

M.G.R. தனது ரசிகர்களில் ஏராளமானோரை அரசியலில் வளர்த்தவர். அவர்களை முக்கிய பதவிகளில் அமரவைத்து அழகுபார்த்தவர். அவரால் அரசியலில் உயர்ந்து தனது அதிரடியான நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய முடிவுகளாலும் தமிழகத்தைக் கலக்கியவர் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன்!
சிறுவயதில் இருந்தே பி.எச். பாண்டி யன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். 1959-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கும் போது அங்குள்ள நகராட்சி பயணியர் விடுதியில்தான் எம்.ஜி.ஆரை முதன் முதலாக சந்தித்தார். 1972-ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, கட்சியில் சேர்ந்தார். அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக பி.எச்.பாண்டியனை எம்.ஜி.ஆர். நியமித் தார்.
காலையிலேயே எம்.ஜி.ஆரின் ராமா வரம் தோட்டத்துக்கு பி.எச்.பாண்டியன் சென்று அங்கேயே சிற்றுண்டியை முடித்து விடுவார். பின்னர், நீதிமன்றம் சென்று விட்டு மதியம் சென்னை மாம்பலம் அலுவலகத்திலோ, அல்லது படப்பிடிப் பிலோ, எம்.ஜி.ஆர். எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து அங்கு சென்று அவ ருடன் உணவருந்துவார். சில நேரங்களில் அவருக்காக எம்.ஜி.ஆர். காத்திருப்பார்!
1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் பி.எச்.பாண்டியனை அதிமுக வேட்பாள ராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார் எம்.ஜி.ஆர்.! 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற அவரை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். பின்னர், சபாநாயகராகவும் பி.எச்.பாண்டியன் உயர்ந்தார்.
துணை சபாநாயகராக பி.எச்.பாண்டி யன் இருந்தபோது, பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரில் நடந்த உலக சட்ட மாநாட்டுக்கு அவரை முதல்வர் எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார். 15 நாட்கள் மாநாடு முடிந்து சென்னைக்கு விமானத்தில் அவர் திரும்பியபோது நள் ளிரவு 12 மணி. அந்த நேரத்தில் விமான நிலையத்தில் காத்திருந்து பி.எச்.பாண் டியனை கட்டியணைத்து எம்.ஜி.ஆர். வரவேற்றார். அவரது அன்பில் பாண்டியன் நெகிழ்ந்து போனார்.
1952-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை அலுவலகம் அரசின் பொதுத்துறையோடு இணைக்கப்பட் டிருந்தது. பி.எச்.பாண்டியன் சபாநாயக ராக இருந்தபோதுதான், முதல்வர் எம்.ஜி.ஆரோடு ஆலோசித்து அரசியல் சட்டத்தின் 187-வது பிரிவின்படி சுதந்திர மான அமைப்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தை ஏற்படுத்தினார்.
‘‘நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். டிக்கெட் வாங்க கூட்ட நெரிசலில் முண்டியடித்துச் சென்றுகூட அவரது படங்களைப் பார்த்த அனுபவம் உண்டு. அரசியலில் மட்டுமின்றி வழக்கறிஞர் தொழிலிலும் என்னை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று நான் சாப்பிடும் சாப்பாடு அவரது சாப்பாடுதான்!’’ என்று பி.எச்.பாண்டியன் நன்றியோடு கூறுகிறார்.
ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆரோடு அவரது வீட்டில் இருந்து அவரது காரிலேயே புறப்பட்டார் பாண்டியன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நிற்பதைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி அவர் களை எம்.ஜி.ஆர். விசாரித்தார். அதில் ஒரு வர் நெல்லையைச் சேர்ந்த கமலா செந்தில் குமார். மற்றொருவர் சேலத்தைச் சேர்ந்த இளைஞர். இருவருமே பட்டதாரிகள். தங்களுக்கு வேலை வேண்டும் என்று கோரி எம்.ஜி.ஆரிடம் மனு அளித்தனர். மறுநாளே இரண்டு பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் சென்றனர். கமலா செந்தில் குமாரும் அந்த இளைஞரும் முறையே நெல்லை மற்றும் சேலம் மாவட்டங்களின் ஆவின் சேர்மன்களாக நியமிக்கப்பட்ட உத்தரவை அவர்களிடம் வழங்கினர். ‘‘இப்படி ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப் படுத்திப் பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்று பி.எச்.பாண்டி யன் கூறுகிறார்.
எந்த சூழலிலும் எம்.ஜி.ஆர். பதற்றம் அடைய மாட்டார். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வ தோடு, இக்கட்டான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றிவிடுவார். 1978-ம் ஆண்டு பார் கவுன்சில் பொன்விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. பி.எச்.பாண்டியன் அப்போது எம்.எல்.ஏ.மட்டுமின்றி, பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசினார்.
‘‘தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சியை தலைநகராக மாற்றலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கருத்து தெரிவித்தார். அதற்கு வழக்கறிஞர்கள் கரவொலி எழுப்பினர். அவருக்குப் பின் பேசிய அகில இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்த ராம் ஜெத்மலானி, ‘‘நெஞ்சுப் பகுதியில் இதயம் உள்ளது. தலைக்கு உள்ளே மூளை இருக்கிறது. அவற்றை இடம் மாற்றினால் என்ன ஆகும்?’’ என்றார். அதற்கும் பலத்த கரவொலி. தர்மசங்கடமான சூழ்நிலை. பதில் சொல்ல எம்.ஜி.ஆர். எழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு!
‘‘வழக்கறிஞர்கள் நான் சொன்னதற் கும் கைதட்டினீர்கள். ராம் ஜெத்மலானி கூறியதற்கும் கைதட்டுகிறீர்கள். உங்கள் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?’’ என்று கூட்டத்தினரை எம்.ஜி.ஆர். கேட் டார். கூரையே இடிந்துவிழுவது போல கரவொலியும் ஆரவாரமும் எழுந்தன. சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
‘‘1973-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர். மீது ஒரே நாளில் ஒன்பது மானநஷ்ட வழக்குகள் அரசு தரப்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ‘‘என்ன செய்யலாம்?’’ என்று எம்.ஜி.ஆர். என்னுடன் ஆலோ சித்தார். உயர் நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். சார்பில் நான் மனு தாக்கல் செய்தேன். ‘‘அரசு தரப்பில் தொடரப்பட்ட முதல் வழக்கிலேயே மானம் நஷ்டம் என்றால் மீதி உள்ள 8 வழக்குகளில் இழப்பதற்கு மானம் இல்லை’’ என்று வாதாடி அப் போது நீதிபதியாக இருந்த வி.பாலசுப்பிர மணியம் மூலம் தடை ஆணை பெற்றேன். பின்னர், எம்.ஜி.ஆருக்கு எதிரான வழக்கு கடைசிவரை விசாரணைக்கு வரவே இல்லை’’ என்கிறார் பி.எச்.பாண்டியன்!
- தொடரும்...
பி.எச்.பாண்டியனும் அவருடன் சில வழக்கறிஞர்களும் ஒருநாள் எம்.ஜி.ஆரை பார்க்கச் சென்றனர். அவர்களிடம், தான் வைத்திருந்த சிறிய சோனி டிரான்ஸிஸ்டர் ரேடி யோவைக் காட்டி, ‘‘இதைப் பிரிக்கத் தெரியுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். மவுனமாக நின்றவர்கள் முன்பு, ரேடியோவை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து, பின்னர் மீண்டும் சரியாக பொருத்திக் காண்பித்தார். ‘‘எம்.ஜி.ஆருக்குத் தெரியாதது எதுவும் இல்லை’’ என்று வியக்கிறார் பி.எச்.பாண்டியன்! |