Last Updated : 04 Oct, 2013 10:57 PM

 

Published : 04 Oct 2013 10:57 PM
Last Updated : 04 Oct 2013 10:57 PM

கஜானாவா... கல்வியா?

Tamil nadu State Marketing Corporation - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரமான TASMAC-க்கின் விரிவாக்கம்தான் இது.

இந்த டாஸ்மாக்கின் தாக்கம் எவ்வளவு வீரியமானது என்று கடந்த வாரம் வந்த ஒரு செய்தியை பார்ப்போம்...

ஒன்பதாம் வகுப்பு மணவன் ஒருவன் குடிப்பதற்காக ஒரு பீரை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட குலுக்கலில் அந்த பீர் பாட்டில் திடீரென வெடித்ததில், அந்த மாணவன் உயிரிழந்தான்.

இந்தச் செய்தியை படித்ததும் பகீரென்று இருந்தது. இன்று சிறுவர்கள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமில்லாமல், அனேகமாக எல்லோர் கையிலும் பீர், பிராந்தி, விஸ்கி என்று ஏதோ ஒன்று நீக்கமற நிறைந்திருக்கிறது. குடிப்பது தவறென்ற குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல் குடிக்கும் அளவிற்கு மாணவர்களையும் மாற்றி வைத்திருக்கிறது நம் சமூகம்.

யார் செத்தால் என்ன? எவன் குடி கெட்டாலென்ன? நமக்கு கஜானா நிறைந்தால் சரிதான் என்று வாய்மூடி மௌனமாக இருக்கிறது அரசு.

மற்றவர்கள் குடிப்பதை நாம் தடுக்கவோ, திருத்தவோ முடியாது. ஓரளவு சொல்லத்தான் முடியும். அதையும் மீறி குடிப்பேன் என்று அடம்பிடிப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.

காங்கிரஸ் காலத்தில் குடிப்பவர்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டு வந்தது. குடிப்பவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த பர்மிட் இருக்கும். அப்படி வழங்கப்படும் பர்மிட்டில் ஒருவர் குடிக்கக்கூடிய அளவு குறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவை மீறி சரக்கு வாங்க முடியாது. தேவையென்றால், தகுந்த காரணங்கள் கூறி இன்னொரு பர்மிட் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

ஆனால், இப்போதோ... வயது வரம்பில்லாமல் எல்லோருக்கும் சரக்கு வழங்கப்படுகிறது. காசு இருந்தால் போதும் யாரும் குடிக்கலாம் என்ற நிலையை மாற்றி, அரசு சில விதிமுறைகளை வகுக்கவேண்டும். குடிப்பவர்களுக்கு வயது வரம்புகளை அமல் படுத்த வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் தான் சரக்கு விற்கவேண்டும். சிறுவர்களுக்கு / மாணவர்களுக்கு விற்கக்கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டளையிட வேண்டும் அரசு. அதையும் மீறி சிறுவர்கள் / மாணவர்களுக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.

இப்படி ஏதாவது செய்தால்தான் வருங்காலத்தில் மாணவர்கள் குடியினால் சீரழிவதை ஓரளவாவது தடுக்கமுடியும்.

கட்டுரையாளரின் வலைத்தளம் > www.rahimgazzali.com

*****

| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் |

*****

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x