எம்ஜிஆர் 100 | 93 - சிறந்த கொடையாளி!

எம்ஜிஆர் 100 | 93 - சிறந்த கொடையாளி!
Updated on
2 min read

M.G.R. எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார். நடிகராக இருந்த ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!

சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற் காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார். பின்னர், 1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் விளையாட்டு மைதா னத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டு மல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.

இலங்கை பிரதமர் டட்லி சேனநாய காவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய் யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலை ஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.

1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!

‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.

இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்! பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!

லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித் தார். அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, கிழக்கு ஆப் பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!

நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு! 1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!

1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!

ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் தொடர்ந்து ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தைத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பின்னர், அரசியலில் அவர் தீவிரமாகிவிட்டதால் அப்படம் தயாரிக்கப்படவில்லை!

முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in