Published : 30 Dec 2016 06:56 PM
Last Updated : 30 Dec 2016 06:56 PM

சமூக ஊடகம் 2016: கவனம் ஈர்த்த 10 ஃபேஸ்புக் கருத்தாளர்கள்

அகத்தின் அழகு முகப்புத்தகத்திலும் தெரியும் என்ற அளவுக்கு இன்று ஒவ்வொரு தனிநபரையும் ஆட்கொண்டிருக்கிறது சமூக வலைதளங்கள். சமூக வலைதளங்களும் கூர்மையான கத்தி போன்றதே கவனமாக கையாளாவிட்டால் நம் கையை பதம் பார்க்கும். சமூக வலைதளங்களை பொழுதுபோக்காக மட்டுமே அல்லாமல் ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் எண்ணற்றோர் இருக்கின்றனர். அவர்களில் 2016-ல் கவனம் ஈர்த்த சிலர் குறித்த அறிமுகமே இந்தத் தொகுப்பு:

ஏழுமலை வெங்கடேசன்:

'ஊடகத் துறையில் முன்னாள் செய்தி ஆசிரியர்' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் ஏழுமலை வெங்கடேசன், தமிழ் சமூக வலைதளச் சூழலின் பிரபலங்களில் முக்கியமானவர். அங்கிங்கெனாதபடி 'பிரேக்கிங் நியூஸ்' கிடைக்கும் சூழலில், 'பிரேக்கிங் வியூஸ்' பதிந்து, நாட்டு நடப்புகளை எந்தக் கோணத்தில் அணுக வேண்டும் என்ற புரியும் வகையில் தன் பின்தொடர்பாளர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்.

நுங்கம்பாக்கம் தொடங்கி நார்வே வரை நிலப்பரப்பு வரையறையின்றி உள்ளூர் - உலக சமூக, அரசியல் நிகழ்வுகள் குறித்து தன் அனுபவபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் கருத்துகளைப் பதிந்து கவனம் ஈர்ப்பார். எந்த ஒரு சீரியஸ் விவகாரங்களாக இருந்தாலும், அதில் ரசிக்கத்தக்க நையாண்டியை இழையோடச் செய்வது இவரது தனித்துவங்களுள் ஒன்று.

அதேநேரத்தில், தன் பார்வையில் தெறிக்கும் கோபங்களையும் வார்த்தைகளால் பதிவு செய்யத் தவறுவதில்லை. மிக நீண்ட கட்டுரை வடிவத்தில் இல்லாமல் சில நிமிடங்களில் வாசிக்கத்தக்க வரிகளில் முழு கருத்துகளையும் நிறைவுடன் பகிர்வதும் சிறப்பு.

தமிழ்ச் சூழலில் செய்தி ஊடகத் துறை சார்ந்தவர்கள் தங்கள் ஆக்கங்களை மட்டுமே பகிரக் கூட களமாக சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வரும் சூழலில், தன் கண்ணோட்டத்தை அப்பட்டமாக பதிவு செய்ய முனைவதே இவரை தவிர்க்க முடியாத நெட்டிசனாக நம்மிடம் முன்னிறுத்துகிறது.

செய்தித்தாள்களில் ரிலாக்ஸ் பக்கம் இடம்பெறுவது போல, இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது நடிகைகளின் படங்களுடன் ஜாலியான பதிவுகளை கொட்டி, தன் பின்தொடர்பாளர்களை குதூகலிக்கவைப்பது எந்த மாதிரியான போக்கு என்பது அவருக்கே வெளிச்சம்!

ஏழுமலை வெங்கடேசனின் ஃபேஸ்புக் பக்கம் >https://www.facebook.com/Ezumalai.venkatesan.16

***

ஷான் கருப்புசாமி

2015 டிசம்பர் மாத மழை நிவாரணப் பணிகள் ஆகட்டும், வார்தா புயலாகட்டும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவாகட்டும், போகிற போக்கில் கருத்தை அள்ளித் தெளித்துச் செல்லாமல் இணையத் தலைமுறைக்கு செறிவார்ந்த தகவல்களையும், அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் சொல்லிச் செல்பவை அவரின் சிந்தனைகள். நம் சிந்தனைகளை மெருகூட்டும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.

