Published : 14 Jun 2016 10:09 AM
Last Updated : 14 Jun 2016 10:09 AM

சென்னை புத்தகக் காட்சி | அடுத்த முறை யோசியுங்கள்!

காலையில் தொடங்கினால் என்ன?

காலையில் 6 மணி வாக்கிலேயே புத்தகக்காட்சியைத் தொடங்குவது தொடர்பாக யோசிக்கலாம். 11 மணியோடு முழுக்கு. மீண்டும் மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை யோசிக்கலாம். வியர்வை, புழுக்கத்தைத் தவிர்க்க உதவுவதோடு வெளியூர் வாசகர்களையும் பெரிய அளவில் ஈர்க்க இது உதவும்.

பழச்சாறும் தண்ணீரும்!

நியாயமான விலையில் தரமான மோர், பானகம், அசல் பழச்சாறு, பழத்துண்டுகள் விற்பனையை அரங்க வளாகத்துக்குள் ஊக்குவிக்கலாம். கூடவே எல்லா வரிசைகளிலும் தண்ணீர் கிடைக்க வழிவகுக்கலாம். அதேபோல, அரங்குக்குள் குளிர்சாதன வசதியைப் பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது சாத்தியமானால் கோடையில் ஒரு புத்தகக்காட்சி; குளிரில் ஒரு புத்தகக்காட்சி என்று இரு காட்சிகளுக்குத் திட்டமிடலாம்.

துணிப்பை விற்பனை!

நியாயமான விலையில் பெரிய துணிப் பைகளை வளாகத்தில் ஆங்காங்கே விற்கலாம். பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க வழிவகுக்கும். வாகனங்கள் நிறுத்தியிருக்கும் இடம் வரை புத்தகங்களைச் சுமந்து செல்ல ஏதுவாக தள்ளுவண்டிகள் ஆங்காங்கே நிறுத்தலாம்!

தேவை தகவல் உதவி மையங்கள்!

ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தகவல் உதவி மையம். ஒரு பதிப்பகத்தின் அரங்கையோ, புத்தகத்தின் பெயரையோ சொல்லி விசாரித்தால் எந்த அரங்குக்குச் செல்ல வேண்டும் என்று விவரம் சொல்வதற்கு ஏற்ப. வாசகர்கள் அலைச்சலைக் குறையுங்கள்!

நட்சத்திரங்களுக்குக் கட்டுப்பாடு!

புத்தகக் காட்சிக்கு இலக்கிய, சினிமா, அரசியல் பிரபலங்கள் வரும்போது கூடவே அவர்களோடு அரங்குக்குள் ஊடகங்கள் கேமரா சகிதம் படையெடுப்பதற்கும் அரங்குகளிலேயே நின்று அவர்கள் பேட்டி கொடுப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். ஓரளவுக்கு மேல் கூட்டமாக செல்ஃபி, ஆட்டோகிராஃப் வேட்கையோடு பாயும் விசிறிகளைக் கட்டுப்படுத்தவும் அரங்குக்குள் ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும். வாசகர்களுக்கும் இது குடைச்சல்; புத்தக விற்பனையாளர்களுக்கும் குடைச்சல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x