ரசிகமணி டி.கே.சி. 10

ரசிகமணி டி.கே.சி. 10
Updated on
2 min read

தமிழின் பெருமையை அனைவரையும் உணர வைத்த தமிழறிஞரும் டி.கே.சி என அழைக்கப்பட்டவருமான டி.கே.சிதம்பரநாதன் முதலியார் (T.K.Chidambaranatha Mudaliar) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

ஸ்ரீவில்லிபுத்துரில் பிறந்தவர் (1881). இவரது இயற்பெயர் சிதம்பரநாதன். தென்காசியில் ஒரு திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். தாய் மீனம்மாளிடம் தினமும் மகா பாரதம், திருவிளையாடற் புராணக் கதைகளைக் கேட்டது சிறுவனுக்குள் கேள்வி ஞானத்தையும் சொல்லாற் றலையும் விழுதுவிட வைத்தன.

திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்தவக் கல்லுரியில் பட்டப் படிப்பும் பயின்றார். பின்னர் அங்கு தமிழ்ப் பேரவைத் தலைவரானார். மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ்ப் பேரவை சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவர் நிகழ்த்திய வரவேற்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழறிஞர் உ.வே.சாமிநாத அய்யர் உள்ளிட்ட சான்றோர்களை மிகவும் கவர்ந்தது. தமிழ் இவரிடம் கொஞ்சி விளையாடுவதை அறிந்த மகாகவி பாரதியார் இவரை அடிக்கடி சந்தித்தார்.

திருவனந்தபுரத்தில் சட்டம் பயின்று 1915-ல் வழக்கறிஞரானார். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் குடியேறினார். அந்த இல்லம் தமிழ் மாமன்றமாக மாறியது. தமிழ்க் கவிதைகளில் புதைந்து கிடந்த ஆழமான கருத்துகளையெல்லாம் வெளிக்கொணர்ந்து அவற்றின் சுவையை ஏராளமானோரை அனுபவிக்க வைத்ததால் ‘ரசிகமணி’ எனப் போற்றப்பட்டார்.

இவர் வீட்டில் கூடும் தமிழ் அன்பர்களிடையே, கம்பனின் கவியாற்றலையும் அவர் பெருமைகளையும் இவர் விவரிக்கும் பாங்கு கேட்போரை மெய்மறக்க வைத்தது.

வாரம் ஒருமுறை நடைபெறும் இந்த இலக்கிய முற்றம் ‘டி.கே.சி. வட்டத்தொட்டி’ எனப் பிரபலமடைந்தது. 1926-ல் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையராகப் பொறுப்பேற்றார். கம்பராமாயணத்தில் ஆழமாக மூழ்கிய இவர், அந்தக் காவியத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஏராளமான இடைச்செருகல்களை அடையாளம் கண்டார்.

அவற்றை நீக்கி, கடும் எதிர்ப்புக்கிடையே புதிய கம்பராமாயணப் பதிப்பை வெளியிட்டார். காந்தியடிகள் ஒருமுறை சென்னை வந்தபோது ராஜாஜி இவரை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். கம்பராமாயணத்தின் சில பாடல்களை ராகத்துடன் இவர் பாடக் கேட்ட காந்தியடிகள் இந்தக் காவியத்தை அதன் மூலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றதும் இவரோ ‘அதற்கு நீங்கள் தமிழனாகப் பிறக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டார்.

‘கம்பனைப் போன்று ஒரு ரசிகன் கிடைப்பதற்கு வள்ளுவர் 700 ஆண்டுகள் காத்திருந்தார். டி.கே.சி.யைப் போன்ற ஒரு ரசிகன் கிடைப்பதற்கு கம்பன் 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது’ என ஜஸ்டிஸ் மகாராஜன் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இசைக்கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்கள் இசைக்கப்பட வேண்டியது குறித்து இவர் எழுதிய கட்டுரைகளைப் படித்த செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், 1941-ல் தேவகோட்டையில் நடைபெற்ற இசை மாநாட்டில் இவரது சிறப்புரையை கேட்டு, தமிழ் இசையை பரப்பும் பணியைத் தொடர ரூ.30,000 நிதி கொடுப்பதாகவும் அறிவித்தார்.

இதையடுத்து சென்னையில் தமிழிசை மன்றம் தொடங்கப்பட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, தண்டபாணி தேசிகர் உள்ளிட்டோர் டி.கே.சி. தலைமையில் தமிழிசை மன்றம் நடத்திய இசை மாநாட்டில் தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். ‘வட்டத்தொட்டி நாயகர்’, ‘வளர்தமிழ் ஆர்வலர்’, ‘ரசிகமணி’, ‘குற்றால முனிவர்’ என்றெல்லாம் போற்றப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார் 1954-ம் ஆண்டு 73-ம் வயதில் மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in