மென்பொருள் துறையில் பணிபுரிந்தாலும், தமிழார்வம் கொண்டவர். வெறுமனே ஃபேஸ்புக் எழுத்தராக மட்டுமல்லாமல் கதைகள், கவிதைகளும் எழுதி வருகிறார். விகடன், கணையாழியில் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன. அவரின் அம்மா குறித்த கவிதையை இன்று படித்தாலும் கண்ணில் நீர் சுரக்கும். நெஞ்சில் பாசம் பெருக்கெடுக்கும்.

நாம் வழக்கமாக பார்க்கும் அதே செய்தியை, தகவலை, சம்பவத்தை புதியதொரு கோணத்தில் அணுகுபவர். உலகச் செய்திகள், தொழில்நுட்பத் தகவல்களை எளிய தமிழில் எல்லோருக்கும் விளங்கும்படி எழுதுவார். மாரத்தான், உடல்நலம், ஆரோக்கிய உணவு ஆகியவை குறித்து எழுத்து மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். உடற்பயிற்சி தொடர்பான தகவல்களை தொடர்ந்து பதிவிடும் ஷான், ''உள்ளத்தனைய உடல்'' என்ற குழுமத்தைத் தொடங்கி அதை நிர்வகித்தும் வருகிறார்.

இதனால் அவரை சீரியஸ் எழுத்தாளர் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள். போகிற போக்கில் மெலிதான கிண்டலையும், நகைச்சுவையையும் இழைத்துச் செல்லும் எழுத்துகள் அவருடையவை. மொத்தத்தில் என்னுடைய ஃபேஸ்புக் டைம்லைனின் பெருமித அடையாளம் அவர்!

அவரது ஃபேஸ்புக் பக்கம்: >https://www.facebook.com/shanmugame?fref=ts

***



விக்னேஷ் எஸ்பி

அரசியல், சினிமா, விளையாட்டு , விளம்பரம், கல்வி என அனைத்து துறைகளில் நிகழும் முக்கிய சம்பவங்களை சமூக வலைதளங்களில் இன்றும் பெரும்பாலும் செய்திகளை காட்டிலும் மீம்ஸ் வழியாகதான் கொண்டு செல்லப்படுகிறது.

அத்தக்கைய மீம்ஸ்களை உருவாக்குபவர்கள் சில நேரங்களில் அறம் சார்ந்து சிந்திக்காமல் இருப்பதால், சில நேரங்களில் இந்த மீம்ஸ் சரியா, தவறா என்ற விவாத பொருளாக மாறி விடுகிறது.

சமூக வலைதளங்களில் உங்களை பின் தொடர்பவர்களுக்கு நீங்கள் தவறான புரிதலை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் தார்மீக பொறுப்பு அனைத்து மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கும் உண்டு.

நீங்கள் மீம்ஸ் செய்ய தேர்தெடுக்கும் களம் எதுவாயினும் கொஞ்சம் தார்மீகத்துடன் செயல்பட்டால் உங்களை அன்போடு பின்தொடரும் பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் விக்னேஷ்வர் எஸ்பி.

இந்த பெயரை மீம்ஸ்களில் பார்த்ததில்லையே என்று யோசிக்கிறீர்களா? 'VR' மீம்ஸ் என்ற பெயரில்தான் இவர் மீம்ஸ்களை உருவாக்கி வருகிறார்.

விக்னேஷ்வர் எஸ்பியின் மீம்ஸ்கள் பொறுத்தவரை, அவை பெரிய அரசியல் கருத்தை பேசுவதில்லை, பெண் வெறுப்பை பேசுவதில்லை, கருத்து கூற போகிறேன் என்று விவாதத்தை ஏற்படுத்தவில்லை. உண்மையை சொல்ல வேண்டியது என்றால் அவரது மீம்ஸ்கள் அறிவுரைகள் வழங்குவதில்லை இதுதான் மிக முக்கியமான அவரது அணுகுமுறை.

அவர் தனக்கே உரிய இயல்பான பாணியை தனது மீம்ஸ்களில் பின்பற்றுகிறார் அதில் தனது தனித்துவத்தை கொண்டு வருகிறார். இதனால்தான் அவர் ஃபேஸ்புக்கில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்.

