Last Updated : 25 Jul, 2016 05:04 PM

 

Published : 25 Jul 2016 05:04 PM
Last Updated : 25 Jul 2016 05:04 PM

யூடியூப் பகிர்வு: மிகவும் யூஸ்ஃபுல்லான யூஸ்லெஸ் குறும்படம்

'குறும்படமா! அட!' என்று வியந்த திரைஆர்வலர்களே விலகிச் செல்லும் அளவுக்கு இன்று காதல் குறும்படங்களின் வருகை எக்கச்சக்கம். இதைச் சொல்வதால் காதலே தவறு என்று அர்த்தமில்லை. அத்தகைய குறும்படங்கள் சொல்ல வருவதென்ன என்பதுதான் நம் கேள்வி.

''தமிழ் சினிமா ஃபார்முலாவை இதில் மினியேச்சர்தான் செய்துள்ளேன். வாய்ப்புகிடைத்தால் ப்ளாக் பஸ்டர் சினிமாவையே தருவேன்'' என்பதுதானே அத்தகைய குறும்பட இயக்குநர்களின் பதில்.வெற்றிப்பட இயக்குநர்களை திருப்தி செய்து அவர்களிடம் சேர்வதற்காகவோ, படத் தயாரிப்பாளர்களை கவர்வதற்காகவோ வரும் புற்றீசல் பெருக்கமாகவே இவற்றைப் பார்க்கவேண்டியுள்ளது.

மலைமலையாய் வரும் மோசமான குறும்படங்களுக்கு நடுவே அலைஅலையாய் பெருகிவரும் நல்ல படங்களை தவற விட்டுவிடுவோமோ என்று தவிப்பும் தேடல்மிக்க ரசிகனுக்கு ஏற்படுவது இயற்கையே.

அதிலும், ஞானம், வள்ளி, ராகவன், முஸ்டாக் அஹ்மத். சரண், சூர்யா, லலித், விஷால், அசோக், நவீன் கிஷோர், கோவர்த்தன், சேத்தன் சர்மா, ஸ்ரீகிருஷ்ணா, குஹா கார்த்திகேயன், ராஜ்குமார், ஹரி ரகுபதி, விஷ்ணு உள்ளிட்டவர்கள் சிறப்பாக பங்கேற்று சிறகு விரித்துப் பறக்கும் useless போன்ற சில நல்லப் படங்களையும் தவறிவிட்டுவிடும் இழப்புகளும் அதிகம்.

சரண். ஜே அவர்களின் மிகச் சரியான ஒளிப்பதிவில், ராகவன் எனும் இளம் இயக்குநரின் useless குறும்படம் உண்மையில் சமூகத்திற்கு சொல்லும் செய்தி மிகமிக யூஸ்ஃபுல் எனலாம். பத்து நிமிடத்திற்குள்தான் எத்தனை கதைகள். அவசியமிக்க எத்தனை கட் ஷாட்கள்... இப்படத்தின் வெற்றிக்கு எடிடிங்கிற்கு முக்கியப் பங்கு உண்டு.

தனது பணியைச் செய்துவிட்டு பெண்மணி பார்க்கும் உச்சிவெயிலை சூரியனின் கதிர்கள் நம் கண்களைச் கூசவைக்கும் அந்தக் கடைசிக் காட்சி ஒளிப்பதிவில்தான் எவ்வளவு அர்த்தங்கள்.

கல்லூரி வாழ்வை கடந்துகொண்டிருப்பவர்கள், தங்கள் தவறை உணராமல் இளமைத் துடிப்பில் கட்டும் எந்த லட்சியக் கனவுப் பந்தலும் நிலைக்காது என்ற செய்தியை சின்னஞ்சிறு படத்தில் அழகாக உணர்த்திய பொறுப்புமிக்க இயக்குநர் ராகவனுக்கு நம் சல்யூட். இவரைப் போன்றவர்கள் பெரிய திரைக்கு தாராளமாக வரலாம்... வரவேண்டும்.

useless குறும்படத்தைக் காண: