

உலக நாடுகளிடையே நடக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கும் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபை. சுருக்கமாக ஐநா. உள்நாட்டுக் கலவரங்கள், அடக்குமுறைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வது முதல் பேரழிவு, நோய் பாதிப்பு, ஏழ்மை, குழந்தைகள் நலன் போன்ற சர்வதேச அளவிலான பிரச்சினைகள் தொடர்பான பணிகளையும் ஐநா மேற்கொள்கிறது. எனினும், இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதற்கான முக்கியக் காரணம், மூன்றாவது உலகப் போர் நடந்துவிடக் கூடாது என்பதுதான். முதல் உலகப் போரின் முடிவில், 1920-ல் ‘நாடுகளின் அணி’ (League of Nations) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்டுவதுதான் இதன் குறிக்கோள்.
இந்த அமைப்பு இருந்தும், இரண்டாம் உலகப்போர் மூண்டதைத் தடுக்க முடியவில்லை. இந்த அமைப்பிலிருந்து ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகள் விலகின. இவை இணைந்து அச்சு நாடுகள் என்ற பெயரில், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் அணியான நேச நாடுகளை எதிர்த்துப் போரிட்டன. இதற்கிடையே, 1940-ல் ‘நாடுகளின் அணி’கலைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் வென்றன. போரின் கடைசி ஆண்டான 1945-ல் இதே நாளில் உருவாக்கப்பட்டதுதான் ஐநா. 1942-லேயே பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகள் இணைந்து ஐநா அமைப்பு தோன்றுவதற்கு அடித்தளமிட்டன.
முன்னதாக, 1945 ஏப்ரல் 25-ல்சான் பிரான்சிஸ்கோவில் நடந்த கூட்டத்தில், ஐநாவுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இந்த நிகழ்வில், அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் ஒன்றிய அதிபர் ஜோசப் ஸ்டாலின் பங்கேற்றனர். மேலும், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த 50 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.