விக்னேஷவர் எஸ்பியின் மீம்ஸ்கள் இல்லத்தில் நமது சகோதர, சகோதரியுடன் கொண்டுள்ள உறவின் அழகியலை பேசுகிறது. அம்மா மகன்களுக்கு இடையேயான அன்பினை நகைச்சுவை கலந்து கூறுகிறது. நமக்கும் நமது பக்கத்து வீட்டுக்கும் உள்ள உறவை நக்கலுடன் பதிக்கிறது.

விக்னேஷ்வர் எஸ்பி, தன்னை பின் தொடரும் பார்வையாளர்களின் முகத்தில் புன்முறுவல் வர வைக்கிறார்.அதுவும் எவரையும் காயப்படுத்தாமல் ஒரு நகைச்சுவை கலைஞனக்கு ஈடான பணியை சமூக வலைதளத்தில் அரங்கேற்றி வருகிறார் விக்னேஷ் எஸ்பி.

>https://www.facebook.com/profile.php?id=100010702328433&fref=ts

***

அஸ்வினி சிவலிங்கம்

அஸ்வினி சிவலிங்கம், இளம் ஊடகவியலாளர். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுபவர்களை 'ஃபேஸ்புக் போராளிகள்' என கிண்டல் செய்பவர்கள் மத்தியில் 'ஆமாம் நான் போராளிதான்' என்பதை தனது ஆழமான நிலைத்தகவல்களால் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

குறுகிய காலத்தில் பளிச்சிட்ட இவரது வளர்ச்சி பாராட்டத்தக்கது. 'இந்த பூமியில் நான் யாருக்கும் பாரமில்லை' இப்படித்தான் தன்னைப் பற்றி விவரித்திருக்கிறார் அஸ்வினி. இடஒதுக்கீடு குறித்து அவர் பதிந்திருந்த பகிர்வு 'இதனால்தான் நாங்கள் எல்லாம் அப்ராட் போறோம்னு அலட்டிக்கொள்பவர்கள்' அவசியம் வாசிக்க வேண்டியது. அவரது கோப தெறிப்புகள் நியாயமானதாகவே இருக்கும். அத்தனையும் கோபம்தானா என்றால் இல்லை. அங்கே காதல் கவிதையும் இருக்கும், குழந்தைக்கே உரித்தான குறும்பும் இருக்கும்.

சசிகலாவின் அரசியல் பிரவேச ஆர்வக்கோளாறை கலாய்த்து ஸ்டேட்டஸ்களும் மீம்ஸ்களும் பறந்துகொண்டிருந்த வேளையில், அஸ்வினி நிதானமாக பதிந்த வார்த்தைகள்: "ஜெயலலிதா சசிகலாவை அரசியலில் கொண்டு வரவேண்டும் என்று நினைத்து இருந்தால் எப்போதோ கட்சியில் உயர் பதவியும், அமைச்சர் அவையில் இடமும் கொடுத்து இருப்பார். சசிகலா அரசியலில் பங்கு பெறுவதை ஜெயலலிதா விரும்பவில்லை. இந்த கோணத்தில் ஏன் யோசித்து பார்க்கவில்லை" என்பதே.

ஸ்டேட்மென்டுகளாக இல்லாமல் விவாத களத்துக்கான கருவாக இருப்பதே அவருடைய சிறப்பு.

அஸ்வினியின் ஃபேஸ்புக் பக்கம்: >https://www.facebook.com/ashwini.sivalingam.5

***

சண்முக வடிவு

எத்தனை டென்ஷன்கள், கோபங்கள், வருத்தங்கள் இருந்தாலும் இவரின் பதிவுகளைப் பார்க்கும்போது அவை அனைத்தும் வாயிலிட்ட பஞ்சு மிட்டாயாய்க் கரையும். இவரின் வரிகளைப் படிப்பவர் மனதும் லேசாகும். ''சிரித்துக் கடப்போம்...சுமையின் வலியேனும் குறையும்'', ''எதிர்பார்ப்புகளற்ற மனமும், எதையும் தாங்கும் திடமும் இருந்தால்... எல்லா நேரமும் சுகம்தான், எந்த இடமும் சொர்க்கம்தான்...'' என்று பாசிட்டிவ் வார்த்தைகளை விதைக்கிறார்.

