறப்படும் பேருந்துகள் சில தருணங்களில் பன்னிரண்டு, ஒரு மணி வரை தாம்பரத்திலே டேரா போடப்படுகிறது. ஏறத்தாழ இருபத்தியிரண்டு கிலோ மீட்டர் வித்தியாசம். இதை அடைய இவர்கள் சில சமயங்களில் மூன்று மணி நேரம் வரை எடுத்துக்கொள்கின்றனர்.

இவர்களின் நடத்தையைத் தட்டிக் கேட்கும் பயணிகளுக்கு ஓட்டுனர் கூறும் பொதுவான பதில் 'சார் காலைல அஞ்சு மணிக்குள்ள ஊருக்கு போய்டலாம்'.' ஐந்து மணி என்று கூறி எப்படியும் ஆறு மணிக்குள் கரை சேர்த்து விடுகின்றனர் இவர்கள்.

சுமார் ஒரு மணிவரை தாம்பரத்தில் நிற்கின்ற பேருந்து ஐந்து மணி நேரத்திற்குள் திருச்சி வந்தடைகின்றது. இருபது கிலோமீட்டர் கடக்க இரண்டு மணி நேரத்திற்கு தடவிய அதே வண்டியே இப்போது முந்நூறு கிலோமீட்டரினை நான்கு மணி நேரத்தில் கடக்கிறது. அப்போது வண்டியின் வேகம் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். பல பேருந்து விபத்துகள் இப்படித் தான் நடக்கின்றது.

ஒரு முறை 'நடுவுல சீட் இருந்தாதான் வருவேன்' என்றார் ஒரு பயணி. நடத்துனர் காசு வாங்கிக் கொண்டு 'நடுவுல தான் இருக்கு போய் ஒக்காருங்க' என்று கூறி அவரை அனுப்பி வைத்தார். பாவம் அவருக்கு கிடைத்தது கடைசி இருக்கையில் நடுவில் தனித்து இருந்த இருக்கை. இதை கண்டு வெகுண்டு பேசிய பயணியிடம் காசெல்லாம் திருப்பித்தர முடியாது; வேண்டாம் என்றால் இறங்கிப் போங்க அந்த சீட் மட்டும் தான் பாக்கி என்று கடுக்காய் கொடுத்து விடுகின்றனர். போதாத குறைக்கு பயணிகளை அனைவரின் முன் ஏசுகின்றனர். டிக்கெட் வாங்கும் வரை இருக்கின்ற மரியாதை அப்படியே காசு கொடுத்த பிறகு முற்றிலும் முரண்பட்டு மாறுகிறது.

ஆம்னி பஸ்ஸினை பொறுத்தவரை தனியே பயணிக்கும் பயணிகளுக்கு இது தான் நிலை. அதிலும் முழிக்கும் காலேஜ் பையனை பார்த்தாலே அவ்வளவு தான், ஆடு சிக்கிடுச்சு என்று மஞ்சத் தண்ணி தெளித்து விடுகின்றனர். நடத்துனர் தம்பி இங்க ஒக்காரு அங்க ஒக்காரு என்று மாற்றி மாற்றி அமர்த்திக் கொண்டே இருப்பார். முக்கால் பான்ட், அரை பான்ட் போட்டு இங்கிலீஷ் பேசும் ட்யூட் பாய்ஸ்களிடம் (Dude boys) முடிந்தவற்றை கறந்துவிடுகின்றனர்.

இவர்களுக்கு சட்டத்தை பற்றிய பயம் இருப்பதாகக் கூட தெரியவில்லை பேருந்து நிலையத்தின் வெளியிலே காவலாளி நின்று கொண்டிருக்கிறார் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் படம் திருட்டு டிவீடியால் பஸ்ஸினில் திரையிடப்படுகிறது.

அதிக கட்டணத்தை எப்போதும் வசூல் செய்யும் பெயர் பெற்ற ஆம்னி பஸ்கள் மேற்கூறிய குறைப்பாடுகளிருந்து விலகி நிற்பது உண்மையே. அவர்கள் டிக்கெட் வாங்கும் பொழுதே எங்கே ஏற வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அங்கே தான் பயணி ஏற வேண்டும் புறப்படும் நேரம் வந்துவிட்டால் இருக்கைகள் மீதம் இருந்தால் கூட வண்டி புறப்பட்டுவிடும். ஆனால் இப்பேருந்துகளில் பயணிக்கும் வசதி எல்லோருக்கும் கிடைப்பதில்லையே!

