

பிரான்ஸ் தொல்பொருள் ஆய்வாளர்
அறிஞர், தொல்பொருள் ஆய்வாளர் அகஸ்ட் மேரியட் (Auguste Mariette) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரான்ஸின் புலாய்ன் நகரில் (1821) பிறந்தார். தந்தை அரசு குமாஸ்தா. அறிவுக்கூர்மைமிக்க அகஸ்ட், 12 வயதிலேயே எகிப்தின் சித்திர வடிவம், காப்டிக் எழுத்துகளைப் படிக்கும் திறன் பெற்றார். திறமையான கைவினைக் கலைஞர், வடிவமைப்பாளராக விளங்கினார்.
* பண்டைய வரலாறு, தொல்லியலில் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நூல்களைப் படித்தார். மேல் வருமானத்துக்காக மாணவர்களுக்குக் கற்பித்தும், வரலாறு, அகழ்வாராய்ச்சி குறித்து இதழ்களில் எழுதியும் வந்தார். எகிப்தியலாளரான உறவுக்காரர் ஒருவர் இறந்துவிடவே, அவரது ஆய்வு தொடர்பான ஆவணங்களை வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இவருக்கும் எகிப்து குறித்து அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறந்தது.
* பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பாரிஸின் முதன்மை அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடமான லூவரில் எகிப்து துறையில் சேர்ந்தார். பின்னர், பண்டைய எகிப்தின் காப்டிக், சிரிய, அராபிய, எத்தியோப்பியக் கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிக்க எகிப்து சென்றார்.
* அங்கு சிறிது காலம் தங்கி எகிப்தின் பண்டைய இடுகாடான சக்காரா (Saqqarah), வழிபாட்டுத் தலமான செராப்பியம் (Serapeum) ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார். எகிப்தில் பண்டைய தொல்லியல் பொருள்களைக் கண்டறிந்ததால், பாரிஸ் திரும்பிய இவருக்கு லூவர் அருங்காட்சியகத்தில் பதவி உயர்வு கிடைத்தது.
* எகிப்து சென்று, அங்கு அந்நாட்டின் அருங்காட்சியகப் பகுப்பாய்வு அட்டவணையை வெளியிட்டார். அந்த அரசு, எகிப்து நினைவுச் சின்னங்களின் காப்பாளர் என்ற பதவியை இவருக்காக உருவாக்கி யது. அங்கேயே தங்க முடிவு செய்து, குடும்பத்துடன் அங்கே குடியேறினார். கடினமான அகழ்வாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார்.
* ஏராளமான பண்டைய அற்புதங்களைக் கண்டறிந்தார். அரசின் நிதியுதவி பெற்று கெய்ரோவில் அருங்காட்சியகம் தொடங்கினார். இதன்மூலம் பண்டைய தொல்லியல் பொருள்களின் சட்டவிரோத வர்த்தகத்தையும், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதையும் தடுத்தார்.
* எகிப்தில் அகழ்வாராய்ச்சிக்காக புதிதாக 35 இடங்களை உருவாக்கினார். அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவரும் இடங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டுவந்தார். எகிப்தின் தொன்மையான கற்பனை விலங்கு வடிவங்களைக் (ஸ்பிங்ஸ்) கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு இவருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்தது.
* பாரிஸ் திரும்பியவர் 1858 வரை லூவரில் உள்ள எகிப்து துறையின் காப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் எகிப்துக்கு வந்து, இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெம்பிஸ், சகாரா, தீப்ஸ் உள்ளிட்ட தொன்மையான இடங்களில் தீவிர அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார். பண்டைய எகிப்தின் வரலாற்றுச் சிறப்புகளில் பலவற்றை வெளிக்கொண்டு வந்தார்.
* எகிப்திய தொல்பொருள்களுக்கான முதல் இயக்குநரான இவர், அவர்களது பொக்கிஷங்களான தொல்பொருள்கள் அவர்களிடமே இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக எகிப்தில் அங்கீகரிக்கப்படாத அகழ்வாராய்ச்சிகள், தொல்பொருள் விற்பனை, ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தார். இதனால் அரசு இவருக்கு பே (Bey) பட்டம் வழங்கியது. பாஷா (Pasha) என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
* தனது ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். எகிப்தின் தொல்லியல் தந்தை எனப் போற்றப்பட்ட அகஸ்ட் மேரியட் 59-வது வயதில் மறைந்தார்.