கீரைக்காரப் பாட்டி, பழக்கடைத் தாத்தா, காய்கறி விற்கும் அம்மா என்று வார்த்தை அலங்காரங்களாய் மட்டுமே நிகழ்வுகளை எழுதாமல், அத்தகையவர்களைப் பார்த்து, அவர்களிடமே பொருட்கள் வாங்கி, அவர்களின் வெட்கத்தை அழகாய்த் தன் எழுத்தில் சிறைப்பிடிப்பவர்.

தன்னுடைய பெரும்பாலான பதிவுகளில் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை வார்ப்பார். நிறைய பயணிப்பவர். பயணிப்பதன் இனிமையை, அவ்விடங்களின் தகவல்களைத் தன் நண்பர்களுக்கு இலகுவான வார்த்தைகளில் வடிப்பவர்.

சமயங்களில் இவரின் எழுத்தில் கோயம்புத்தூர் வாசனை அடிக்கும். பெரும்பாலும் பேச்சுவழக்காய் மட்டுமே மாறிப்போன கொங்கு வட்டார வழக்கில் கோக்கப்பட்டு, அதில் சம்பவங்கள் அழகாய் மீட்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் சண்முக வடிவு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ தன் எழுத்தைக்கொண்டு வலியுறுத்தும் மனுஷி.

சண்முக வடிவின் ஃபேஸ்புக் பக்கம்: >https://www.facebook.com/shanmuga.vadivu.927?fref=ts

***
மோசஸ் யுவா இம்மானுவேல்

'மீம்ஸ், சினிமா, கிரிக்கெட், அரசியல்... நம்பி வாங்க, சந்தோஷமா போங்க' என்ற தன் அமர்க்களமான அறிமுகப் படலத்தை கச்சிதமாக உறுதி செய்கிறார் மோசஸ் யுவா இம்மானுவேல்.

அரசியலை மீம்களில் மட்டும் பரவவிடும் மோசஸ், சினிமாவையும் கிரிக்கெட்டையும் பதிவுகளால் பிரித்து மேய்கிறார். சினிமாவில் முக்கியமான அப்டேட்களை உடனுக்குடன் தனக்கே உரிய நகைச்சுவைத் தொனியுடன் வழங்குகிறார். கிரிக்கெட் போட்டிகளின்போது அரிய டேட்டாக்களையும் சுவாரசியமாகத் தருகிறார் மோசஸ்.

கிரிக்கெட் ஸ்கோர் தகவல்களுடன் இரண்டு, மூன்று வரி கருத்தைப் பதிவு செய்து விருப்பங்களை அள்ளுவதில் ஃபேஸ்புக் பதிவு வல்லுநராக கவனிக்க வைக்கிறார்.

உடனடி தகவல்களும் அது சார்ந்த கலாய்ப்புகளும் சரிவிகிதத்தில் கலந்திருப்பது இவரது ஃபேஸ்புக் பதிவுகளில் தனிச் சிறப்பு. சுமார் 10,000 பேர் பின்தொடர்வதில் இருந்தே இவரது பதிவுகளின் வல்லமையை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

மோசஸ் யுவா இம்மானுவேலின் ஃபேஸ்புக் பக்கம்: >https://www.facebook.com/moses.emmanuvel4

நாச்சியாள் சுகந்தி, கீதப்பிரியன் கார்த்திகேயன் வாசுதேவன் (மேல் இடது, வலது), மணி, மோசஸ் யுவா இம்மானுவேல் (கீழ் இடது மற்றும் வலது படங்கள்)

***

நாச்சியாள் சுகந்தி

கிறுக்கும் கிறுக்கி என்று முகநூலில் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் நாச்சியாள் சுகந்தி கவிதாயினி, ஊடகவியலாளர், சமூக சிந்தனையாளர் என்ற பன்முகங்கள் கொண்டவர்.

