

கிருஷ்ண பக்தியைப் பரப்பிய மகான்
கிருஷ்ண பக்தி மற்றும் சைதன்யரின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்பிய ஆன்மிகத் தலைவர் பக்திவினோதா தாகூர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*மேற்குவங்க மாநிலத்தின் நாடியா மாவட்டம் பிர்நகரில் (1838) பிறந்தார். இயற்பெயர் கேதார்நாத் தத்தா. இவரது 11-வது வயதில் தந்தை மறைந்ததால், கல்கத்தாவில் இருந்த மாமாவிடம் வளர்ந்தார்.
*, தத்துவங்கள் தொடர்பாக நிறைய புத்தகங்களை வாசித்தார். 12 வயதிலேயே ஹரா கதா, ஷும்பா நிஷும்பா யுத்தா ஆகிய நூல்களை எழுதினார். பைபிள், குர்ஆனையும் ஆழ்ந்து வாசித்தார். கல்கத்தா கல்லூரியில் சேர்ந்தார். அப்போது ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பங்கிம் சந்திர சட்டர்ஜி உள்ளிட்ட பலருடன் நெருக்கமான நட்பு கொண்டார்.
*ஆசிரியர் பயிற்சி பெற்றார். கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர், தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். 1861-ல் துணை ஆட்சி யராகப் பதவியேற்றவர், 1894-ல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக ஓய்வு பெற்றார்.
*வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலம், லத்தீன், உருது, பாரசீகம், ஒரியா மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார். தத்துவவாதிகள், மெய்யியலாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
*சைதன்ய மகாபிரபுவின் வாழ்க்கை வரலாறு இவரை மிகவும் கவர்ந் தது. சைதன்யரின் போதனைகள் ஏறக்குறைய மறக்கப்பட்டிருந்த அந்த காலக்கட்டத்தில், அவற்றை பல தொகுதிகளாக எழுதி மறு அறிமுகம் செய்தார். 1881-ல் ‘சஜ்ஜனா தோஷணி’ என்ற இதழைத் தொடங்கி வங்காளம் முழுவதும் சைதன்யரின் போதனைகளைப் பரப்பினார்.
*விபின் பிஹாரி கோஸ்வாமியிடம் தீட்சை பெற்றார். பல புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அந்த அனுபவத்தை விவரித்து பல நூல்களை எழுதினார். செல்லும் இடமெங்கும் ‘நாம ஹதா’ அமைப்பின் கிளைகளைத் தொடங்கினார். பாரத் சமாஜ் என்ற அமைப்பை நிறுவினார். ஏராளமான இடங்களில் புராணங்கள், பாகவதம், பகவத்கீதை குறித்து உரையாற்றினார்.
*வங்கமொழி, ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதினார். பகவத்கீதை உட்பட பல புனித நூல்களை வங்கமொழியில் மொழிபெயர்த்தார். சைதன்யரின் போதனைகளைப் பரப்ப கல்கத்தாவில் விஷ்வ வைஷ்ணவ சபாவைத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான கிருஷ்ணபக்திப் பாடல்களை இயற்றினார்.
*தனது நூல்களை வெளிநாட்டு நூலகங்களுக்கு அனுப்பிவைத்து, கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார். இவருக்குப் பிறகு இவரது வாரிசுகள் பலர் இவரது அடிச்சுவட்டில் கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் கொண்டுசென்றனர்.
*‘அறிவே ஆற்றல்’ என வலியுறுத்தியவர். பல்வேறு இன்னல்களுக்கு இடையே ஆன்மிகத்தை தழைக்கச் செய்தவர். இவரது தத்துவ, ஆன்மிக பங்களிப்புகளுக்காக ‘பக்தி வினோதா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவரது பேனா இறுதி மூச்சுவரை ஓயவே இல்லை.
*தத்துவவாதி, மெய்யியலாளர், ஆன்மிகத் தலைவர், அறிஞர், படைப்பாளி, கவிஞர் எனப் பல்வேறு களங்களில் பங்களிப்பை வழங்கிய பக்திவினோதா தாகூர் 76-வது வயதில் (1914) மறைந்தார். ‘ஸ்வலிகிதா ஜீவன்’ என்ற பெயரில் இவர் எழுதிய சுயசரிதையை, இவரது மறைவுக்குப் பிறகு இவரது மகன் வெளியிட்டார். கிருஷ்ண பக்தியைப் பரப்ப இறைவனால் அனுப்பப்பட்டவராகவே இவரை கருதுகின்றனர் பக்தர்கள்.