

ஏப்ரல் 25-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட் டத்தில் மாவோயிஸ்ட்கள் 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்களைக் கொன்றனர். அதில் பத்மநாபன், செந்தில்குமார், அழகுபாண்டி, திருமுருகன் ஆகிய 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.20 லட்சம் அளித்தது. ராணுவ மரியாதையோடு வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
இந்த வீரத் தமிழர்களின் உடல்களைப் பார்க்கும்போது, 1980-ம் வருடம்தான் நினைவுக்கு வருகிறது.
அப்போது தருமபுரி மற்றும் தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் நக்சலைட்களின் நடவடிக்கை அதிகமாக இருந்தது. அடுத்தடுத்து கொலைகள். அதன் உச்சகட்டமாக ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் வி.பழனிச்சாமியும், இரண்டு தலைமைக் காவலர்களும் கொல்லப்பட்டு அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன.
மதுரையில் அற்புதசாமி, நெல்லையில் மாப்பிள்ளைசாமி, வட ஆற்காட்டில் ஏ.எம்.கோதண்டராமன், தென் ஆற்காட்டில் கலியபெருமாள் போன்றவர்கள் இந்த தீவிரவாத இயக்கத்தின் முன்னோடிகளாக இருந்தனர். அப்போது தமிழகத்தில் எம்ஜிஆர்தான் முதல்வர். இன்ஸ்பெக்டர் கொலை அவரை பெரும் கவலைக்குள்ளாக்கியது.
காட்பாடியில் நடந்த இன்ஸ் பெக்டரின் இறுதி ஊர்வலத்துக்கு அவரே தலைமை ஏற்றார். நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம். நாட்டின் கவனம் அங்கே திரும்பியது. இறந்த இன்ஸ்பெக்டர் பழனிச்சாமியின் மகள் பெயர் அஜந்தா.
ஆபரேஷன் அஜந்தா
நக்சல் இயக்கத்தினரைப் பிடிக்க நான்கு பிரிவுகள் கொண்ட ஒரு சிறப்பு போலீஸ் படையை அமைத்தார் எம்ஜிஆர். அதற்கு தலைமை வகித்தவர் அப்போது டிஐஜியாக இருந்த வால்டர் தேவாரம். அந்த நடவடிக்கைக்கு பெயர் ஆபரேஷன் அஜந்தா.
களத்தில் இருந்த காவலர் களுக்கு உளவுத்துறை தகவல்களை டிஐஜி மோகன்தாஸ், எஸ்.பி. அலெக்சாண்டர் அளித்த னர். ஓராண்டில் 19 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். கடைசியாக 1981-ல் 3 நக்சலைட்கள் கொல் லப்பட்டனர். அவர்களிடமிருந்து சீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நக்சல் வளர்ந்தது எப்படி?
1967-ல் மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் நக்சல் பாரி கிராமத்தில் கிராமவாசிகள் ஆயுதப் புரட்சி ஏந்தி நிலச்சுவான் தார்களை விரட்டி அடித்தனர். காவல் நிலையத்தைத் தாக்கி ஆய்வாளர் ஒருவரை கொன்றனர். வசதியான குடும்பத்தில் நன்கு படித்து வளர்ந்த சாரு மஜும்தார்தான் ஆயுதப் புரட்சி ஏந்தியவர்களுக்கு தலைவராக இருந்தார். பின்னாளில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை (மாவோயிஸ்ட்- லெனினிஸ்ட்) உருவாக்கினார்.
அதிகாரத்தைக் கைப்பற்ற, ஆயுதப் புரட்சிதான் வழி என்று முடிவு செய்தனர். பின்னாளில் இவர்கள்தான் நக்சல்பாரிகள் ஆனார்கள். சாரு மஜும்தார் 1972-ல் போலீஸாரால் கொல்லப் பட்டார்.
மீண்டும் தலைதூக்கியது
1980-களில் தமிழகத்தில் முற்றிலுமாக முறியடிக்கப்பட்ட நக்சலைட் நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்கின. 1991-ல் ஜெயலலிதா ஆட்சியின்போது தருமபுரியில் மீண்டும் நக்சல் இயக்கம் துளிர்க்கிறது என்று தகவல் வந்தது. ஏடிஜிபியாக இருந்த அலெக்சாண்டர் இந்த விவகாரத்தை கூர்ந்து நோக்கினார். அந்தப் பகுதி இளைஞர்கள் புரட்சி வலையில் விழக் காரணம் என்னவென்று ஆராய்ந்தார். வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமை, கந்துவட்டிக்காரர்களின் அட்டூழியம்.
இதுதான் காரணம் என்று கண்டறிந்த அலெக்ஸாண்டர், அங்கிருந்த காவலர்களோடு தினமும் அப்பகுதி இளைஞர்களை வாலிபால் விளையாடச் செய்தார். இதை மாவட்டம் முழுவதும் கொண்டு சென்றனர். விளையாட்டில் கவனம் செலுத்திய இளைஞர்களுக்கு புரட்சிகர ஆயுத சிந்தனை வரவில்லை.
கிராமங்களுக்கு இடையே வாலிபால் போட்டி நடந்தது.
அவர்கள் ஒன்றானார்கள். அப்போது ஒவ்வொரு கிராமத்து பிரச்சினையும்கூட வெளிச்சத்துக்கு வந்தது. ஒவ்வொரு விவகாரமாக களையப்பட்டது. பிறகு `நக்சல்”, ‘புரட்சி’ என்ற குரலே இல்லை.
சந்தன கடத்தல் வீரப்பன் கோலோச்சியபோது, அவரை வைத்து `புரட்சி மீண்டும் எழ இருந்தது. அதுவும் எடுபடவில்லை.
ஆந்திராவில் இருந்த மக்கள் போர் குழு (PEOPLE WAR GROUP - PWG), பிஹாரில் இயங்கிக் கொண்டிருந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் இரண்டும் இணைந்தது. இது சிபிஎம். (மாவோயிஸ்ட்) கட்சியானது. இவர்கள் எந்த தொடர்பு வசதியும் இல்லாத குக்கிராமங்களில் இருந்து செயல்படத் தொடங்கினர். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, பிஹார், மேற்கு வங்கம், ஆந்திரா (தெலங்கானா உட்பட), மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இவர்களது ஆளுமை அதிகமானது. பல மலைவாழ் கிராமங்களில் இவர்கள் இணை அரசாங்கம் நடத்திக்கொண்டிருந்தனர்.
2006-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி உள்துறையில் இடதுசாரி தீவிரவாத எதிர்ப்பு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டது. 2010 2015 வரை 2,162 பொதுமக்கள் பெரும்பாலும் பழங்குடிகள், 802 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இவர்களின் நிலங்களையும், இயக்கத்தின் முன்னனி தலைவர்களையும் குறைத்துக் கொண்டே வந்தது பாதுகாப்பு படை. இப்போது அவர்கள் அணைகிற விளக்கு. அதன் பிரகாசத்தை இப்போது சுக்மாவில் காட்டியுள்ளனர். அங்கே இடம் பறிபோனால், அவர்கள் தஞ்சம் அடையும் இடம் மேற்கு தொடர்ச்சி மலை. அதாவது தமிழக-கேரள எல்லைப்புற காடுகள்தான். எங்கோ நடக்கிறது என்று நாம் அஜாக்கிரதையாக இருந்துவிட முடியாது.