

கவிதைகள் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகள் உடனடி சமூக மாற்றத்தை நிகழ்த்துவது வெகு அரிதாகத்தான் நிகழும். அமெரிக்கக் கவிஞர் ஆலென் கின்ஸ் பெர்கின் ‘ஓலம்’ (ஹவுல்) கவிதையும் அப்படிப் பட்ட அரிதான கவிதைகளுள் ஒன்று.
பெருந்திரளான மக்கள் முன்னிலையில் கின்ஸ் பெர்க் இந்தக் கவிதையை 1955-ல் இதே நாளில் முதன்முறையாக வாசித்தார். அதைப் பற்றி மெக்கிலர் என்பவர் இப்படி எழுதுகிறார்: “கின்ஸ்பெர்க் கவிதையை வாசித்து முடித்ததும் நாங்கள் வியப்பில் நின்றிருந்தோம். ஒரே ஆரவாரம், உணர்ச்சிப் பீறிடல்கள். ஆனால், எங்கள் ஆழ்மனதின் அடியில் ஒன்றை நாங்கள் உணர்ந்தோம்: பெரும் தடைக்கல் ஒன்று தகர்த்தெறியப்பட்டுவிட்டது. அமெரிக்காவின் இறுகிய சுவரின் மீது மனிதக் குரல் ஒன்றும் உடல் ஒன்றும் வீசப்பட்டுவிட்டன.”
இப்படி உணர்ச்சிவசப்படுவதற்குக் காரணம் என்ன? இரண்டு உலகப் போர் களுக்கும் பிறகு மேற்குலகு, குறிப்பாக அமெரிக்கா ஆன்மரீதியிலான வறுமையால் தவித்தது. அனைவரும் ஒருவித வெறுமை யுணர்வை அனுபவித்தனர். பொருள், பணம் சார்ந்த வாழ்க்கைமீது அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. தங்கள் ஆன்மாவை நிரப்பக்கூடிய ஒரு வாழ்க்கையை அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அதற்கு அமெரிக்க வாழ்க்கை உகந்ததல்ல என் பதையும் உணர்ந்தார்கள். ‘ஓலம்’ கவிதை இந்த ஆன்ம வெறுமையை மக்களுக்கு நெற்றியில் அடித்தாற்போல சுட்டிக்காட்டியது.
‘ஓலம்’ கவிதை, ‘பீட்’ யுகத்தின் முகவுரையாகப் பார்க்கப்பட்டது. மாற்றுக் கலாச்சார மான ‘பீட்’டைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக கலைஞர்கள், சமூகம் அவர்கள் மீது திணித்த வற்றையெல்லாம் உதறித்தள்ளினார்கள்; பாலியல் சுதந்திரத்தை அனுபவித்தார்கள். கூடுதலாக, மதங்கள் மீது ஈர்ப்பு, பொருள் சார்ந்த வாழ்வைத் துறத்தல் இவையெல்லாம்தான் ‘பீட்’ கலாச்சாரத்தின் அடிப்படைகள்.
‘ஓலம்’ கவிதையை உள்ளடக்கி கின்ஸ் பெர்க்கின் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது, ‘ஆபாச இலக்கியம்’ என்று அவர்மீதும் வெளியீட்டாளர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு பிறகு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது வேறு கதை.