Published : 12 Oct 2014 11:38 AM
Last Updated : 12 Oct 2014 11:38 AM

ஓலே ஜோஹன் தால் 10

நார்வே சாப்ட்வேர் விஞ்ஞானி

கணினி மென்பொருள் தொழில்நுட்பத்தின் தந்தையர் என்று கருதப்படுபவர்கள் ஓலே ஜோஹன் தால் மற்றும் கிறிஸ்டன் நைகார்டு. இவர்களில் ஓலேவின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

# நார்வேயில் பிறந்தவர். படித்தது எண் கணிதம். கணினி தொழில்நுட்பம் கண்விழிக்கத் தொடங்கிய 1940-களின் மத்திய பகுதி அது. படிக்கும்போதே கணினி தொழில் நுட்பம் தொடர்பான நார்வேஜன் டிஃபன்ஸ் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.டி.ஆர்.இ) பகுதிநேரமாகப் பணிபுரிந்தார்.

# ஓலேவும் கிறிஸ்டன் நைகார்டும் இணைந்து கண்டு பிடித்த ஆரம்பகட்ட சூத்திரங்கள் கணினி மென்பொருள் பயன்பாட்டின் திசையையே மாற்றியது.

# ஓலே பணியாற்றிய என்.டி.ஆர்.இ. நிறுவனம் 1957-ல் ஃபெரான்ட்டி மெர்க்குரி கணினியை வாங்கியது. அப்போது மெர்க்குரிக்கு உயர்மட்ட லாங்வேஜ் என்று கருதப் பட்ட மெர்க்குரி ஆட்டோமேட்டிக் கோடிங் டிசைனை மேம்படுத்தினார் ஓலே.

# 1960-ல் மீண்டும் ஓலேயும் கிறிஸ்டன் நைகார்டும் இணைந்து ‘சிமுலா 1’ மற்றும் ‘சிமுலா 67’ உள்ளிட்ட தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்தனர். இன்றைய மென்பொருள் புரோகிராம்களின் கொள்ளுத் தாத்தாக் கள் அவை.

# ஓலேயும் நைகார்டும்தான் முதன்முதலில் கிளாஸ், சப் கிளாஸ், இன்ஹெரிடன்ஸ், டைனமிக் ஆப்ஜெக்ட் கிரியேஷன் ஆகிய மென்பொருள் கருத்துருக்களை மேம்படுத்தினர்.

# மென்பொருள் வடிவமைப்பு, புரோகிராமிங், மறுமுறை பயன்படுத்தக்கூடிய தன்மை, நம்பகத்தன்மை, மென்பொருள் குறியீடுகளை எழுதுவது ஆகியவற்றில் ஓலேயின் மென்பொருள் தொழில்நுட்ப ஆய்வுகள்தான் முதன்முதலில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தின.

# ஓலே நைகார்டு மேம்படுத்திய ஆப்ஜெக்ட் ஓரியன்டட் அணுகுமுறைதான் இன்றைய ஜாவா, சி++ போன்ற புரோகிராமிங் லாங்வேஜ்கள் உட்பட பல மென்பொருளுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

# பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது அப்போதைய கணினி விஞ்ஞானிகள் பலரும் கணினி கோட்பாடு சார்ந்த கடினமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், எளிய வழிகளில் தீர்வு காணவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் ஓலே. அப்படியே தீர்வும் கண்டார்.

# சக கணினி ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இவர் வெளியிட்ட ‘ஸ்ட்ரக்சர்டு புரோகிராமிங்’ புத்தகம் 1970-களில் மென்பொருள் தொழில்நுட்பத்தின் பாடப் புத்தகமாக விளங்கியது.

# கணினி உலகின் நோபல் பரிசாக கருதப்படும் ‘டர்னிங்’ (Turning) விருதை நைகார்டுடன் இணைந்து 2001-ல் பெற்றார். அடுத்த ஆண்டு ஜூனில் ஓலேவும், ஆகஸ்ட்டில் நைகார்டும் இறந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x