

மெட்றாஸ் பட்டணத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த 3 நிறுவனங்களைச் சுருக்கமாக ஏ.பி.பி. (A.B.P.) என்று அவற்றின் ஆங்கில முதல் எழுத்தின் சுருக்கமாக அழைப்பார்கள். அவை முறையே அர்பத்நாட், பின்னி, பாரி ஆகிய நிறுவனங்களாகும். அவற்றில் மிகவும் மூத்ததான பாரி நிறுவனம் இப்போதும் வலுவுடன் திகழ்கிறது. பின்னி அடுத்த மூத்த நிறுவனம். பின்னி நிறுவனம் மட்டுமல்ல அதற்குள் ஒரு குட்டி சாம்ராஜ்யம். 1980-களின்போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஏற்பட்ட சேதத்தில் இருந்து அது மீள வேண்டும் என்பதே என் விருப்பம். அர்பத்நாட் நிறுவனம் அது தொடங்கிய இன்னொரு கிளை நிறுவனமான கிலாண்டர்ஸ் அர்பத்நாட் என்பதன் மூலம் இன்னமும் வாழ்கிறது.
பின்னி நிறுவனம் இப்போதுள்ள துரதிருஷ்டவசமான நிலைமை காரணமாக தனது 200-வது ஆண்டு விழாவைக் கூட கொண்டாட முடியாமல் இருக்கிறது. வட சென்னையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த பின்னி நிறுவனத்தை மட்டும் புதுப்பிக்க முடிந்தால் அது பெரிய கொண்டாட்டத்தை நிச்சயம் ஏற்படுத்தும். ஒரு வர்த்தக நிறுவனம் நிர்வாக முகமையாக மாறி, பிறகு மெட்றாஸ் மாநகரிலேயே முக்கியமான தொழில் கேந்திர சின்னமாக மாறிய ‘பக்கிங்ஹாம் அண்ட் கர்நாடிக் மில்ஸ்’ நிறுவனமானது.
கர்நாடக நவாபின் ஆட்சிப் பகுதியில் டாக்டராக சேவை செய்ய ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த 18 வயதே நிரம்பிய ஜான் பின்னி என்பவர் 1797-ல் மெட்றாஸ் பட்டணத்தில் காலடி எடுத்து வைத்தார். அவர்தான் பின்னி வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார். “அவரிடம் யார் சிகிச்சை பெற்றார்கள்? அவர்களை அவர் பிழைக்க வைத்தாரா? பரலோகம் போக வைத்தாரா? ஏதாவது சிறிய அறுவைச் சிகிச்சையாவது செய்தாரா என்றெல்லாம் ஒரு தகவலும் நமக்குத் தெரியாது” என்று எஃப். டிசௌசா வியப்போடு பதிவிட்டிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தைப் பார்க்கும்போது அவர் தனியாக வங்கித் தொழிலில் ஈடுபட்டிருப்பார் என்று அனுமானிக்க முடிகிறது.
1800-ல் அவரும் டென்னிசன் என்பவரும் சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அப்போது இருந்துதான் பின்னி அண்ட் கோ-வின் வரலாறு பிறக்கிறது. (ஜான் பின்னியை ஜான் ‘டெஃப்’ (செவிடு) பின்னி என்று அழைத்திருக்கிறார்கள்) பிற்காலத்தில் ஹோட்டல் கன்னிமாரா முளைத்த இடத்தில்தான் பின்னிக்கு பங்களா இருந்திருக்கிறது. பின்னிக்காக யார் 200-வது பிறந்த நாள் வாழ்த்து பாடுவார்கள் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். பாடாவிட்டாலும் பரவாயில்லை அதற்குப் புத்துயிர் ஊட்ட முடியுமா?
- சரித்திரம் தொடரும்…