Last Updated : 09 May, 2017 03:28 PM

 

Published : 09 May 2017 03:28 PM
Last Updated : 09 May 2017 03:28 PM

அபூர்வ இரட்டை சங்கீத மழை

திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோயிலில் அண்மையில் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. அதனை ஒட்டி, தலைசிறந்த இசைக் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் உள் அரங்குகளில் செய்வது போலவே, கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள வெளி அரங்கிலும் சிறப்பான ஒலி, ஒளி ஏற்பாடுகளும், வந்திருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வசதியாக அமரும் வண்ணம் நாற்காலிகள் `பிரம்மாண்ட டிவி` திரை முன் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாலை மயங்கும் நேரத்தில் கடல் காற்று வீச இயற்கையான சூழலில், கச்சேரிகள் நடைபெற்றது தெய்வீகமானது.

இதில் டி.எம் .கிருஷ்ணா, விஜய் சிவா, சஞ்சய் சுப்ரமணியம், ஜெயஸ்ரீ வைத்தியநாதன் , பாம்பே ஜெயஸ்ரீ, அபிஷேக் ரகுராம் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பாம்பே ஜெயஸ்ரீ, அபிஷேக் ரகுராமின் நிகழ்ச்சி, இரட்டை சங்கீத மழை போன்று புதுமையாக இருந்தது.

இரட்டை சங்கீத மழை

பாடகர்கள் இருவர். ஒருவர் விதுஷி பாம்பே ஜெயஸ்ரீ. மற்றொருவர் வித்துவான் அபிஷேக் ரகுராம். வயலின் கலைஞர்கள் இருவர். ஒருவர் விட்டல் ராமமூர்த்தி. மற்றொருவர் எம்பார் கண்ணன். மிருதங்கமும் இருவர். ஒருவர் கணபதிராமன் . மற்றொருவர் அனந்தா ஆர். கிருஷ்ணன். கூடுதலாக தபலாவில் ஓஜஸ் ஆத்யா.

இப்படி பாடுபவர்கள் முதல் பக்கவாத்தியம் வரை எல்லாமே இரட்டை இளமை மயம். பாடல்கள் பாரம்பரியம் மாறாமல் இருந்தது சிறப்பு.

கம்பீர நாட்டையில் அமைந்த மல்லாரியுடன் நிகழ்ச்சி கம்பீரமாகத் துவங்கியது.

அடுத்து வந்தது ஒரு அருமையான தமிழ்ப்பாடல். “எங்கிருந்து வருவதோ ஒலி” என்ற அந்த தமிழ் பாடல் மென்மையாக கடல் காற்றில் கலந்து வந்தது அந்தப் பாடலை இரு மேதைகளும் இணைந்து அழகாக மோஹனம், சுத்த சாவேரி, மத்தியமாவதி ஆகிய ராகங்களில் ராக மாலிகையாக இசைத்தார்கள்.

அந்தப் பாடல் வரிகளிலேயே சொல்வதானால் “நாதமிது உருகுதே” என்றுதான் அதனைச் சொல்ல வேண்டும். அன்றைய நிகழ்ச்சித் தலைப்பு “குருவந்தனம்”. தனது குரு லால்குடி ஜெயராமன் பாடல்களை பாம்பே ஜெயஸ்ரீ தேர்ந்தெடுத்திருந்தது வெகு பொருத்தமாக இருந்தது.

ஜெயஸ்ரீயின் அருமையான சாருகேசி ஆலாபனையைத் தொடர்ந்து அபிஷேக்கின் ஆலாபனை சிறப்பாக அமைந்திருந்தது, நாளங்களில் எல்லாம் நாத இன்பவெள்ளம். இருவருமாக “ஆடமோடிகலதே “ என்ற ஆதி தாளத்தில் அமைந்த தியாகராஜ சுவாமிகளின் கிருதியை இசைத்தனர்.

எம்பார் கண்ணன் “கலதே”, என்ற இடத்தை மிகவும் அழுத்தத்தோடு இசைத்தார். இந்தப்பாடலுடன் சாருகேசியில் அமைந்த மற்றொரு பாடலான “குழல் ஊதும் அழகா கண்ணா” என்ற பாடலையும் இணைத்து நேர்த்தியாகப் பாடினார்கள் பாம்பே ஜெயஸ்ரீயும் அபிஷேக் ரகுராமும்.

“ஈச பாஹிமாம்” என்ற லால்குடி பஞ்சரத்னம் விறுவிறுப்பாக அடுத்து வந்தது. பின்னர் வந்த திருப்புகழ்.அப்படியே கேட்போரைக் கட்டிப்போட்டது என்றே சொல்லலாம். “குமர குருபர முருக சரவண” என்ற தொடங்கும் திருப்புகழ் ஒன்றுக்கு கணபதி ராமன் தனி ஆவர்த்தனம் மிகவும் நன்றாக இருந்தது.

மீண்டும் மற்றொரு திருப்புகழ். எல்லோருக்கும் தெரிந்த “ஏறு மயில் “ என்ற அந்தத் திருப்புகழிற்கு ஓஜஸ் ஆத்யாவின் தனி. மிகவும் நேர்த்தியான தபலா வாசிப்பு.அருமை.

அரிதினும் அரிதாக மேடையில் இசைக்கப்பட்ட லால்குடியின் பஞ்சரத்ன கிருதிகளில் காம்போஜியில் அமைந்த “மஹித ப்ரவ்ருத்த ஸ்ரீ” என்ற கீர்த்தனையின் சாஹித்யம் காதுகளில் என்றும் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும் என்றால் மிகையாகாது.

இதற்கு அனந்தா ஆர் கிருஷ்ணன் வாசித்தது அருமையான தனி. வயலின் கலைஞர்கள் இருவரும் ரசிக ப்ரியாவினை இசைத்தனர். இழைந்து இழைந்து வந்த அந்த இசை, இன்பத்தினைத் துய்க்கச் செய்தது.

இவ்வாறு ரசிகர்களை கந்தர்வ லோகத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டு “சர்வம் பிரும்ம மயம்” என்று முத்தாய்ப்பாகப் பாடி முடித்தனர் இருவரும். அன்றைய சங்கீதம் இன்ப சாகரமானது என்றால் மிகையில்லை.

ரசிகர்களுக்கு பெருவிருந்தாக நடந்த இந்த இசை நிகழ்ச்சிக்கு தக்கார் விஜய ரெட்டி தலைமையில், இணை ஆணையர் செயல் அலுவலர் த. காவேரி விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x