Published : 19 Oct 2014 12:44 PM
Last Updated : 19 Oct 2014 12:44 PM

பாண்டுரங்க ஆதலே 10

# பழமையான தபோவன முறையில் ஆன்மிகக் கல்வி கற்றார். இவரது தந்தை வைஜ்நாத் ஆத்வலே நிறுவிய ஸ்ரீமத் பகவத்கீதா பாடசாலாவில் 22 வயதில் இருந்தே கீதை, உபநிஷத சொற்பொழிவுகள் நிகழ்த்தத் தொடங்கினார்.

# இந்தியாவின் தத்துவஞானி, ஆன்மிக குரு, சமூக மறுமலர்ச்சியாளர் என்று பல்வேறு வகையில் புகழ் பெற்றிருந்த அவரை ‘தாதாஜி’ என்று மக்கள் அன்புடன் அழைத்தனர்.

# ராயல் ஏஷியாடிக் நூலகத்தில் உள்ள மார்க்சிய சித்தாந்தம் முதல் தொன்மையான இந்தியாவின் தத்துவம் குறித்து ஒயிட்ஹெட் எழுதிய படைப்பு வரை அத்தனை இலக்கியங்களையும் 14 ஆண்டுகளில் படித்து முடித்தார்.

# ஜப்பானில் 1954-ம் ஆண்டு நடந்த 2-வது உலக தத்துவ மேதைகள் மாநாட்டில் இந்திய வேதங்கள் மற்றும் பகவத் கீதை குறித்து இவர் ஆற்றிய உரை உலகப் புகழ் பெற்றது. நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் டாக்டர் ஆர்தர் ஹோலி காம்ப்டன், இவரது உரையில் கவரப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்தார்.

# வேத தத்துவங்களின் அடிப்படையில் ‘ஸ்வத்யாய’ (சுயம் குறித்த ஆய்வு) என்ற அமைப்பை உருவாக்கினார். இது தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டது. நடைபயணமாகவும் மிதிவண்டியிலும் கிராமந்தோறும் சென்று அனைத்து தரப்பு மக்களும் இறைவனின் குழந்தைகளே என்ற கருத்தைப் பரப்பினார்.

# அஹமதாபாத்தில் இவர் தொடங்கிய ‘பவ் நிர்ஜார்’ கல்வி நிலையத்தில் யோகேஷ்வர் ஆலயத்தை எழுப்பினார். அங்கு நடக்கும் வருடாந்திர உற்சவத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை பங்கேற்கச் செய்தார்.

# ‘‘வெறும் கோட்பாடுகள் அடிப்படையிலான தத்துவம் நமக்கு தேவையில்லை. நம் அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய தத்துவங்கள்தான் தேவை” என்று பிரச்சாரம் செய்தார். அதையே தானும் பின்பற்றினார்.

# கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக கூட்டுறவு விவசாயம், மீன்பிடி தொழில், மரம் நடும் திட்டங்களை தொடங்கினார்.

# சமூக மறுமலர்ச்சிப் பணிக்காக 1996-ம் ஆண்டு மகசேசே விருது பெற்றார். ஒரு லட்சம் கிராமங்களில் பகவத் கீதை நெறிகளின் அடிப்படையில் மக்களின் சுய அறிவு மேம்பாட்டுக்கு பாடுபட்டதற்காக 1997-ம் ஆண்டு டெம்பிள்டன் விருது பெற்றார். அதே ஆண்டு பத்மவிபூஷண் விருதும் பெற்றார்.

# இவரது சோதனை முயற்சிகளை (ப்ரயோகா) அடிப்படை யாக வைத்து ஷியாம் பெனகல் 1991-ம் ஆண்டு தயாரித்த திரைப்படம் ‘அந்தர்நாத்’ (அகக்குரல்). கடைசி வரை அடித்தட்டு மக்களுக்காக உழைத்த பாண்டுரங்க வைஜ்நாத் ஆத்வலே 83-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x