ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் 10

ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் 10
Updated on
2 min read

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளருமான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் (James Clerk Maxwell) பிறந்த தினம் இன்று (ஜுன் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்கில் பிறந்தார் (1831). தந்தை ஒரு வழக்கறிஞர். மூன்று வயது முதலே நகரும், ஓடும், தான் பார்க்கும், அல்லது சத்தம் எழுப்பும் எல்லா விஷயங்களுமே குழந்தையின் கவனத்தைக் கவர்ந்தன. ‘என்ன?’ ‘ஏன்?’ ‘எப்படி?’ என்று கேள்வி கேட்டவாறே இருந்தான்.

* குழந்தையின் அறிவுக்கூர்மை யால் பெருமிதம் கொண்ட பெற்றோரும் குழந்தை கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பொறுமையாக பதில் கூறிவந்தனர். குழந்தைப் பருவம் முதலே இயற்கையோடு இயைந்த வாழ்வின் மீதே விருப்பம் இருந்தது.

* அம்மாவிடம் வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்றார். பிறகு எடின்பர்க் அகாடமியில் சேர்ந்தார். 14-வது வயதில் முதல் அறிவியல் கட்டுரையை எழுதினார். 1847-ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதம், இயற்கை தத்துவம் எனக் குறிப்பிடப்பட்ட இயற்பியல் மற்றும் தத்துவமும் பயின்றார்.

* தனிப்பட்ட முறையில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். கணிதத் திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 1850-ம் ஆண்டில் கேம்ப்ரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார்.

* நிறங்களின் தன்மைகள் குறித்து ஆராய்ந்தார். தனது ஆய்வு குறித்து ராயல் சொசைட்டி ஆஃப் எடின்பர்கில் முதல் விரிவுரையை நிகழ்த்தினார். விரைவில் அபெர்தீன் பல்கலைக்கழகத்தின் மாரிஸ் கல் கல்லூரியில் இயற்கை தத்துவத் துறையின் தலைவராகப் பதவியேற்றார்.

* மின் காந்தவியல் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். முதன் முதலில் மின்காந்த அலைகள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பரிசோதனை மூலம் நிரூபித்தார்.

* மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக் கொன்று தொடர்பற்ற முந்தைய ஆய்வுகள், சோதனைகள், சமன்பாடு கள் ஆகியவற்றை இணைத்து 1870-ல் மின்காந்தவியல் கோட்பாடு ஒன்றை உருவாக்கினார். மின்காந்த அலைகளுக்கான ஒருங்கிணைந்த சமன்பாடுகளை உருவாக்கினார். மாக்ஸ்வெல் சமன்பாடுகள் எனக் குறிப்பிடப்பட்ட இது மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என்பதை விளக்கின.

* வாயுக்களின் இயக்கக் கோட்பாட்டு (kinetic theory of gases) அம்சங்களை விளக்குவதற்காகப் புள்ளியியல் முறை ஒன்றை உருவாக்கினார். இது மாக்ஸ்வெல் விநியோகம் (Maxwell's distribution) எனக் குறிப்பிடப்படுகிறது.

* ரம்ஃபோர்ட் பதக்கம், கீத் பரிசு, ஹாப்கின்ஸ் பரிசு, ஆடம் பரிசு உள்ளிட்ட பல விருதுகள், கவுரவங்கள், பரிசுகளை இவர் பெற்றார். இவரது பெயரில் பல விருதுகள் வழங்கப்பட்டன. பல பல்கலைக்கழகங்களின் அறிவியல் துறை ஆய்வு மையங்கள், அறிவியல் அமைப்புகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டன.

* நீச்சல், மலையேற்றம், குதிரை சவாரி ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்தமானவை. கவிதை எழுதும் திறனும் பெற்றிருந்தார். இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்தவரும் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராகப் போற்றப்பட்டவருமான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், புற்றுநோய் கண்டு 1879-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 48-வது வயதில் மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in