ஃபேஸ்புக் பக்கத்தில் முப்பரிமாணங்கள் காட்டி சிந்திக்க வைப்பது நாச்சியாள் ஸ்பெஷல். பெண் சுதந்திரம், அன்பு மயமாதல், நடப்பு அரசியலை விமர்சனத்துக்குள்ளாக்குதல் ஆகிய மூன்று அம்சங்களை பதிவு செய்வதை கடமையாகக் கொண்டு செயல்படுகிறார்.

"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான்… அய்யோ என்று போவான்… என்று பாரதியின் வரிகளைக் குறிப்பிடுகிறார். வழக்கம்போல சில முகநூல் பதிவர்களைப் போல பழமொழி, பொன்மொழி, கவிதைகளை பதிவு செய்யும் நபரா என்று நினைத்து விட வேண்டாம்.

அன்று ராம்மோகன ராவ் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள்.

நாச்சியாள் சுகந்தியின் அரசியல் குறித்த பார்வை அக்கறையுடன் வெளிப்படுவதையும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நாம் எப்போது அரசியல்மயமாவோம்?

ராமய்யாவின் குடிசையில் இருந்த 48 பேரும் கொளுத்தப்பட்டார்கள். இப்போது காவல்துறை உதவியுடன் சாதிக் கட்சிகள் இளைஞர்களை வெட்டி ரயில் தண்டவாளத்தில் போடுகிறது. விசாரணையை இழுத்தடிக்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்ததற்காவே விஷ்ணுப்பிரியா ஐபிஎஸ்-ஐ கொல்கிறது. சங்கரை பட்டப்பகலில் விதியில் ஓடஓட வெட்டிகிறது.

கூலி கேட்டதற்காக தாமிரபரணியில் அப்பாவிகளைக் கொல்கிறது. கீழவெண்மணி, தாமிரபரணி, உடுமலைப் பேட்டை – கொலைகள் தொடர்கின்றன. எப்போது நாம் அரசியல்மயமாவோம்?"- என்று எல்லோரையும் நோக்கி கேள்வி எழுப்புகிறார்.

அவ்வளவு காத்திரமான நபரா நாச்சியாள் என்று யோசிக்கத் தொடங்கினால் அவரின் கவிதை 'இல்லை' என்று சாட்சி சொல்கிறது.

நீராலானது உலகு என்றாய்

அன்பிலானது உலகு என்றேன்

குரோதங்களையும்

துரோகங்களையும்

நீ சந்தித்ததே இல்லையா

வினவுகிறாய்

குரோதங்களையும்

துரோகங்களையும்

பழிவாங்கல்களையும்

மூட்டை மூட்டையாக

சுமந்தவள் என்பதால்தான்

சொல்கிறேன்

அன்பிலானது உலகு

போடீ பைத்தியக்காரி என்கிறாய்

பைத்தியமே

அன்பினால் மட்டுமே சாத்தியம் என்கிறேன்

இப்போது மட்டுமல்ல; எப்போதும்...

இது மட்டுமா? பெண் சுதந்திரத்துக்காக ஓங்கி ஒலிக்கிறது அவரது ஒற்றைக் குரல். அதுகுறித்து அறிந்துகொள்ள ஆர்வமா? அதை நீங்கள் மேற்கொளாகக் கொண்டு செயல்பட விருப்பமா? இல்லை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்களா? முகநூல் பக்கம் க்ளிக் செய்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அவரின் ஃபேஸ்புக் பக்கம்: >https://www.facebook.com/natchimakal.suganthi

***

கீதப்பிரியன் கார்த்திகேயன் வாசுதேவன்

இவரின் முகநூலில் இடம்பெறும் நிலைத்தகவல்கள் எதிர்பாராத வகையிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன.

எப்போதாவது அவரை கவனிக்கும்போது அவர் இசையைப் பற்றி மட்டுமே அதிகம் பகிர்ந்துகொள்பவராகத் தெரிகிறார்... ஆனால் தொடர்ந்து கவனிக்கும்போதுதான் அவர் வித்தியாசமான பல தகவல்களைப் பரிமாறிக்கொள்பவராக இருப்பதை அறிய முடிகிறது. இசையைப் பொறுத்தவரை இளையராஜா, வாணி ஜெயராம் என எண்பதுகளை சிலாகிக்கிறார்.

