

பிரபல ஓவியரும், கார்ட்டூனிஸ்ட்டுமான கோபுலு (Gopulu) பிறந்த தினம் இன்று (ஜூன் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* தஞ்சாவூரில் (1924) பிறந்தவர். இயற்பெயர் கோபாலன். சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் இருந்ததால், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தி, அவற்றில் கார்ட்டூன் வரைந்து வந்தார்.
* ஆனந்தவிகடனில் பணியாற்றி வந்த ஓவிய மேதை மாலியால் ஈர்க்கப்பட்டார். வேலை தேடி சென்னை வந்தவர், தன் மானசீக குரு மாலியை சந்தித்தார். 1941 தீபாவளி மலருக்காக தியாகராஜ சுவாமிகள் தன் வீட்டில் பூஜை செய்துவந்த ‘ராமர் பட்டாபிஷேகம்’ படத்தை வரைந்து வருமாறு மாலி கூறினார்.
* இவரும் திருவையாறு சென்று தியாகராஜரின் வீட்டிலேயே தங்கியிருந்து, அந்த ஓவியத்தை வரைந்தார். அப்போது இவருக்கு வயது 16. அது அந்த ஆண்டு தீபாவளி மலரில் பிரசுரமாகி, பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இவரது பெயரை ‘கோபுலு’ என்று மாற்றினார் மாலி.
* புரசைவாக்கத்தில் நண்பர்களோடு தங்கியிருந்து, படங்கள், கார்ட்டூன்கள் வரைந்து வந்தார். ஆனந்தவிகடனில் 1945-ம் ஆண்டு முழுநேர ஓவியராக சேர்ந்தார். அங்கு 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.
* புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். தேவன், கொத்தமங்கலம் சுப்பு உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்பாளிகளின் ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘துப்பறியும் சாம்பு’ போன்ற கதைகளின் கதாபாத்திரங்கள் இவரது தூரிகையில் உயிர்பெற்று வாசகர்கள் நெஞ்சத்தைக் கொள்ளைகொண்டன.
* சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ உள்ளிட்ட படைப்புகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் அழியாப் புகழ்பெற்றவை. அவருடன் பல இடங்களுக்கும் சென்று, அவரது பயணக் கட்டுரைகளுக்கும் ஓவியம் வரைந்தார். நாடு சுதந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாடும் விதமாக ஆனந்தவிகடன் அட்டைப் படத்தை வரைந்தது இவர்தான்.
* சிறந்த அரசியல் கார்ட்டூனிஸ்ட்டாகவும் முத்திரை பதித்தவர். இவர் வரைந்த காமிக் ஸ்ட்ரிப்கள் (வார்த்தை இல்லாத நகைச்சுவை ஓவியங்கள்) புகழ்பெற்றவை. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்த சாதனையாளர். குழந்தை மனம் படைத்தவர். ‘போகோ சேனல்தான் விரும்பிப் பார்ப்பேன்’ என்பார். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகளுக்கு வரைந்த ஓவியங்கள்தான் தனக்குப் பிடித்தமானவை என்று கூறியுள்ளார்.
* பத்திரிகைப் பணியில் இருந்து 1963-ல் விலகி, விளம்பரத் துறையில் பணியாற்றினார். தமிழகத்தில் சில முக்கியமான நிறுவனங்களின் ‘லோகோ’, இவரது வடிவமைப்பில் உருவானவை. விகடன், அமுதசுரபி, கல்கி, குமுதம், குங்குமம் உள்ளிட்ட பல இதழ்களிலும் தொடர்ந்து வரைந்தார்.
* ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர், தன்னைப் பார்க்கவந்த நண்பர்களிடம், ‘‘என் பாணியை கோபுலு ஸ்ட்ரோக்ஸ் என்பார்கள். இப்போது கோபுலுவுக்கே ஸ்ட்ரோக்ஸ் வந்துவிட்டது’’ என்றார் நகைச்சுவையாக. வலது கையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்ட பிறகும், வரைவதை நிறுத்தாமல், இடது கையால் வரைந்தார்.
* கலைமாமணி, எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். காலத்தால் அழியாத ஓவியங்களைத் தீட்டிய, ஓவிய மேதை கோபுலு, 2015 ஏப்ரல் 29-ம் தேதி 91-வது வயதில் மறைந்தார்.