Published : 24 Jan 2017 09:14 AM
Last Updated : 24 Jan 2017 09:14 AM

இணைய களம்: மண்டியிட்டு வணங்குகிறேன்!

ராமசுப்ரமணியன் சுப்பையா

இந்தப் போராட்டத்தின் ஊடே சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தப்பட்டுவந்த திருமாவளவன்தான், இப்போது போராட்டத்தில் உள்ள மாணவர்களுக்குத் துன்பம் வந்தவுடன், அவர்களுக்கு ஆதரவாக ஜி.ராமகிருஷ்ணனுடன் முதலில் களம் இறங்கியிருக்கிறார். இதுதான் உண்மையான தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்பு. இக்கட்டில் ஓடி வந்து உதவாமல், ஓடி ஒளிந்துகொள்வது பேடித்தனம். அரசியல் கட்சிகளை உள்ளே விடவில்லை. இப்போது மட்டும் வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு மத்தியில் திருமாவளவன் நல்ல முன்னுதாரணம்.

மாணவர்கள் யாருக்காகப் போராடினார்கள்? அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ போராடும்போது அதில் சுய நலம் இருக்கும். ஆனால், மாணவர்கள் போராட்டம் முழுவதும் பொதுநலத்துக்காக, ஒரு இனத்தின் சுயமரியாதையைக் காப்பாற்றத்தானே போராடினார்கள். நீங்கள் செய்யவில்லை. அதனால் அவர்கள் செய்தார்கள். இந்த நேரத்தில் அவர்களை வஞ்சிக்காமல் அவர்களுக்குக் கை கொடுக்கக் களம் இறங்குங்கள். இல்லையென்றால், காலத்துக்கும் பாவத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்.

சிவசங்கர் எஸ்ஜே

அன்பு மாணவர்களே! நீங்கள் எப்போதோ ஜெயித்துவிட்டீர்கள். வாழ்வின் முக்கியமான பருவத்தில் அரசியலைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். துரோகிகளைச் சந்தித்துவிட்டீர்கள்.. போராட்ட உத்திகளில் தெளிவடைந்திருப்பீர்கள். அரசின் உண்மையான முகத்தையும் உணர்ந்திருப்பீர்கள்.

இது நீங்கள் கல்விச் சாலைகளில் கற்றுக்கொள்ளாத பாடம். அறமும் உணர்வும் ஊட்டிய கல்வி.

சுரண்டல் அரசியல்வாதிகளை இனங்கண்டு தெளிவாகப் புறக்கணியுங்கள். கலங்கலான கண்களுடன் என் முத்தங்கள் தங்கங்களே!

ஞாநி சங்கரன்

காவல் துறை ஆளுங்கட்சியின் விருப்பப்படி மட்டுமே செயல்படும் கருவி என்பதே என் எப்போதுமான கருத்து. அந்த அடிப்படையில்தான் கடந்த ஒரு வாரமாக மெரினாவில் முற்றிலும் மென்முறையில் நடந்துகொண்டது. இன்று காலை முதல் கூடியோரைக் கலைக்கச் சென்றபோதுகூட, தடிகளுடன் செல்லவே இல்லை. நான்கு ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக மன்றாடியும், ஒவ்வொருவராகக் கைப்பிடித்து வெளியேற்றியுமே செயல்பட்டது. யாரையும் காவல் துறை கடலை நோக்கித் துரத்தவே இல்லை. நேர் எதிர் திசையில் சாலைக்கே கொண்டுபோய் விட்டுக்கொண்டிருந்தார்கள். எப்படியாவது வன்முறை நடத்தப்பட்டே தீர வேண்டும் என்று விரும்பும் ‘ஏஜெண்ட் ப்ரொவெகேட்டர்கள்’தான் சில நூறு பேரைக் கடலோரத்துக்கு அழைத்துச் சென்று நிறுத்தினர். அப்போதும் அவர்கள் மீது எந்தத் தடியடியும் நடக்கவில்லை. திருவல்லிக்கேணியிலிருந்து மீண்டும் கடற்கரைக்கு நுழைய முற்பட்டவர்கள் சாலை மறியல் செய்தபோதுதான் தடியடி நடந்தது. இந்த உண்மைகளை மறைத்து பொய்ப் பிரச்சாரம், வன்முறையைத் தூண்டுவதற்காகவோ, அல்லது பன்னீர்செல்வத்தின் பதவியைக் குறி வைத்தோ நடக்கிறது.

ராஜண்ணா வெங்கட்ராமன்

சிலரின் சுயநலத்துக்காக அப்பாவிகள் பலரும் காவல் துறையின் அராஜகத் தாக்குதலுக்கு உள்ளாவதைத் தாங்க இயலவில்லை. தயவுசெய்து முடித்துக்கொள்ளுங்கள். பின்வாங்குவது தோல்வி அல்ல!

