செல்மன் வேக்ஸ்மன் 10

செல்மன் வேக்ஸ்மன் 10
Updated on
2 min read

நோபல் பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்

ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற நுண்ணுயிரி ஆராய்ச்சியாளர் செல்மன் ஆபிரகாம் வேக்ஸ்மன் (Selman Abraham Waksman) பிறந்த தினம் இன்று (ஜூலை 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

ரஷ்யப் பேரரசின் (தற்போதைய உக்ரைன்) நோவா ப்ரிலூகா என்ற இடத்தில் யூதக் குடும்பத்தில் (1888) பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்ததும், கல்வி உதவித்தொகை பெற்று, விவசாயத்தில் பட்டப்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார்.

ரட்கெர்ஸ் கல்லூரியில் சேர்ந்து விவசாயத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1916-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பட்டப்படிப்பின்போது, மண் பாக்டீரியா துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

மண் நுண்ணுயிரியல் குறித்து இவர் எழுதிய நூல் 1922-ல் வெளிவந்தது. ரட்கெர்ஸ் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல், நுண்ணுயிரியல் துறைத் துணைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். மக்கும் தாவரங்கள் குறித்து 10 ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்து, ‘ஹ்யூமஸ்’ என்ற நூலை வெளியிட்டார். கடல்சார் பாக்டீரியாக்கள் குறித்த ஆய்வுகளை மேம்படுத்தினார்.

ரட்கெர்ஸில் நுண்ணுயிரியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். காசநோயை உண்டாக்கும் கிருமிகள் குறித்த ஆராய்ச்சியை தனது குழுவினருடன் இணைந்து 1932-ல் தொடங்கினார். இந்த நுண்ணுயிரிகள் மண்ணில் விடப்படும்போது மற்ற நுண்ணுயிரிகளால் அழிக்கப்படுவதைக் கண்டறிந்தார்.

ஒரு நுண்ணுயிரி மற்றொரு நுண்ணுயிரியை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் பிறகுதான், ஆன்டி பயாடிக்ஸ் குறித்த முறையான ஆராய்ச்சி தொடங்கியது. ‘ஆன்டிபயா டிக்ஸ்’ (எதிர்உயிரி) என்ற சொல்லை உருவாக்கியதும் இவர்தான்.

இவரது இந்த ஆராய்ச்சி பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டறிய வழிகோலியது. இவரது வழிகாட்டுதலில் ஆல்பர்ட் ஷாட்ஸ் என்ற ஆராய்ச்சி மாணவர், ஸ்டெப்டோமைசின் ஆன்டிபயாடிக் மருந்தை 1943-ல் கண்டறிந்தார். காசநோயை குணப்படுத்த ஸ்டெப்டோமைசின் பயன்படுத்தப்படலாம் என்றும் கண்டறியப்பட்டது.

ஸ்டெப்டோமைசின் மருந்து கண்டுபிடிப்புக்காக வேக்ஸ்மனுக்கு 1952-ல் மருத்துவம் அல்லது உடலியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு தவிர நிறைய விருதுகள் பெற்றார். ஜப்பான் பேரரசர் ஸ்டார் ஆஃப் ரைசிங் சன் விருது வழங்கினார்.

ஸ்டெப்டோமைசின், நியோமைசின் ஆகிய இரண்டும் எண்ணற்ற தொற்றுநோய்களை குணப்படுத்தக்கூடியவை என்று பின்னர் கண்டறியப்பட்டது. கறைபடியாத பெயின்ட், டிடர்ஜென்ட்களில் பயன்படும் என்சைம்கள், திராட்சைத் தோட்டங்களில் பூஞ்சைத் தொற்றைத் தடுக்கும் மருந்து ஆகியவற்றைக் கண்டறிந்தார்.

இதன்மூலம் கிடைத்த காப்புரிமை ராயல்டி தொகையில் பாதியைக் கொண்டு, தன் பெயரில் நுண்ணுயிரியல் அறக்கட்டளையை உருவாக் கினார். இதன் முதல் இயக்குநராகப் பணியாற்றினார். சுயசரிதை உட் பட 28 நூல்களை எழுதியுள்ளார். தனியாகவும், பிறருடன் இணைந் தும் 400-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மனிதகுல நல்வாழ்வுக்காக, பல மருந்துகளைக் கண்டறிந்த செல்மன் ஆபிரகாம் வேக்ஸ்மன் 85-வது வயதில் (1973) மறைந்தார். நுண்ணுயிரியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இவரது பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in