தனியார் பேருந்துகளில் காணப்படுகின்ற காத்திருப்பு அரசுப் பேருந்துகளில் அவ்வளவாக இல்லை, அதற்காக இங்கே சொகுசு பயணம் கிடைக்கிறது எனக்கூற முடியாது. அரசுப் பேருந்துகளில் சில பேருந்து நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு நிகராக தபக்கு தபக்கு என்று தூக்கிப் போடும் டப்பா பேருந்துகளும் இருக்கின்றன.

இரவு இரண்டு மணிக்குள் தட்டி எழுப்புவதை தார்மீகக் கடமையாக அரசுப் பேருந்துகள் கொண்டுள்ளன. திருச்சிக்கு சென்னை வழியாக செல்லும் பேருந்துகள் நடுநிசியில் விக்கிரவாண்டியில் நிற்கும். அங்கே அப்படியே ஜகஜோதியான ஒரு சூழல். பேருந்துக்குள் பல பேர் ஏறி சார் கடலை சார், வாட்டர் பாக்கெட் சார், டிபன் சாபிடவாங்க வண்டி கிளம்பாது என்று கட்டிய குரலில் கூவுவதுண்டு. பேருந்து நிலையத்தில் வேறு ஹை டெசிபலில் 'ஏய் பையா குடிகாறா சாராயத்த குடிக்காதடா, சாராயத்த குடிச்சுபுட்டு குடல் வெந்து சாகாதடா' இப்படி வாழ்நாளில் கேட்டிடாத பாடல்களை உஷ்ணக் குரலில் பாடவைத்து இரைச்சல்களை எழுப்புகின்றனர். உங்களுக்கு நான் தூங்க கூடாது அவ்வளவு தானே, ரைட்டு என்று நம்மையே உளற வைத்து விழிக்கச் செய்கின்றனர்.

பொதுவாக பேருந்துப் பயணங்களை அவசரத்திற்குதான் நாடுகின்றோம். பயணத்தின் காரணம் ஒரு நேர்காணலாக இருக்கலாம், தேர்வாக இருக்கலாம், மகிழ்ச்சி செய்தியாக இருக்கலாம், ஏன் மனதை உலுக்கும் ஒரு சோகமாகக் கூட இருக்கலாம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமான நினைவுகளை சுமந்து செல்கிறோம் இதை நடத்துனரும் ஓட்டுனரும் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறுவது அபத்தமானது. ஆனால், கொஞ்சமாவது பேருந்தினில் ஏறியவர் மீது கரிசனம் காட்டலாம் அல்லவா? இரவு வரை முழித்து இருப்பது இவர்களின் கடமை, அதற்கு உள்ளே பயணிப்பவரின் உறக்கத்தை கெடுத்து, அச்சத்தை வரவழைத்து இவர்கள் கொடுக்கின்ற அனுபவங்கள் இருக்கிறதே ச்சேசே என்று எரிச்சலைத் தான் வரவழைக்கிறது.

பஸ்ஸில் ஏறுபவர்களுக்கு கண்டிப்பாக அடுத்த நாள் வேலை இருக்கும், அவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கும், கடமை இருக்கும். அமைதியான பயணம் தந்து அவர்களை உறங்க விடுங்கள். எங்கேயும் எப்போதும் திரைப்படம் கொடுத்த தாக்கத்தை ஒவ்வொரு ஆம்னி பஸ் பயணத்தின் போதும் உணருகிறோம். பேருந்து ஓட்டுபவர்கள் நாற்பது உயிர்களை கையில் சுமந்து செல்லும் கடவுள் என்பதை உணர்ந்து நிதானமாக ஓட்டிச்சென்றால் விபத்துக்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

பேருந்தில் நல்ல இரவுப் பயணத்தை எதிர்ப்பார்க்கும் ஓர் ஆசை இன்று ஏக்கமாக மாறி வருவதை நினைத்தால் வருத்தமாகத் தான் இருக்கிறது.

ஹரி, தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x