

முதன்முதலாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஆப்ரிக்க வீராங்கனை மே கரோல் ஜெமிசனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• அமெரிக்காவில் ஆப்ரிக்க வம்சாவளித் தம்பதிக்கு பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே அறிவியலில் ஆர்வம் மிக்கவர்.
• விண்வெளி அறிவியல் தொடர்பான தகவல்களை பள்ளி நூலகத்தில் தேடித் தேடிப் படிப்பார். நடனம், நாடகத்திலும் கெட்டிக்காரர். இவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர் பெற்றோர்.
• பள்ளியில் கறுப்பின மாணவ அமைப்பின் தலைவராக இருந்தார். தேசிய உதவித்தொகை பெற்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியல் இன்ஜினீயரிங், ஆப்ரிக்க அமெரிக்கன் ஸ்டடீஸ் என இரட்டை பட்டம் பெற்றார். பின்னர் மருத்துவக் கல்வியையும் முடித்தார். கியூபா, கென்யா, தாய்லாந்தில் மருத்துவ சேவையில் ஈடுபட்டார்.
• லாஸ்ஏஞ்சல்ஸில் பணிபுரிந்தபோது, விண்வெளி ஆசை விஸ்வரூபம் எடுத்தது. நாசா பயிற்சிக்கு விண்ணப்பித்தார். அப்போது, ‘சேலஞ்சர்’ விண்கலம் வெடித்துச் சிதறி 7 பேர் இறந்ததால், பயிற்சித் திட்டத்தை நாசா ஒத்திவைத்தது.
• ஜெமிசனின் லட்சிய தாகத்தை இச்சம்பவம் தணித்துவிடவில்லை. மீண்டும் விண்ணப்பித்தார். ‘‘பலியானவர்களுக்காக வருந்துகிறேன். ஆனால், விண்வெளிப் பயணம் குறித்த எனது ஆர்வம் சிறிதும் குறையவில்லை’’ என்றார்.
• 2000 பேரில் ஜெமிசன் உட்பட 15 பேர் தேர்வாகினர். இவர் உட்பட 7 பேர் எண்டோவர் விண்கலத்தில் 1992 செப்டம்பர் 12-ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டனர். விண்வெளியில் 8 நாள் தங்கியிருந்த ஜெமிசன், விண்வெளி வீரர்களின் எடைக்குறைவு, உடல்நலக்குறைவு குறித்து ஆய்வு செய்தார். உலகமே பதைபதைப்புடன் காத்திருக்க.. செப்டம்பர் 10-ம் தேதி ஜெமிசன் குழுவினர் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்.
• விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க, ஆப்ரிக்க வீராங்கனை என்று சாதனை படைத்த இவருக்கு பாராட்டு குவிந்தது. ‘‘ஜெமிசன் கம்பீரமான, புத்திசாலித்தனமான, உண்மையான, உறுதியான இளம்பெண்’’ என புகழாரம் சூட்டியுள்ளார் நாசாவின் முக்கிய அதிகாரி.
• குழந்தைப் பருவ ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் பணியில் ஜெமிசன் பணியாற்றி வருகிறார். அன்றாட வாழ்வில் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்த ஆய்வு நிறுவனம் நடத்துகிறார்.
• அமெரிக்காவின் இனவெறிக் கொடுமைக்கு ஜெமிசனும் தப்பவில்லை. ஒருமுறை போக்குவரத்து விதிமீறலுக்காக காரில் இருந்து இவரை இறக்கிய காவல் அதிகாரி, மணிக்கட்டை முறுக்கி கீழே தள்ளி அவமானப்படுத்தினார்.
• இந்த உலகத்தையும் சமுதாயத்தையும் மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள் தாங்கள் என்பதை பெண்கள் இன்னும் உணரவில்லையே என்பதுதான் ஜெமிசனின் ஆதங்கம்.