Published : 23 Jun 2016 11:02 AM
Last Updated : 23 Jun 2016 11:02 AM

ஆலன் மாத்திசன் டூரிங் 10

கணினி அறிவியலின் தந்தை

இங்கிலாந்தின் கணிதவியலாளரும் கணினி அறிவியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ஆலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing) பிறந்த தினம் இன்று (ஜூன் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l லண்டனில் பிறந்தவர் (1912). தந்தை, அரசு ஊழியர். தலைசிறந்த தனியார் பள்ளியில் பயின்றார். பள்ளி நாட்களில் கணிதமும் அறிவியலும்தான் இவரை மிகவும் கவர்ந்த பாடங்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் பயின்றார்.

l அங்கே நிகழ்தகவு கோட்பாடு குறித்த இவரது ஆய்வுகளை கவுரவிக்கும் முறையில் ஃபெலோஷிப் வழங்கப்பட்டது. பின்னர், நியூ ஜெர்சி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணிதமும் ரகசிய குறியீடு முறை குறித்தும் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். 1936-ல் கணக்கிட முடிகிற எதையும் கணக்கிடும் இயந்திரம், (பின்னாளில் இது டூரிங் மெஷின் எனக் குறிப்பிடப்பட்டது) மற்றும் படிமுறை (algorithm), கணக்கிடல் கருத்துரு குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.

l நவீன கணினியின் மையக் கருத்துரு இவரது ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டதுதான். நாடு திரும்பிய இவர், 1938-ல் பிரிட்டிஷ் ரகசிய குறியீடுகளை கண்டறியும் அமைப்பில் பணியாற்றினார். 1939-ல் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் ஜெர்மனியின் எனிக்மா இயந்திரத்தின் போர்க்கால சங்கேத தகவல்களைத் தகர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவில் சேர்ந்தார்.

l இவர் உருவாக்கிய கணினி செயல்முறைகளைக் கொண்டு எனிக்மாவின் சங்கேதங்கள் எப்படி மாறுகின்றன என்பதைத் துல்லியமாகக் கணித்து, சங்கேதங்களை சில நிமிடங்களில் தகர்க்கும் திறன் கொண்ட ஒரு இயந்திரம் உருவாக்கப்பட்டது. போர் முடிவடையும் சமயத்தில் இவரது, குறியீடுகள் தகர்க்கும் பணிக்காக, ‘தி மோஸ்ட் எக்ஸலன்ட் ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயரின்’ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

l சங்கேதங்களைத் தகர்ப்பதற்கு கணித அணுகுமுறையைப் பயன் படுத்துவது குறித்து இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை, பிரிட்டனின் கோட் அன்ட் சைஃபர் நிறுவனத்தின் பொக்கிஷங்களாக மாறின. இவரது ஆட்டோமேடிக் கம்ப்யூட்டிங் என்ஜின்தான் (ACE) மின்னணு நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்பு.

l பின்னர் எண் கணிதம், நேரிலி கணக்கீடு, நேரிலி கணக்கீட்டின் அடிப்படையில் உயிரியல் பெருக்கங்களை வடிவாக்கல் (nonlinear modeling of biological growth), பிணைப்பு வலைகள் (neural networks), இயற்பியல், தர்க்கம், தத்துவம், உயிரியல், சங்கேதம் என பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 1948-ல் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ராயல் சொசைட்டி கம்ப்யூட்டிங் மெஷின் சோதனைக் கூடத்தில் துணை இயக்குநராக சேர்ந்தார்.

l அங்கும் இவரது டூரிங் மெஷின்தான் மான்செஸ்டர் கம்ப்யூட்டர் திட்டத்தின் அடிப்படையாகத் திகழ்ந்தது. இவருடைய மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட ‘இன்டலிஜென்ட் மிஷின்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை பின்னாளில் மிகவும் பிரபலமான ‘Artificial Intelligence’ என்ற துறைக்கு வித்திட்டது.

l மனித மூளையின் செயல்பாடுகளை முழுமையாகவோ அல்லது ஏறக்குறைய முழுமையாகவோ மேற்கொள்ள முடிகிற இயந்திரங்களைப் படைப்பது சாத்தியமான செயல் என டூரிங் நம்பினார். நவீன இரண்டடிமான (Binary) கணினி, சங்கேதவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அடித்தளம் அமைத்தவரும் இவரே.

l கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று கூறினார். அதற்கான சில விதிமுறைகளை வகுத்தார். இது ‘டூரிங் டெஸ்ட்’ எனக் குறிப்பிடப்படுகிறது. கணினி அறிவியலின் தந்தை எனப் போற்றப்படும் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘தி இமிடேஷன் கேம்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றது.

l கணினி, கணிதம், அறிவியல் தொடர்பாக இவரது குறிப்புகள் அடங்கிய ஒரு நோட்டுப் புத்தகம் அமெரிக்க ஏல மையம் ஒன்றில் 10 லட்சம் டாலருக்கு விற்பனையானது. இவரது பாலின அடையாளம் குறித்து எழுந்த பிரச்சினை காரணமாக மர்மமான முறையில் விஷம் செலுத்தப்பட்ட ஆப்பிளை உட்கொண்டு 1954-ம் ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. அப்போது இவருக்கு வயது 42.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x