

கேரள இலக்கியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர்
மலையாள இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான வைக்கம் முகமது பஷீர் (Vaikom Muhammad Basheer) பிறந்த தினம் இன்று (ஜனவரி 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கேரள மாநிலம், வைக்கம் அருகே தலையோலப்பரம்பு என்ற ஊரில் பிறந்தார் (1908). அதே ஊரில் மலையாளப் பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பின்னர் வைக்கம் ஆங்கிலப் பள்ளியிலும் கற்றார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
* வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்காக அவர் அங்கு வருகை தந்தபோது, எப்படியோ முட்டிமோதி அவர் கையைத் தொட்டு விட்டதை ஒரு பரவச அனுபவமாக எண்ணினார். இதைப் பின்னாளில் தன் பல படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
* மலபாருக்குச் சென்று இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். 1930-ல் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டார். புரட்சி அமைப்புகளின் கொள்கைகளைப் பரப்பவே உஜ்ஜீவனம் என்ற வார இதழைத் தொடங்கி நடத்தினார்.
* ‘பிரபா’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். இவரது பத்திரிகை தடை செய்யப்பட்டது. இவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்கவே இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து நாடோடி போலக் கழித்தார். சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார்.
* பின்னர் எர்ணாகுளம் திரும்பிய இவர், மீண்டும் அரசியல் கட்டுரைகள் எழுதினார். இதனால் கைது செய்யப்பட்டார். சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற பிரிவினையை இவர் கடைசிவரை ஏற்கவேயில்லை. எனவே அரசியலிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளரானார். 1950-களில் புத்தக விற்பனைக் கடையைத் தொடங்கினார்.
* எதையும் தரம்தாழ்ந்து எழுத மாட்டார். திரித்து எழுத மாட்டார். இந்த குணாம்சங்களால் தனித்துவம் வாய்ந்த படைப்பாளியாகப் போற்றப்பட்டார். ‘ஓர்மக் குரிப்பு’, ‘ஜன்மதினம்’, ‘பாவப்பெட்டவருடே வேசிய’, ‘விஷப்பு’, ‘சிரிக்குன்ன மரப்பாவ பிரேமலேகனம்’, ‘பால்யகால சகி’, ‘உப்பாப்பாக்கொரு ஆனையிருந்தது’, ‘ஆனவாரியும் பொன்குரிசும்’, ‘மதிலுகள்’, ‘விஸ்வ்விக்யாதமாய மூக்கு’, ‘ஜீவித நிழல்பாடுகள்’, ‘சிங்கிடிமுங்கன்’, ‘யா இலாஹி’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
* இவரது ‘பாத்தும்மாயுடே ஆடு’, ‘பால்யகால சகி’ உள்ளிட்ட பல படைப்புகள் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. புகழ்பெற்ற நாவல்களான ‘பாத்தும்மாயுடே ஆடு’, ‘பால்யகால சகி’, ‘என்டுப்புப்பா கொரானேண்டார்ணு’ ஆகியவற்றை எடின்பரோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரொனால் ஆஷர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
* ‘மதிலுகள்’ என்ற இவரது நாவல் அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. எளிமையான வார்த்தைகள், மிகைப்படுத்தல்கள் இல்லாத நடை, இயல்பு வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்திருக்கும் கதாபாத்திரங்கள் இவற்றால் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் படைப்பாளியாகப் புகழ் பெற்றிருந்தார்.
* இவரது வாழ்க்கை வரலாறு, ‘பஷீர் தனிவழியிலோர் ஞானி’ என்ற நூலாக வெளிவந்துள்ளது. பத்ம, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட். பட்டம், சமஸ்கிருத தீபம் விருது, பிரேம் நஸீர் விருது, வள்ளத்தோல் விருது, கேரள சாகித்ய அகாடமி விருது, மத்திய சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றவர்.
* மலையாள இலக்கியத்தின் மகத்தான கதை சொல்லி, காலம் கடந்து வாழ்ந்து வரும் அற்புதப் படைப்பாளி, கதைகளின் சுல்தான் என்றெல்லாம் போற்றப்படும் வைக்கம் முகமது பஷீர், 1994-ம் ஆண்டு, 86-வது வயதில் மறைந்தார்.