

நோபல் பெற்ற அமெரிக்க வானியலாளர்
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வானியலாளர் ராபர்ட் உட்ரோ வில்சன் (Robert Woodrow Wilson) பிறந்தநாள் இன்று (ஜனவரி 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹட்சன் நகரில் (1936) பிறந்தார். தந்தை எண்ணெய்க் கிணறு நிறுவனத்தில் பணியாற்றியவர். ராபர்ட் சிறுவனாக இருந்தபோது, தந்தை பணிபுரியும் இடத்துக்குச் செல்வார். அங்குள்ள மின்னணு இயந்திரங்களை பழுதுபார்ப்பதும், பிரித்துப்போட்டு மீண்டும் பொருத்துவதும் அவருக்கு பொழுதுபோக்கு.
* லாமர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பியானோ இசை கற்ற இவர், பள்ளி இசைக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். கணிதம், அறிவியலில் சிறந்து விளங்கினார். ரைஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆராய்ச்சிப் பாடத்துக்காக, குறைந்த வெப்பநிலையில் பயன்படுத்தக்கூடிய காந்தக் கருவிக்கு ரெகுலேட்டர் உருவாக்கினார்.
* இயற்பியல், மின்னணுத் துறையில் அதிக நாட்டம் இருந்ததால் வான் ஒலி வானியல் (Radio Astronomy) துறையில் மேற்படிப்புக்காக கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பயணிக்கும் வேவ் மேசர் ஆம்ப்ளிபயர்களை மேம்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
* ஓவன்ஸ் வேலி ரேடியோ அப்சர்வேட்டரியில் பணியாற்றினார். இயற்பியல், மின்னணுவியல் இணைந்த ரேடியோ அஸ்ட்ரானமி துறை இவரது ஆர்வத்துக்கும் திறனுக்கும் பொருத்தமாக இருந்ததால் படிப்புடன் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
* நியூஜெர்சியில் உள்ள பெல் டெலிபோன் ஆய்வகத்தில் ரேடியோ ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சியாளராகப் பணிக்கு சேர்ந்தார். அதன் இயக்குநராகவும் பணியாற்றினார். அங்கு பால்வெளி வரைபடத் தயாரிப்புக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு இந்திய விண்வெளி விஞ்ஞானி வி.ராதாகிருஷ்ணன் உட்பட பல விஞ்ஞானிகளுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டார்.
* வானியல் சோதனைக்காக முதலில் ‘சன் டிராக்கர்’ என்ற கருவியை வடிவமைத்தார். அங்கு பணியாற்றும் ஜெர்மன் அறிஞர் ஆர்னோ பென்சியாவுடன் இணைந்து பல சோதனைகளை மேற்கொண்டார். இருவரும் ரேடியோ டெலஸ்கோப்பை பயன்படுத்தி நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள வாயு மேகங்களின் கதிர்வீச்சு குறித்து ஆராய்ந்தனர்.
* புது வகையான ஆன்டெனாவை மேம்படுத்தும் முனைப்பில் அவர்கள் ஈடுபட்டபோது, வித்தியாசமான ஒலி சமிக்ஞை உண்டாவதை அறிந்தனர். தீவிரமாக ஆராய்ந்தபோது, அது அண்டவியல் நுண்ணலைப் பின்புலம் - சிஎம்பி (Cosmic Microwave Background) என்பதை அடையாளம் கண்டனர்.
* இது பெருவெடிப்பு தத்துவத்தை உறுதிப்படுத்தும் முக்கியச் சான்றாக அமைந்தது. இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையை 1965-ல் வெளியிட்டனர். இக்கண்டுபிடிப்புக்காக 1978-ல் சோவியத் யூனியன் விஞ்ஞானி பியோடர் கபிஸ்தா மற்றும் இவர்கள் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* நட்சத்திரங்களுக்கு இடையேயான மேகங்களில் கார்பன் மோனாக்சைடு மற்றும் பிற மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். 1979-ல் சர்வதேச வானியல் யூனியன், அமெரிக்க இயற்பியல் கழகம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டார். 1994 வரை பெல் வானொலி இயற்பியல் ஆராய்ச்சித் துறை தலைவராகப் பணியாற்றினார்.
* மசாசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஹாவர்ட் - ஸ்மித்சோனியன் வான்இயற்பியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். இன்று 81 வயதை நிறைவு செய்யும் ராபர்ட் உட்ரோ வில்சன் வான்இயற்பியல் ஆராய்ச்சிகள், எழுத்துப் பணியில் இப்போதும் ஈடுபட்டு வருகிறார்.