

ஹாரிபாட்டர் நாவலாசிரியர்
ஹாரிபாட்டர் கதை மூலம் உலகையே புரட்டிப்போட்ட நாவலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளரான, ஜே.கே. ரவுலிங் (J.K. Rowling) பிறந்த தினம் இன்று (ஜூலை 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l இங்கிலாந்தின் பிரிஸ்டல் என்ற நகரில் பிறந்தார் (1965). வாய்டீன் ஸ்கூல் அன்ட் காலேஜ் பள்ளியில் பயின்றார். தன் பாட்டி கொடுத்த பிரபல எழுத்தாளர் ஜெசிக்கா மில்ட்ஃபோர்டின் சுயசரிதை நூலைப் படித்ததி லிருந்து மில்ட்ஃபோர்ட் இவரது ஹீரோயின் ஆகிவிட்டார்.
l பாரீசில் 1986-ல் எக்சிடர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிறகு லண்டன் திரும்பிய இவர், 1988-ல் சிறுகதை ஒன்று எழுதினார். பின்னர் மான்செஸ்டர் சென்றார்.
ஒருமுறை மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்லவிருந்தபோது அவரது ரயில் 4 மணி நேரம் தாமதமாக வந்தது. அப்போது சுழன்ற இவரது கற்பனையில் பிறந்தவன்தான் மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் ஹாரிபாட்டர். வீடு திரும்பிய உடனேயே இந்தக் கதையை எழுத ஆரம்பித்துவிட்டார். ஹாரிபாட்டர் கதையில் வரும் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆல்பஸ் டம்பிள்டோர் என்ற கதாபாத்திரத்தை தனக்கு மிகவும் பிடித்த ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்ஃபிரெட் டன்னை அடிப்படையாக வைத்தே சித்தரித்தார்.
l வாழ்க்கையில் இவர் சந்தித்த தோல்விகளும் நெருக்கடிகளும்தான் இவரது படைப்பாற்றலின் உந்துசக்தி. தனக்கு நேர்ந்த மனஅழுத்தங்களால் தற்கொலை எண்ணங்கள் வந்ததாகவும் அந்த அனுபவம்தான் ஹாரிபாட்டரில் தான் உருவாக்கிய டெமென்டர்ஸ் என்ற ஆன்மாவை உறிஞ்சும் கொடூர ஜந்துக்கள் பாத்திரத்தை உருவாக்க வைத்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார்.
l 1995-ல் ‘ஹாரிபாட்டர் அன்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்’ என்ற தனது முதல் நாவலை எழுதி முடித்தார். 1997-ல் ப்ளூம்ஸ்பரி என்ற பதிப்பகம் முன்பணமாக 1500 பவுன்ட் கொடுத்து இதை வெளியிட முன்வந்தது.
l வெளிவந்த ஐந்து மாதங்களில் ‘நெஸ்ட்லே ஸ்மார்ட்டீஸ் புக்’ பரிசை இந்தப் புத்தகம் வென்றது. தொடர்ந்து, ‘ஹாரிபாட்டர் அன்ட் தி சாம்பர் ஆஃப் சீக்ரட்ஸ்’, ‘ஹாரிபாட்டர் அன்ட் தி பிரிசினர் ஆஃப் அஸ்பகன்’ அடுத்தடுத்து வெளிவந்தன.
l ‘ஹாரிபாட்டர் அன்ட் காப்ளெட் ஆஃப் ஃபயர்’ என்ற 4-வது பகுதி பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் விற்பனையில் புதிய சாதனை படைத்தன. அமெரிக்காவில் 30 லட்சம் புத்தகங்கள் 48 மணி நேரத்துக்குள் விற்பனையாகின. 6-வது பகுதி முதல் 24 மணி நேரத்தில் 90 லட்சம் புத்தகங்கள் விற்றன!
l 2007-ல் வெளிவந்த 7-வது பகுதி ‘ஹாரிபாட்டர் அன்ட் ஹாப் ப்ளட் பிரின்ஸ்’ முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. முதல் நாளிலேயே ஒரு கோடியே 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகின. இவரது இந்த 7 படைப்புகளும் உலகம் முழுவதும் 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை திரைப்படங்களாக வெளிவந்தும் வசூலை வாரிக் குவித்தன.
l பிரிட்டிஷ் சில்ரன் புக் விருது, 3 முறை ஸ்மார்டீஸ் பரிசு, ஒயிட்பிரெட் சில்ரன்ஸ் புக் ஆஃப் தி இயர் விருது, 2000-மாவது ஆண்டின் ஆதர் ஆஃப் தி இயர் விருது உள்ளிட்ட ஏராள மான பரிசுகள், விருதுகள் குவிந்தன.
l நாடகாசிரியர் ஜாக் த்ரோன், இயக்குநர் ஜான் டிபேனி ஆகியோருடன் இணைந்து ரோலிங் எழுதியுள்ள ‘ஹாரிபாட்டர் அன்ட் தி கர்ஸ்ட் சைல்ட்’ நாடகம் இவரது 51-வது பிறந்த நாளான இன்று புத்தக வடிவில் வெளிவருகிறது.
- ராஜலட்சுமி சிவலிங்கம்