மயிலை கபாலீஸ்வரர் கோயிலின் கோபுர அழகின் வண்ணப் பூச்சுக்களில் மனம் லயிக்கும் கீதப்பிரியன் 70களின் பிற்பாதியில் கோவையில் இருந்து உற்பத்தியான சுஜாதா கம்ஃபர்ட் மொபெட் பற்றி எழுதுவதோடு அக்காலத்தில் வெளிவந்த அந்த மொபெட் பத்திரிகை விளம்பரத்தையும் போஸ்ட் செய்கிறார்.

சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவைப் பற்றி எழுதுவதேயில்லை. மாறாக மலையாளப் படங்களிலேயே தனக்குப் பிடித்த படங்களை எழுதுகிறார். உலகப் படங்களில் தீராக் காதல் கொண்டுள்ள கீதப்பிரியனுக்கு இந்தோனேசிய எரிமலையின் சல்ஃபர் சுரங்கத்தில் வேலை தொழிலாளர்களைப் பற்றிய ஆவணப்படமான 'ஒர்க்கிங்மேன் டெத்' போன்ற படங்களை அறிமுகப்படுத்தி எதிர்பாரா ஆச்சரியங்களில் நம்மை மூழ்கடிப்பவராகவும் இருக்கிறார்.

அவரின் ஃபேஸ்புக் பக்கம்: >https://www.facebook.com/Geethappriyan?fref=ts&__mref=message_bubble

மணி எம்கே மணி

திரைக்கதை ஆசிரியர் மணி எம்கே மணி இணைய வெளியில் இப்போது மிகப் பிரபலம்.

ஒரு சினிமாவை எப்படி பார்ப்பது? சினிமாவின் மொழி என்ன? சினிமாவின் எந்த அம்சத்தை நுட்பமாகப் பார்க்க வேண்டும்? என்று சினிமா ஆர்வலர்களுக்கு, மாணவர்களுக்கு, உதவி இயக்குநர்களுக்கு மணி எம்கே மணியின் ஒவ்வொரு முகநூல் பதிவும் வகுப்பு எடுக்கிறது.

சினிமா துறையில் இருப்பவர்களுக்கும், சினிமாவுக்குள் செல்ல விரும்புவர்களுக்கும் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளி கெத்து காட்டுவதாகவும், அப்டேட் என்பதாகவும் காட்டிக்கொள்ளவே பயன்படுகிறது. ஆனால், அந்த இடைவெளியை அடித்து நொறுக்கி டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார் மணி எம்கே மணி.

இலக்கியம் சினிமா ஆக முடியுமா? என்ற கேள்வி தொன்றுதொட்டு தொடர்கிறது. அதற்கான பதில்களை ஸ்டேட்மென்ட்டாக தராமல் நடந்த சம்பவங்கள், வரலாறு மூலமாக சான்று பகர்ந்திருப்பது நம்பிக்கை ஊற்று.

பொதுவாக சினிமாவில் இருக்கும் ஜானர் பற்றி பேசும்போது ஆக்‌ஷன், க்ரைம் த்ரில்லர், ரோட் மூவி, ரொமான்டிக் என்று பிரிக்கப்படுவதுண்டு. அதை சும்மா ஒரு கோடு போட்டு குறிப்பிட்டால் போதாது. அதற்கான உள்ளடக்கத்தைப் பொறுத்துதான் அதை முடிவுசெய்ய வேண்டும். அப்படித்தான் அச்சம் என்பது மடமையடா எந்த மாதிரியான படம் என்ற பேச்சு எழுந்தது.

அப்போது மணி எம்கே மணியின் பதிவு ' 'ரோட்ல போயிட்டா அது ரோடு மூவியும் இல்ல. ஆணையும் பொண்ணையும் காட்டிட்டா அது லவ் ஸ்டோரியும் இல்ல''.

கமல் படங்களில் கமல்தான் எப்போதும் தெரிகிறார் என்பதுதானே பலரின் குற்றச்சாட்டு. அதற்கு மணி கொடுக்கும் விளக்கத்தைப் படித்தால் அந்த குற்றச்சாட்டில் கொஞ்சமும் உண்மையில்லை என்பது புரிந்துவிடும்.