தம்பி பிரபு

“அம்மா இருந்தா இப்படி நடந்திருக்குமா.. ஹ்ம்ம்ம்ம்..”

‘‘போடா லூசு! உங்கம்மா இருந்திருந்தா ஒரு வாரத்துக்கு முன்னாடியே இது நடந்திருக்கும்.’’

ம.கு.வைகறை

அவசரச் சட்ட நகலுடன் நீதியரசர் அரி.பரந்தாமன் மெரினாவில் மாணவர்களுக்கு விளக்கம். # இதைத்தானே மாணவர்கள் கேட்டார்கள்? இதை முன்னதாகச் செய்திருக்கக் கூடாதா?

ஜெய தேவன்

நேற்றே வெற்றி அடைந்துவிட்டீர் பிள்ளைகளே.. இனி வருவதை வருங்காலத்தில் பார்க்கலாம்...இப்போது விடை கொடுங்கள்.

மணி எம்கேமணி

மத்திய அரசு கலவரத்துக்கான காரணம் கேட்பதாய்ச் சொல்லுகிறார்கள். நீங்கதான் ஜென்டில்மேன் என்று எழுதிக் குடுங்கப்பா.

விஜயசங்கர் ராமசந்திரன்

மாணவர்கள் அமைதியாகப் போராடியபோது அமைதி காத்தவர்கள், அவர்கள் அடிவாங்கும்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

மதிமாறன்

மண்டியிட்டு வணங்குகிறேன்

ஜல்லிக்கட்டல்ல, மாடு வளர்ப்பது கூட மீனவ மக்களுக்கு அவசியமற்றது. காரணம், புற்கள் அற்ற கடற்கரையில் மாடு வளர்ப்பு சாத்தியப்படாது. கால்நடை வளர்ப்பு விவசாயத்தோடு தொடர்புடையது. ஆனாலும், மாணவர்களை எல்லோரும் விட்டு ஓடியபோது, தன்னை நம்பி, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்று மாவீரர்களாக வந்து மாணவர்களுக்கு அரணாக நின்ற எம் மீனவப் பெண்களையும் ஆண்களையும் மண்டியிட்டு வணங்குகிறேன்.

உழைக்கும் மக்கள் எப்போதுமே மகத்தானவர்கள்.. அவர்கள்தான் நமக்குக் கற்றுத் தருகிறார்கள். ஈடு இணையற்ற போராளிகளாகவும் இருக்கிறார்கள்.

ராஜன் குறை

முதலில் நாம், முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் போடுபவர்கள், போராடும் மக்களைப் பார்த்து இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று பேசுவதை நிறுத்த வேண்டும். நாம் ஆட்சியாளர்களை, அரசியல் கட்சிகளை நோக்கித்தான் பேச வேண்டும். ஒன்று, முதலமைச்சரும் பிரதமரும் (தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது: மெரினாவில் அவரைத்தான் லட்சக்கணக்கானோர் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்) நேரடியாக அவர்களுடன் பேச வேண்டும் (ஊடகம் மூலமாக மற்றும் நேரில் சென்று). அது மக்களை மதிக்கும் அரசியல் வழிமுறை. அல்லது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அது அரசின் வழிமுறை. நாம் இரண்டாவது முறையை தவிர்த்து, முதல் வழிமுறையைக் கைக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதே கருத்தாளர்களாக நமது கடமை. ஒரு ராணுவ விமானத்தில் ஏறி இரண்டே மணி நேரத்தில் பிரதமர் மெரினாவுக்கு வர முடியும். மைக் பிடித்துப் பேச முடியும்; விளக்க முடியும். ஒன்றும் கெளரவம் குறைந்து போகாது.

மக்களிடையே சென்று பேச வேண்டாம்... அறையில் உட்கார்ந்துகொண்டு பத்து நிமிடம் பொறுமையாகப் பேசி, ஒரு கோரிக்கை காணொளியை ஒரு முதலமைச்சரால் வெளியிட முடியாதா? வாட்ஸ்அப்பில் போட்டால் வைரலாகப் பரவுமே.

ஆட்சியாளர்களை நோக்கிப் பேசாமல், மக்களை நோக்கிப் பேசினால் நாமே அரசியலைச் சீர்கெடுக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

சரண் ராம்

சர்வ நிச்சயமாய்ச் சொல்ல முடியும்.. அறப் போராட்ட மாணவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. இது அரசியல் சூழ்ச்சி. எதிர்காலத்தில் இனி எவனும் கேள்விகேட்டு ஒன்றுகூடக் கூடாது என்பதற்காக அரசால் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட சதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x