கமல் குறித்த அந்தப் பதிவு:

''ஒரு நடிகன் ஒரு படத்தில் அவனாகவே இருப்பது புதிதல்ல. மிகப் பெரிய ஆளுமைகள் அப்படி இருந்து விளையாடி இருக்கிறார்கள். பெயர்களை அடுக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தான் முதல் இடங்களில் இருந்தார்கள். அப்படி கமல் படத்தில் கமல் இருப்பார். சு ராவும் ஜெ கே வும் தன் கதைகளில் இருப்பது போல. சப்பாணியாகவோ, நல்ல சிவமாகவோ, கிருஷ்ண சாமியாகவோ, சுயம்புலிங்கமாகவோ வேறு ஒரு ஆளாய் மாறுவதற்கு அவருக்கு சிரமமில்லை. அதை போல உச்ச பட்ச படங்களை உருவாக்குவது பற்றி அவர் அறியாதவரும் அல்ல. அவர் ஏன் இப்படி இருக்க வேண்டும் என்றால் அப்படி இருக்கிறது இந்த நிலம். எப்போதும் சொல்லுவது போல வெள்ளத்தனைய மலர் நீட்டம்.

ஒம்போது, பாப்பான், ஸ்த்ரீ லோலன், உளறுவாய் என்று அவர் பார்க்காத வசைகளே இல்லை.

ஆனால் பலரை போலவே எனக்கும் கூட சினிமாவில் நாற்புறமும் துழாவும் யத்தனம் அவரிடம் இருந்தே துவங்கியது. அவரை தாண்டி விட்டேன் என்கிற மூட நம்பிக்கையும் எனக்கு ஒரு போதும் வராது. சொல்லப் போனால் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.''

உதாரணத்துக்குதான் தமிழ்ப் படம், தமிழ் நடிகரைக் குறிப்பிட்டுள்ளேன். மற்றபடி மணியின் பதிவுகள் உலக சினிமா, மலையாள சினிமா என வேற லெவலில் ரசனையுடன், நுட்பத்துடன் தகவல்களை, சினிமா நுணுக்கங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

அவற்றைப் படித்தால் உங்களுக்கு சினிமா குறித்த இன்னொரு பார்வை விரிவது உறுதி. அந்த விரிவாக்கத்தை விரும்புவர் என்றால் அவரின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு விரைந்திடுங்கள்.

மணி எம்கே மணியின் ஃபேஸ்புக் பக்கம் >https://www.facebook.com/writermkmani?fref=ts



ஆர்.சி.மதிராஜ்

பக்கம் பக்கமாய் நீளும் கட்டுரைகளை இவர் எழுதுவதில்லை. வார்த்தைப் பூச்சுகளை உபயோகப்படுத்துவதில்லை. ஆனால் சின்னச் சின்ன வாக்கியங்களால், வாழ்வின் அழகியலை உணர்த்திவிடுவது மதிராஜுக்குக் கைவந்த கலை.

புத்தகங்களுக்கான வடிவமைப்புப் பணியில் உள்ள மதிராஜைக் கவிதைகளே வடிவமைத்துக் கொள்கின்றன. ''எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது; நிபந்தனையற்ற அன்பை சந்திக்க!'' என்ற வார்த்தைகளில் நம்மீது அன்பு செலுத்துபவர்களின் பிம்பம் தானாகவே விழுந்து விடுகிறது.

தோசை வட்டமாகத்தான் இருக்கவேண்டும் என்று எந்த அவசியமுமில்லை.... நீ ஊற்றித் தரவேண்டும் அவ்வளவுதான் என்பவரின் வரிகள் படிப்பவர் மனதில் ஒருசேர நெகிழ்வையும், மலர்தலையும் நிகழ்ச்சிச் செல்கின்றன. ஆர்.சி.மதிராஜின் கவிதைகள் ஆரவாரமில்லாமல் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தும் அற்புதங்கள்.

ஆர்.சி.மதிராஜின் ஃபேஸ்புக் பக்கம்: >https://www.facebook.com/rcmathiraj?fref=ts

***

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x